Tuesday, 11 May 2021

வணக்க மாதம் : நாள் - 11

 நெருப்பின் அன்னை

(இத்தாலி – ஃபோர்லி)



பிப்ரவரி 4, 1428 அன்று, இத்தாலி நாட்டிலுள்ள ஃபோர்லி என்னுமிடத்தில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சில நாள்கள் தொடர்ந்து எரிந்தது. 

தீ அனைத்தையும் அணைக்கப்பட்ட பின்னர், சாம்பல் மற்றும் இடிபாடுகளுக்கு இடையிலே பள்ளிக் குழந்தைகளால் பக்தியோடும், பாசத்தோடும் வணங்கப்பட்டு வந்த குழந்தை இயேசுவை கையில் சுமந்தபடியிருக்கும் மரியன்னையின் திருவுருவப் படத்தை மக்கள் கண்டுபிடித்தனர். 

தீப்பிழம்புகள் அன்னையின் திருவுருவத்தை தீண்டவில்லை. அதிசயமூட்டும் வகையில் மரியன்னையின் திருப்படமானது நெருப்பினால் எந்த பாதிப்பும் அடையாமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது. 

மூடிய அறையில் எரியும் தீப்பிழம்புகளுக்கு மேலே, சிதைவுறாத அன்னையின் திருவுருவப்படம் இருந்தது. நெருப்பு மற்ற அனைத்தையும் எரித்து சிதைத்தபோது, இத்திருவுருவத்தை மட்டும் எரிக்கவோ சிதைக்கவோ இல்லை. 

அதிசயங்களின் அதிசயம் என்று அன்னையின் இத்திருவுருவம் வணங்கப்பட்டது. இதோ, கன்னி மரியாவின் உருவம் ஒரு பீனிக்ஸ் பறவை போன்றதாய் நெருப்பையும் வென்று நிலைத்தது. 

இந்நிகழ்வு திருத்தந்தையின் தூதர் மற்றும் நகர ஆளுநர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மரியன்னையின் திருவுருவப் படத்தை பவனியாக அனைத்து மக்களுடன் சேர்ந்து, சாண்டா குரோஸ் பேராலயத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அது அனைவரின் பார்வைக்கும், வணக்கத்துக்கும் வைக்கப்பட்டது.

இன்றளவும் ஃபோர்லி நகரின் பாதுகாவலியாக நெருப்பின் அன்னையை மக்கள் கொண்டாடுகின்றனர். தங்கள் வீடுகளிலும் நெருப்பின் அன்னையின் சிலையையோ, திருவுருவப் படத்தையோ வைத்து வணங்க அவர்கள் மறக்கவில்லை. 



திருவிழா நாள்: பிப்ரவரி 4

செபம்: நெருப்பின் அன்னையே! வேதனைகளும் சோதனைகளும் எங்களை நெருப்பாய் புடமிடும்போது, உம்மைப்போலவே நாங்களும் அவற்றை வென்று இறை அருளில் நிறைவடைய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.