Saturday, 18 July 2020

புனித நீர்

புனித நீர்    ( தீர்த்தம் )





பாரம்பரியமாக, நமது கத்தோலிக்க தேவாலயங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் புனித நீரின் (தீர்த்தம்) தொட்டிகளை வைத்திருக்கிறோம். இதன் பயன்பாடு பழைய ஏற்பாட்டின் யூத தூய்மைச் சடங்குகளின் நடைமுறைகளுக்கு ஒத்திருக்கிறது. லேவியர் புத்தகம் உடலோடு தொடர்புடைய “அசுத்தத்தை” அகற்ற, தண்ணீரைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான தூய்மைச் சடங்குகளை  பரிந்துரைத்தது. (காண்: லேவியர் 12-15). 

யூதர்களின் தூய்மைச் சடங்கில் மிகவும் முக்கியமான இருவகையான செயல்பாடுகள் இருந்தன. முதலாவதாக, தண்ணீரில் முழு உடலோடு முழ்கி எழுதல்: ‘அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும் அவனது தீட்டு அகலும்’. (லேவி 15:13). இரண்டாவதாக, கைகளைக் கழுவுதல்: ‘மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன். ஆண்டவரே உம் பலிபீடத்தை வலம் வருவேன்’. (திபா 26:6).

யூத மரபுகளின் பின்புலத்தில் பார்க்கையில் ஒரு நபர் ஆலயத்திற்குள் நுழைவதற்கும், இறைவேண்டல் மற்றும் தியாகம் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும் முன்பு தண்ணீரில் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டார். இந்த காரணத்திற்காக, எருசலேம் ஆலயத்தில் குருக்களின் முற்றத்தில் ஒரு படுகை இருந்தது. அது தண்ணீரால் நிரப்பப்பட்ட ஒரு வெண்கலப் படுகை. இங்கேதான் குருக்கள் அருகிலுள்ள பலிபீடத்தில் பலியிடுவதற்கு முன்பு தங்கள் கைகளையும் கால்களையும் தூய்மைப்படுத்தினர். ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு குளித்தார்கள், யூதச் சடங்குகளில் பரிந்துரைக்கப்பட்ட பிற தூய்மைச் சடங்குகளுக்கு தேவையான தண்ணீரையும் அங்கிருந்தே எடுத்தார்கள். 

பாவத்திலிருந்து நாம் மனந்திரும்புதலின் அடையாளமாகவும், தீமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்காகவும், நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுவதற்காகவும் ஆகிய முக்கியமான மூன்று காரணங்களுக்காக ஆலயங்களின் நுழைவாயிலில் புனித நீரால் நிரப்பப்பட்ட தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 

                                     

1. மனந்திரும்புதலின் அடையாளம்

பாவத்திலிருந்து மனந்திரும்புதல் தண்ணீரால் கழுவப்படுவதோடு அடையாளப்படுத்தப்படுவதை திருப்பாடல் 51 பிரதிபலிக்கிறது: “கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும். உறைபனியிலும் வெண்மையாவேன்.” (திபா 51: 2-3,7). (ஈசோப் என்பது தண்ணீரைத் தெளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய புல் வகை). 

இயேசுவின் காலத்தில் யோர்தான் ஆற்றில் புனித திருமுழுக்கு யோவான் வழங்கிய திருமுழுக்கு  அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்தது. பாவத்திலிருந்து மனந்திரும்புதலையும், தூய்மைப்படுத்தப்படுதலையும் குறித்துக்காட்டுவதற்கான வெளி அடையாளச் சடங்காகவும் தண்ணீரால் கழுவப்படுவது அமைந்திருந்தது.  



இந்த செயல்பாடுகள் நம்முடைய திருப்பலி கொண்டாட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருப்பலியின் தொடக்கத்தில் வரும் மனத்துயர் வழிபாட்டில், புனித நீருக்கு ஆசீர் வழங்குதல் மற்றும் இறை மக்கள் மீது புனித நீரைத் தெளித்தல் ஆகியவை இடம் பெறும். அருள்பணியாளர் புனித நீரை இறைமக்கள் மீது தெளித்தவாறு மக்களிடையே செல்லும்போது, அவர்கள் 51 ஆம் திருப்பாடலை பாடுவது வழக்கமாக இருக்கிறது.  இப்பாடலைப் பாடுவதன் வழியாக இறைமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாவத்திலிருந்து மனந்திரும்புதலை அறிக்கையிடுகிறார்கள்.  

