Sunday, 9 May 2021

வணக்க மாதம் : நாள் - 9

வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை

(பிரான்ஸ் - டவுல்)



பிரான்ஸ் நாட்டின் லோரெய்னில் உள்ள டவுல் என்னுமிடத்தில் இருக்கும் ஆலயத்திலுள்ள அன்னை மரியாவின் திருவுருவம் முன்பாக, ஹெல்வைட் என்ற ஒரு பெண்மணி சமீபத்தில் இறந்த அவரது கணவர் மற்றும் மகளின் ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காவும், தனது ஆறுதலுக்காகவும் செபம் செய்து கொண்டிருந்தார். நள்ளிரவில், மரியன்னை அற்புதவிதமாய் அப்பெண்மணிக்குத் தோன்றினார். அப்போது மரியன்னை அப்பெண்மணியிடம், அந்நகரின் நுழைவாயிலின் பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பாளராக இருக்கும் ரிம்பெர்ட் என்பவரைச் சென்று பார்க்கும்படியாகவும், நகரின் நுழைவாயில் வழியாக நுழைந்து மக்களின் வீடுகளுக்கு தீவைத்துவிட்டு, தப்பிக்க நினைத்து வருகிற எதிரிகளைக் குறித்து எச்சரிக்கும்படியாகவும் கட்டளையிட்டார்.

இக்காட்சிக்குப் பிறகு ஹெல்வைட் மிகவும் குழப்பமாக உணர்ந்தார். அவளுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ரிம்பெர்ட்டின் வீடும் இருந்ததால், அவள் அங்கு செல்வது என முடிவு செய்தாள். ஹெல்வைட் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தவுடன் இரவு ரோந்து பணியில் இருந்தவர்களை அங்கு கண்டாள்.  அவளுடைய காட்சியைக் குறித்து அவள் அவர்களிடம் சொன்னாள். ஆனால் அவர்களோ அவளைக் கேலி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் ஹெல்வைட் தேடிய ரிம்பெர்ட் வீட்டை நோக்கி அவளுடன் சென்றனர். 

ரிம்பர்ட்டிடம் ஹெல்வைட் தனது வருகையின் நோக்கத்தைக் கூறினார். அதற்கு ரிம்பர்ட், ‘எனக்கும் அதே காட்சி மற்றும் அதே எச்சரிக்கை கிடைத்தது. ஆனால் அன்னையின் திருவுருவச்சிலை இதன் வெளிப்பாடாக தனது கால்களை நகர்த்தும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

உடனே அனைவருமே ஆலயத்திற்குச் சென்றனர். அதைக் கேள்விப்பட்ட வேறு சிலரும் அதற்குள் அங்கே கூடிவிட்டனர். ஆனால் கன்னி மரியாவின் கால்கள் முன்பு போலவே திருவுருவத்தில் ஆடைகளின் மடிப்புகளுக்கு அடியில் மறைந்திருப்பதையே கண்டார்கள். எனவே புதிதாக வந்தவர்கள் கேலியும் கிணடலும் செய்யத் தொடங்கினர். 

சற்று நேரத்தில், கன்னி மரியாவின் முழு பாதமும் அவளது ஆடையின் மடிப்புகளுக்கு அடியில் இருந்து வெளியே தோன்றியது. உடனே அன்னைக்கு நன்றி செலுத்திய அவர்கள் எதிரிகளின் தாக்குதலை முறியடித்த நகரைக் காப்பாற்றினர். 

மரியன்னை அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கு நன்றியாக, அன்னையின்  திருவுருவச் சிலையில் வெளியே தெரியும் கால்களை மறைக்க வெள்ளி காலணி செய்து வைத்தனர். அன்றிலிருந்து அத்திருவுருவச்சிலை வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை என்று அழைக்கப்படுகிறது.  


திருவிழா நாள்: செப்டம்பர் 20

செபம்: வெள்ளிப் பாதம் கொண்ட எங்கள் அன்னையே! துன்பங்கள் எங்கள் வாழ்வை நெருங்கும் போதுஇ உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு நீர் ஓடோடி வந்து உதவிசெய்யும். ஆமென்.