மணிகளின் அன்னை
(பிரான்ஸ் - செயிண்டஸ்)
செயிண்ட்ஸ் நகரம் அமைந்துள்ள மேற்கு பிரான்சின் போய்ட்டூ-சாரண்டெஸ் பகுதிக்கு ஏராளமான வரலாற்று பின்னணி உள்ளது. முதலில் செயிண்ட்ஸ் நகரம் சரந்தே ஆற்றங்கரையில் அமைந்துள்ள செழிப்பான குடியேற்றமாக இருந்தது. ஒரு காலத்தில் ஜூலியஸ் சீசரின் கீழ் உரோமானியர்களால் கைப்பற்றப்பட்ட இந்த நகரம் மீடியோலனம் சாண்டோனம் என்று அறியப்பட்டது.
இந்த நகரம் அதன் பெயரான செயிண்ட்ஸ் என்பதனைப் பெறுவதற்கு பலர் இன்னும் பக்தியுடன் நம்புகின்ற ஒரு புராணக்கதை காரணமாக அமைந்திருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் படி, இயேசு கிறிஸ்துவின் சில சீடர்களுடன் மரியா சலோமி மற்றும் மேரி யாக்கோபு ஆகியோர் கி.பி 45 ஆம் ஆண்டில் எருசலேமிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் துடுப்பில்லாமல் ஒரு படகில் புறப்பட்டு, மத்தியதரைக் கடலின் குறுக்கே அதிசயமாக கொண்டு செல்லப்பட்டனர். அந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உருவாக்கி, செயிண்ட்ஸ் மேரிஸ் டி லா மெர் என்று அந்த இடத்தை அழைத்தனர்.
ஒரு முறை காணிக்கை அன்னையின் விழாவிற்கு முன்பாக, பிரான்சின் செயிண்ட்ஸ் கதீட்ரலில் மணிகள் தாங்களாகவே மிகவும் இனிமையாக அடிக்கத் தொடங்கின. இதைக் கேட்ட ஆலயப் பணியாளர்கள் ஓடிவந்து ஆலயத்தில் பார்த்த பொழுது, அந்த பேராலயத்தில் வணங்கப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் நினைவாக பல அறியப்படாத புதிய மனிதர்கள் ஒளிரும் மெழுகுதிரிகளைக் கையில் வைத்திருப்பதையும், புனித மரியன்னைக்கு புகழ்ப்பாடல்களைப் பாடுவதையும் கண்டனர்.
அவர்கள் பக்கத்தில் நெருங்கிய ஆலயப் பணியாளர்கள், தாங்கள் கண்ட அதிசயத்திற்கு சான்றாக அந்த புதிய மனிதர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த ஒளிரும் மெழுகுவர்த்திகளில் ஒன்றைக் கொடுக்கும்படி கெஞ்சினார்கள். அவர்களும் அதற்கு இசைந்து ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுத்தனர்.
மணிகளின் அன்னையின் நினைவாக அந்த அதிசய மெழுகுவர்த்தி, இன்று வரை அந்த பேராலயத்தில் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திருவிழா நாள்: பிப்ரவரி 9
செபம்: மணிகளின் அன்னையே! அதிசயங்களும் அற்புதங்களும் உமக்கு தாராளமே. உமது புகழையும் பெருமையையும் நாங்களும் பாட, எங்கள் வாழ்வில் நாங்களும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண உதவிடும். ஆமென்.