2. பாதுகாப்பின் அடையாளம்

புனித நீர் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. திருப்பலி நூலில் தண்ணீரை ஆசீர்வதிப்பதற்கான செபத்தில், அருள்பணியாளர் இவ்வாறு செபிக்கிறார்: 

‘ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உடல், ஆன்ம வாழ்வு அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமும் நீரே. இத்தண்ணீரைப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் பாவங்களுக்;கு மன்னிப்பு வேண்டவும், எல்லா நோய்களையும் மாற்றானின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து உமது அருளின் பாதுகாப்பை அடையவும் நாங்கள் இத்தண்ணீரை நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றோம். ஆண்டவரே உமது இரக்கத்தின் உதவியால் உயிருள்ள தண்ணீர் எங்களில் பொங்கி எழுந்து மீட்பு அளிப்பதாக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்தோடு உம்மை அணுகிவந்து எங்கள் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வரும் இடர்கள் அனைத்தையும் விலக்குவோமாக’.

இவ்வாறு புனித நீர் ஆபத்துகள், தீமைகள் ஆகியவற்றிலிருந்து நம்மைக் பாதுகாக்கவும், காப்பாற்றவும் வல்லமை உடையதாக இருக்கிறது. 

3. திருமுழுக்கின் நினைவூட்டல்

புனித நீர் நாம் பெற்ற திருமுழுக்கினை நமக்கு நினைவுபடுத்துகிறது. தூய்மைமிகு மூவொரு இறைவனாகிய தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம் தலையின் மீது தண்ணீர் ஊற்றும்போது பிறப்புநிலைப் பாவத்திலிருந்தும், செயல்வழிப் பாவங்களிலிருந்தும் நாம் விடுவிக்கப்படுகிறோம். புனிதமாக்கும் அருளால் தூண்டப்பட்டு, திரு அவையில் உறுப்பினராக இணைக்கப்படுகிறோம். கடவுளின் மகன் அல்லது மகள் என்கிற உரிமையைப் பெறுகிறோம். 

புனித நீரால் நம்மீது நாம் சிலுவையின் அடையாளத்தை வரையும் போது, அது நம்முடைய திருமுழுக்கை நினைவூட்டுகிறது. அத்தோடு சாத்தானையும், அவனுடைய எல்லா செயல்களையும், அவனுடைய வெற்று வாக்குறுதிகளையும் நிராகரிப்பதும், இறைவன் மீதான நமது நம்பிக்கையை அறிக்கையிடுவதுமான நம்முடைய திருமுழுக்கு வாக்குறுதிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்காக அழைக்கப்படுகிறோம் என்பதையும் இதன் வழியாக நினைவில் கொள்கிறோம். இதன்மூலம் நம்முடைய செபங்களையும் பலிகளையும் கடவுளுக்கு தூய்மையான மற்றும் நேர்மையான இதயங்களுடன் வழங்க முடியும். 



நம்முடைய ஆண்டவரின் திருவிலாவிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வழிந்தோடியது, திருமுழுக்கு மற்றும் நற்கருணை ஆகிய இருபெரும் அருளடையாளங்களைக் குறிக்கின்றது. இதனால் புனித நீரை எடுத்து நம்மீது சிலுவையின் அடையாளத்தை வரைந்துகொள்வது நமது திருமுழுக்கை நமக்கு நினைவுபடுத்தி, தூய்மைமிகு நற்கருணையைப் பெறுவதற்கு நம்மைத் தயாரிக்கிறது. 

