எசாயா
எசாயா 7:14
இன்றைய நாளின் சிந்தனை : எசாயா
இன்றைய நாளின் குறியீடு : வாளும், சுத்தியலும்
புழைய ஏற்பாட்டு இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் எசாயா. கிரேக்க மொழியில் எசாயா என்பதற்கு ‘யாவே மீட்பராக இருக்கிறார்’ என்று அர்த்தம். சுமார் கி.மு. எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இவரை, கடவுள் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து தன்னுடைய பணிக்காக அனுப்பினார். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’என்று கேட்ட கடவுளுக்கு, ‘இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்’ என்று எசாயா தன்னையே கடவுளுக்கு கையளித்தார்.
எசாயாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்களினம் தொடர்ந்து எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துக்களுக்கும் உள்ளாக நேரிட்டது. அவ்வேளையில் யூதர்களுக்கான நம்பிக்கை நங்கூரமாக இறைவாக்கினர் எசாயா திகழ்ந்தார். கடவுள் மீது நம்பிக்கை இழந்து, அவருக்கு பணியாமல் இருந்ததே இஸ்ரயேலின் துன்பங்களுக்கு காரணம் என்று எசாயா தெளிவாக எடுத்துரைத்தார். எனவே பாவங்களை விலக்கி பரிசுத்தமாய் வாழமுற்பட்டால் கடவுள் விடுதலை தருவார் என்பதையும் குறிப்பிட்டார்.
தன்னுடைய எழுச்சியூட்டும் சொற்களாலும், செயல்களாலும் இஸ்ரயேல் மக்களையும் தென் தலைவர்களையும் நேர்மையோடும், நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடுக்காமல் போனால் அழிவு காத்திருக்கிறது என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் மரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம் அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார். ‘கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவார். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்’ என்று மெசியாவின் பிறப்பை முன்னறிவிப்பு செய்தவர் எசாயா. இவ்வாறு மெசியாவின் வருகையை எப்போதும் எடுத்துரைத்ததோடு அல்லாமல், புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் பற்றியும் இறைவாக்குரைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் எசாயா சிறப்பாகப் பணியாற்றினார்.
இறைவனோடு இணைந்து வாழ்ந்தால் இன்பம் பிறக்கும் என்பதையும், இறைவனைவிட்டு விலகி வாழ்ந்தால் இன்னல்கள் பிறக்கும் என்பதையும் எசாயாவின் இறைவாக்கிலிருந்து புரிந்து கொள்ளலாம். கடவுளின் மகன் நமக்கு முழு விடுதலை தருவார் என்று நம்பி வாழவும் பாவத்தை விலக்கி பரிசுத்தமான பாதையில் நடக்கவும் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! மெசியாவின் வருகை, அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றும் என்பதை அறிந்திருக்கும் நாங்கள் எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் புதிய படைப்பாக உருமாற்றிட உம்மை வேண்டுகிறோம். எசாயாவைப் போன்று நாங்களும் நம்பிக்கையில் எப்போதும் நிலைத்திருக்கவும், வாழ்வில் பிறருக்கு நம்பிக்கையூட்டவும் எங்களுக்கு உமது அருளைத் தாரும். ஆமென்.