நோவா
தொடக்கநூல் 9: 13
இன்றைய நாளின் சிந்தனை : நோவா
இன்றைய நாளின் குறியீடு : பேழையும், வானவில்லும்;
முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால், பாவமாசு மனுக்குலத்தின் மீது படிந்தது. கடவுளிடமிருந்து விலகி நிற்கின்றோம் என்கிற கவலை மனிதருக்கு துளியும் இல்லாதிருந்தது. அத்தகைய சூழலில் ஏறக்குறைய கி.மு 2970 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்தான், நோவா என்கிற பழைய ஏற்பாட்டின் இஸ்ரயேல் குலமுதுவர். இவருடைய காலத்தில் மண்ணகம் பாவச் சேற்றில் மூழ்கிக் கிடந்தது. அதுவரை இல்லாத அளவிற்கு பாவ நாட்டம் மண்ணில் பெருகி இருந்தது. குற்ற உணர்வு உலகில் எவருக்குமே இல்லை. கடவுள் முதன் முதலாகதான் நன்மையாகப் படைத்த உலகைத் தீமை ஆதிக்கம் செய்வதைப் பார்த்து வருத்தமுற்றார். உலகை முழுவதுமாக அழித்துவிட முடிவெடுத்தார்.
காரிருள் கவ்வியவானில் கண்சிமிட்டும் ஒற்றை விண்மீனாய் இருந்தவர் நோவா. இவருடைய வாழ்க்கையை வாசிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். ஏனென்றால் ‘நோவா கடவுளோடு நடந்தார்’ என்று தொடக்கநூல் 6:9 சொல்கிறது. தம் காலத்தவருள் நோவா மட்டுமே நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார் என்ற செய்தி நோவாவினுடைய தூய்மையான வாழ்வுக்குச் சான்று. கடவுள் பார்வையில் நோவாவின் வாழ்வு புனிதமாக இருந்ததால், உலகின் அழிவிலிருந்து நோவாவை மட்டும் காப்பாற்ற கடவுள் திருவுளமானார். எனவே 3 தளங்கள் கொண்ட, 300 முழம் நீளம், 50 முழம் அகலம், 30 முழம் உயரம் கொண்ட பேழை ஒன்றைச் செய்யும்படி கடவுள் நோவாவுக்கு கட்டளையிட்டார்.
அதன்படி நோவாவும் பேழையைச் செய்து தன் குடும்பத்தோடும், மண்ணின் உயிரினங்களின் வகைகள் அனைத்திலும் சோடியாகவும் எடுத்து பேழைக்குள் சென்றார். பின்னர் கடவுள் நாற்பது இரவும், நாற்பது பகலும் மண்ணுலகில் பெருமழை பெய்யச் செய்தார். இவ்வாறு மண்ணுலகை, பெரும் வெள்ளப்பெருக்கு அழித்தது. இதில் நோவா மட்டும் கடவுளால் காப்பாற்றப்பட்டார். பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிய நோவா ஆண்டவருக்கு பலி பீடம் ஒன்றைக் கட்டி, பலி ஒப்புக்கொடுத்தார். அப்போது ஆண்டவர் நோவாவுடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கிறார். அதன்படி இனி உலகை வெள்ளம் அழிக்காது என்று வாக்களித்த கடவுள் அதன் அடையாளமாக தன் வில்லை மேகத்தின் மீது வைத்தார்.
கடவுளின் முன் மாசற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு தரும் அறை கூவல். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக இருந்தால் கடவுள் நம்மைக் கண்டிப்பாகக் காப்பார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு நடக்க உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! நோவாவைப் போன்று குற்றமற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இம்மண்ணில் வாழ எங்களுக்கு உதவும். வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் எப்போதும் உம் கரம் பற்றி நடக்கச் செய்தருளும். நீரே எங்களைக் காக்கும் பேழையாக இருந்தருளும். உம்மில் மட்டுமே எங்களுக்கு புதுவாழ்வு என்ற நம்பிக்கையைத் தரும் உடன்படிக்கையின் வானவில்லை எங்கள் வாழ்விலும் வைத்தருளும். ஆமென்.