புனித அவிலா தெரசா தனது சுயசரிதையான ‘அவளுடைய வாழ்க்கை’ (தி புக் ஆஃப் ஹெர் லைப்) என்னும் புத்தகத்தில் புனித நீரின் சக்தியைப் பற்றி எழுதி உள்ளார்: “ஒரு முறை அருவருப்பான வடிவத்தில் பிசாசு என் இடது பக்கத்தில் எனக்குத் தோன்றினான். அவன் என்னிடம் பேசினான். அப்போது குறிப்பாக நான் அவனது வாயைப் பார்த்தேன். அது என்னை மிகவும் பயமுறுத்தியது. அவனது உடலில் இருந்து நிழல் இல்லாத பிரகாசமாக இருந்த ஒரு பெரிய தீச்சுடர் வெளிவந்தது. அவன் என்னை பயமுறுத்தும் விதத்தில் பேசியபடியே என்னைப் பிடித்தான். நான் அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்தேன், ஆனால் அவன் என்னை மீண்டும் அவனுடைய கைகளுக்குள்ளாக பிடித்துக்கொள்வான். நான் மிகுந்த அச்சத்தால் நடுங்கி, என்னால் முடிந்தவரை என்னை நானே ஆசீர்வதித்துக்கொண்டேன். அவன் மறைந்துவிட்டான். ஆனால் உடனே அவன் மீண்டும் திரும்பி வந்தான். இவ்வாறு இரண்டு முறை நடந்தது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அங்கே கொஞ்சம் புனித நீர் இருந்தது. நான் அதை அவன் நின்றிருந்த அந்த திசையில் தெளித்தேன்;. அவன் மீண்டும் திரும்பி வரவில்லை. ... பிசாசுகள் மீண்டும் திரும்பி வராமல் தப்பி ஓடுவது,  புனித நீரைக் காட்டிலும் வேறொன்றுக்கும் இல்லை என்பதை நான் அடிக்கடி அனுபவிக்கிறேன்." (அவளுடைய வாழ்க்கை - அத்தியாயம் 31). 

இந்த புனித நீரின் மாபெரும் சக்தியை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. இத்தகைய ஒரு புனித துறவியின் சாட்சியத்தின் அடிப்படையில், நாம் தேவாலயத்திற்குள் நுழைந்து வெளியேறும்போது புனித நீரால் நம்மை ஆசீர்வதித்துக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், நம்முடைய வீடுகளிலும் புனித நீரை வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்வோம். 

Thursday, 16 July 2020

புனித கார்மேல் அன்னை


புனித கார்மேல் அன்னை விழா (ஜூலை -16)





ஜூலை 16, 1251 அன்று, புனித கார்மேல் அன்னை புனித சைமன் ஸ்டாக் எனும் கார்மேல் சபைத் துறவிக்கு காட்சியளித்து, அவருக்கு பழுப்பு நிற உத்திரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “மிகவும் அன்பான மகனே! இதைப் பெற்றுக்கொள். இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.” 

பழுப்பு நிற உத்திரியத்தின் ஒரு முனையில் ‘இந்த உத்திரியத்தை அணிந்து இறந்த எவரும் முடிவில்லா நெருப்பை அனுபவிக்க மாட்டார்கள்’ என்ற வார்த்தைகளும், மறுமுனையில் ‘இதோ மீட்பின் அடையாளம்’ என்ற வார்த்தைகளும் அதில் தைக்கப்பட்டுள்ளன. 

ஒரு பொது நிலையினர் பழுப்பு நிற உத்தரியத்தை அணியக்கூடிய நிபந்தனைகள் வேறுபடுகின்றன: ஒரு நபர் ஒரு கார்மேல் துறவற சபையின் மூன்றாம் அங்கத்தினராக வரிசை சேரலாம், அல்லது அவர்கள் முறையான குழுவில் சேராமல் பழுப்பு உத்தரியத்தின் பக்தி கூட்டமைப்பில் சேர்க்கப்படலாம். மேலும், ஒரு அருள்பணியாளரால் ஆசீர்வதிக்கப்பட்டால் எவரும் பழுப்பு நிற உத்தரியத்தை அணியலாம். ஒழுங்கின் முறைப்படி உறுதியளித்தாலும் இல்லாவிட்டாலும், உத்தரியம் அணிபவர்கள் கார்மேல் சபையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள்.

கடவுளின் மக்களில் எந்தவொரு உறுப்பினரும் கவனக்குறைவாக உத்தரியத்தை அணிவதை நினைத்துப் பார்க்க முடியாது. வெறுமனே, உண்மையான பக்தி இல்லாமல் உத்தரியத்தை கண்மூடித்தனமாக அணிவது, ஒருவன் படைவீரனுக்குரிய சீருடையை அணிந்துகொண்டு, அந்த சீருடைக்கு தேவைப்படும் நடத்தை நெறியை புறக்கணிப்பது போன்றது ஆகும். எனவே பழுப்பு நிற உத்தரியத்தை அணிபவர், உத்தரியத்துடன் தொடர்புடைய நேர்மையான கடமைகளை நிறைவேற்ற வேண்டும். 

உத்திரியம் ஒருபோதும்; ஓர் அதிர்ஷ்டக் கயிறோ அல்லது மந்திரக் கயிறோ அல்ல. மாறாக, நாம் இறைவனுடைய தாயிடம் நெருங்கி வந்தால், அவர் அளிக்கும் சிறப்பு விண்ணக அருளுக்கு நம் இருதயங்களைத் திறந்து, பூமிக்குரிய பாவத்திலிருந்தும் சோதனையிலிருந்தும் அவளுடைய பாதுகாப்பிற்கு நம்மை ஒப்புக் கொடுத்தால் அது நம்முடைய இரட்சிப்பின் அடையாளமாக மாறும். ஆகவே உத்தரியம் மரியாவின் இடைவிடாத, தாய்க்குரிய பராமரிப்பின் வெளிப்புற அடையாளம். இது மரியன்னை பக்தி முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய அருட்கருவி.  

பக்தியுடன் பழுப்பு நிற உத்தரியத்தை அணிந்துகொண்டு, அதை நம் இருதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்வது, கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றவும், புனிதர்களின் வீர நல்லொழுக்கத்துடன் நாமும் வாழவும் நம்மைத் தூண்டுகிறது. மேலும் இது நற்பண்புகளின் மீதான நமது உறுதிப்பாட்டின் நிலையான நினைவூட்டலாகும் இருக்கிறது. 

பழுப்பு உத்தரியம் அன்னையின் இரக்கத்தின் உன்னத ஆடை. இது நம் விண்ணகத் தாயிடமிருந்து நமக்கு கிடைத்த பரிசு. ஆம், உத்தரியம் மரியாவின் அன்பு பரிசு. நம்மை அன்னையின் உன்னத பாதுகாப்பில் ஒப்படைத்து, நம் மீட்பின் உறுதியை அவள் கைகளில் நாம் தருகிறோம். 

புனித கன்னி மரியாவுக்கான உண்மையான இந்த பக்தி முயற்சியானது அவர் மீது நாம் கொண்டிருக்கும் மூன்று விடயங்களைக் கொண்டுள்ளது: வணக்கம், நம்பிக்கை மற்றும் அன்பு. உத்தரியத்தை அணிவதன் மூலம், நாளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அவளை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம் என்று அவளிடம் சொல்கிறோம்.

கடவுளை தந்தை என்று அழைக்க நம் ஆண்டவர் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தது போல, புனித கன்னி மரியா உத்தரியத்தின் மதிப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார். நாம் அதை ஒரு அமைதியான செபமாகப் பயன்படுத்தும்போது, நம் அன்னை தனது தெய்வீக மகனின் புனித இருதயத்திற்கு நம்மை ஈர்க்கிறார். எனவே, உத்தரியத்தை கையில் பிடித்திருப்பது நல்லது. உத்தரியத்தை கையில் வைத்தவாறு செபிக்கப்படும் ஒரு செபம் சிறந்த செபமாகவே அமையும். குறிப்பாக சோதனையின் போது தான் கடவுளின் தாயின் சக்திவாய்ந்த பரிந்துரை நமக்கு அதிகமாகத் தேவை. உத்தரியம் அணிந்தவர், இந்த அமைதியான பக்தியில் தூய கன்னியை அழைத்தவாறு, சோதனையை எதிர்கொள்ளும்போது தீய ஆவி முற்றிலும் சக்தியற்றதாகிவிடுகிறது. 

‘நீ என்னுடைய பரிந்துரையை வேண்டியிருந்தால், நீ ஒருபோதும் அத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்க மாட்டாய்’ என்று அன்னையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களில் ஒருவரான முத்திபேறுபெற்ற ஆலன் டி லா ரோச்சிற்கு நம் அன்னை கூறினார். 

Wednesday, 15 July 2020

உத்தரியம்

பழுப்பு உத்தரியம் - கேள்விகளும் பதில்களும் 





பழுப்பு உத்தரியம் அணிபவர்களுக்கு மரியன்னை அளித்த வாக்குறுதி என்ன? 

சைமன் ஸ்டாக் என்ற கார்மல் சபைத் துறவிக்கு காட்சியளித்த புனித கார்மேல் அன்னை பழுப்பு நிற உத்தரியத்தைக் கொடுத்து இவ்வாறு கூறினார்: “இந்த பழுப்பு உத்தரியத்தை அணிந்தவாறு யார் இறந்தாலும் அவர்  முடிவில்லாத நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார். இது மீட்பின் அடையாளம், ஆபத்தில் ஒரு பாதுகாப்பான கேடயம், அமைதியின் உறுதிமொழி மற்றும் உலகம் முடியும் வரை எனது சிறப்பு பாதுகாப்பு.”

பழுப்பு உத்தரியம் பற்றிய புனித மரியன்னையின் வாக்குறுதியைப் பெறுவதற்கு தேவையான நிபந்தனைகள் யாவை?

1. உத்தரியத்தின் பொருள், நிறம் மற்றும் வடிவம் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் சரியாகக் கடைபிடிக்கப் படவேண்டும். (செவ்வக வடிவத்தில் 100 விழுக்காடு பழுப்பு கம்பளி இருக்க வேண்டும்)
2. ஓர் அருள்பணியாளர் மூலம் உத்தரியத்தை அணிய வேண்டும்.
3. உத்தரியத்தை தொடர்ந்து அணிந்துகொள்ள வேண்டும்.
அன்னையின் வாக்குறுதியைப் பெற்றிட சிறப்பு செபங்கள் அல்லது நல்ல செயல்கள் எதுவும் இல்லை. உத்தரியம் என்பது ஓர் அமைதியான செபமுறை. இது புனித கன்னி மரியாவுக்கு ஒருவரின் முழுமையான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. உத்தரியம் என்பது ஒரு பக்தி முயற்சி. இதன் மூலம் நாம் அன்னையை வணங்குகிறோம், அவளை நேசிக்கிறோம், அவளுடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைக்கிறோம், மேலும் பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் மூலம் இந்த விடயங்களை ஒவ்வொரு நாளும் அன்னையிடம் அறிவிக்கிறோம்.

பழுப்பு உத்தரியத்தை யாரெல்லாம் அணியலாம்?

கத்தோலிக்க நம்பிக்கையாளர்கள் அனைவரும் அணிந்துகொள்ளலாம். முதல் நற்கருணைக்குப் பிறகு குழந்தைகள் உத்தரியம் அணிவிக்கப்படுவது நம்மிடையே வழக்கம். கைக்குழந்தைகள் கூட உத்தரியம் அணிவிக்கப்படலாம். 

பழுப்பு உத்தரியத்தை யார் மூலம் அணிந்துகொள்ள வேண்டும்?

எந்தவொரு அருள்பணியாளரும் உங்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கலாம். முந்தைய காலத்தில் கார்மல் சபை அருள்பணியாளர்களுக்கு மட்டுமே நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியம் அணிவித்து தங்கள் கார்மல் சபையின் மூன்றாம் அங்கத்தினராக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இச்சடங்கைச் செய்ய செய்ய வேறு எந்த அருள்பணியாளருக்கும் சிறப்பு அனுமதி தேவைப்பட்டது. இருப்பினும், இந்த பக்தி கத்தோலிக்க திரு அவை முழுவதும் இப்போது பரவலாக பரவியுள்ளது, ஆகவே இப்போது திரு அவை அனைத்து அருள்பணியாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பழுப்பு உத்தரியத்தை அணிவிக்கும் சடங்கை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்ன?

பழுப்பு உத்தரியத்தை அணிந்துகொள்வதன் வழியாக, ஒரு நபர் தானாகவே பழுப்பு உத்தரியத்தின் கூட்டமைப்பில் உறுப்பினராகிறார். பழுப்பு உத்தரியத்தின் இணக்கத்தன்மை என்பதன் பொருள் என்னவென்றால், உத்தரியம் அணிவதால் நாம் கார்மெல் ஆன்மீக குடும்பத்தோடு இணைக்கப்படுகிறோம். அதாவது கார்மேல் துறவற சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக மாறுகிறோம். ஏனென்றால் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகளின் அங்கி ஆகும். இதனால் கார்மேல் சபைத் துறவிகள் செய்யும் அனைத்து செபதவங்கள், பக்தி முயற்சிகள் ஆகியவற்றில் நமக்கும் பங்கு உண்டு. 

(முன்பு ஒரு காலத்தில் இவ்வாறு உத்தரியம் அணிந்து தன்னை கார்மேல் சபையின் மூன்றாம் நிலை அங்கத்தினராக இணைத்துக்கொள்ளும் ஒருவரின் பெயரை பதிவேட்டில் பொறிப்பது வழக்கம். ஆனால் இப்போது இது இனி நடைமுறையில் இல்லை. இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், பழுப்பு உத்தரியம் ஓர் உலகளாவிய பக்தியாக உருப்பெற்றுள்ளது.) 

பழுப்பு உத்தரியத்தின் நன்மைகளைப் பெறுவதற்கு அதை எவ்வாறு அணிய வேண்டும்?

அதனை தோள்பட்டைக்கு மேல் கழுத்தைச் சுற்றிய வண்ணம், ஒரு பகுதி நம் மார்பின் மீது தொங்கும் வண்ணமும், மறுபுறம் பின்புறத்தில் முதுகின் மீது தொங்கும் வண்ணமும்  அணிய வேண்டும். இரண்டு பகுதிகளையும் முன் அல்லது பின்புறத்தில் சேர்த்து அணிந்துகொள்ளக் கூடாது.

கம்பளி ஒவ்வாமை இருந்தால் உத்தரியத்தை எப்படி அணிவது?
ஒருவருக்கு கம்பளி கடுமையான ஒவ்வாமையாக இருந்தால் அல்லது அதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால், அவர் கம்பளி உத்தரியத்தை தன் ஆடைக்கு மேல் அணியலாம். அல்லது கம்பளி உத்தரியத்தை பிளாஸ்டிக்கில் கவருக்குள் வைத்தும் அணியலாம். இவ்வாறு இருக்கும்போது அதன் ஒரு பக்கம் இயேசுவின் தூய்மைமிகு இருதயத்தின் படமும், மறு பக்கம் நம் அன்னையின் படமும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

உத்தரியத்தில் கம்பளிதான் பயன்படுத்த வேண்டுமா?

ஆம். பருத்தி, பட்டு மற்றும் வேறு எந்த பொருளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

உத்தரியத்தில் கயிறுக்கு பதிலாக ஒரு சங்கிலியைப் பயன்படுத்தலாமா?

பயன்டுத்தலாம். ஆனால் உத்தரியம் கம்பளியால் ஆனதாக மட்டுமே இருக்க வேண்டும். 

உத்தரியம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்?

இது செவ்வக அல்லது சதுரமாக இருக்க வேண்டும். இது வட்டமாக, நீள்வட்டமாக அல்லது பலகோணமாக இருக்க கூடாது.

ஒருவர் வேறு நிறத்தில் உத்தரியத்தினை அணியலாமா?

பல்வேறு பக்தி முயற்சிகளுக்காக வேறு சில வண்ணங்களிலும் உத்தரியம் திரு அவையில் பயன்படுததப்படுகிறது. உதாரணமாக, நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைவுகூறும் வகையில் சிவப்பு உத்தரியம் அணியப்படுகிறது. இருப்பினும், அடிப்படையில் உத்தரியம் என்பது கார்மேல் சபைத் துறவிகள் அணியக்கூடிய துறுவற ஆடையின் சிறிய அடையாளமே.  எனவே அவர்களின் துறவு அங்கி பழுப்பு நிறத்தில் இருப்பதால், பழுப்பு நிறமே எப்போதும் உத்தரியத்துக்கு ஏற்ற சரியான நிறமாக கருதப்படுகிறது. இருப்பினும், கருப்பு கம்பளியும் திரு அவையால் அனுமதிக்கப்படுகிறது.


எப்போதும் உத்தரியத்தை அணிய வேண்டுமா அல்லது அதை கழற்றலாமா?

வாக்குறுதியைப் பெறுவதற்கு, உத்தரியத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். உத்தரியம் அணிவதன் மூலம், புனித கன்னிக்கு நம்முடைய அர்ப்பணிப்பபையும் மற்றும் பக்தியையும் காட்டுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் வசதிகளுக்கு ஏற்ப அதை எடுத்துவிடுவதில் நம் அன்னை மகிழ்ச்சியடையவதில்லை. ஆக, உத்தரியத்தை  அணிவதன் மூலம் நாம் அன்னையின் மீது கொண்டிருக்கும் அன்பையும், நம்பிக்கையும் அறிக்கையிடுகிறோம். 


குளிக்கும் போது உத்தரியத்தை கழற்றலாமா?

ஆம். கழற்றிக் கொள்ளலாம். 


ஒரு புதிய உத்தரியம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், மீண்டும் அருள்பணியாளரிடமிருந்துதான் அதை அணிந்துகொள்ள வேண்டுமா?

இல்லை. உங்கள் உத்தரியம் தேய்ந்துவிட்டால் அல்லது உடைந்திருந்தால், நீங்கள் இன்னொன்றைப் பெற்று அதை அணிந்துகொள்ள வேண்டும். ஆசீர்வாதம் மற்றும் அணிவித்தல் புதிய உத்தரியத்திற்கு இன்னும் செல்லுபடியாகும், ஏனெனில் ஆசீர்வாதம் முக்கியமாக உத்தரியத்தை அணியும் நபருக்கே வழங்கப்படுகிறது.


சனிக்கிழமை சலுகை (சாபாத்தின் சலுகை) என்றால் என்ன?

திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு நம் அன்னை ஒரு காட்சியின் போது அளித்த வாக்குறுதி இது. உத்தரியத்தை பக்தியுடன் அணிந்தவாறு இறக்கும் ஒருவரை, அவர் இறந்தபின்னர், குறிப்பாக மரணத்திற்குப் பின் வரும் முதல் சனிக்கிழமையன்று நரக நெருப்பிலிருந்து நம் அன்னை விடுவிப்பார். ‘ஓர் அக்கறையுள்ள தாயாக, அவர்கள் இறந்த பிறகு சனிக்கிழமையன்று நான் உத்தரிக்கும் நிலைக்கு இறங்குவேன். அவர்களை விடுவித்து நிலையான வான் வீட்டில் சேர்ப்பேன்." (திருத்தந்தை 22 ஆம் யோவானுக்கு சொல்லப்பட்ட தூய கன்னி மரியாவின் வார்த்தைகள்). இந்த சனிக்கிழமை சலுகை 1322 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் அறிவிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. மீண்டும் 1908 ஆம் ஆண்டில் திருத்தந்தையால் உறுதியான ஒப்புதல் அளிக்கப்பட்டது.


சனிக்கிழமை சலுகையைப் (சாபாத்தின் சலுகை) பெறுவதற்கான தேவைகள் யாவை?

1. பழுப்பு உத்தரியத்தை தொடர்ந்து அணிய வேண்டும்.
2. வாழ்க்கையில் ஒருவரின் நிலைக்கு ஏற்ப கற்பைக் கடைபிடிக்க வேண்டும்.
3. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இறைச்சியைத் தவிர்ப்பது அல்லது ஓர் அருள்பணியாளரின் அனுமதியுடன் புனித செபமாலையின் 5 மறையுண்மைகளை தினமும் செபிக்க வேண்டும்.