Sunday, 21 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்!

யோவான் 12: 20-33



ஒவ்வொரு விதையிலும் ஒரு காடு அடங்கியிருக்கிறது எனச் சொல்வார்கள். விதைகள் விருட்சங்களாகும் ஆற்றல் பெற்றவை. விதைகள் தங்களை இழக்கத் தயாராகும்போது மட்டுமே தங்களுள் ஒளிந்திருக்கும் விருட்சங்களை வெளியுலகுக்கு வெளிக்காட்ட முடியும். விதைக்க மனமில்லாமல் அறுக்க மட்டும் ஆசைப்படுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அறுவடை செய்ய ஆசை வரும் முன்னதாக, அதற்காக விதைத்திருக்க வேண்டும் அல்லவா! 

விதையாய் பூமியில் விழுவது என்பது தன் சுயத்தை அழிக்க தயாராவதைக் குறிக்கிறது. தன்னுடைய நிறம், உருவம், எடை என்று அனைத்தையும் இழக்க முன்வரும் விதை மட்டுமே, தனக்குள் ஒளிந்திருக்கும் விருட்சத்தை வெளிப்படுத்தும். தன்னை அழித்துக்கொள்ள விரும்பாத விதை விருட்சமாய் ஒருபோதும் மாறுவதில்லை. இன்று விருட்சங்கள் வான் நோக்கி உயர்ந்து நிற்கின்றன என்றால் சில விதைகள் தங்களை மண்ணில் விழச் செய்தன என்பதே உண்மை. மண்ணில் விழுந்த விதைகள் மண்ணோடு சமரசம் செய்துகொண்டு மக்கிப்போகாமல், மண்ணோடு போராடி மண்ணைக் கிழித்து மறுபிறவி எடுப்பதால் விருட்சங்கள் இன்று விண்ணை முட்டி நிற்கின்றன.   

இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமை மணி உருவகத்தைக் குறித்து பேசுகிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்று இயேசு போதிக்கிறார். தன்னுடைய மாட்சிக்குரிய பாடுகளையும் இறப்பையும் குறித்தே இயேசு இவ்வாறு பேசினார். கோதுமை மணியைப் போன்று தானும் மண்ணில் விழுந்தால் மட்டுமே மீட்பு என்னும் விளைச்சலை இம்மானுடம் அறுவடை செய்ய முடியும் என்பது இயேசுவுக்கு நன்கு தெரியும். எனவே இயேசு தன்னையே மண்ணுக்குள் புதைத்திட தயாராகின்றார். 

இயேசு என்னும் கோதுமை மணி தன்னை அழித்துக்கொண்டதால் இன்று இறையாட்சி என்னும் மாபெரும் விருட்சம் கொண்டாடப்படுகிறது. ஒரு விதை மடியும்போது மட்டுமே ஒரு காட்டின் உயிர்ப்பு சாத்தியப்படுகிறது. மடிவது ஒரு விதை. எழுவது ஒரு காடு. அழிவது ஒரு விதை. ஆவது ஒரு விருட்சம். விழுவது ஒரு விதை. எழுவது ஒரு வனம். ஆம், நாம் மடிந்தாலும், அழிந்தாலும், வீழ்ந்தாலும் நமக்குள் இருக்கும் இயேசுவை மீண்டும் மீண்டும் உயிர்க்கும்படி செய்வோம். 

மண்ணுக்குரியவை அழிவுறும்போது மட்டுமே விண்ணுக்குரியவை நமக்குள் பிறக்கின்றன. சாவுக்குரியவை நீங்கும்போது மட்டுமே வாழ்வுக்குரியவை நமக்குள் வாசம் வீசுகின்றன. மனிதருக்குரியவை மடியும்போது கடவுளுக்குரியவை நமக்குள் உயிர்க்கின்றன. ஆகவே, விதையாய் விழுவது வீணாய் போவதில்லை. அது விருட்சமாய் நம்மை ஒருநாள் எழச்செய்யும் என்ற நம்பிக்கை வளர்ப்போம். நாமும் இயேசுவைப் போன்று விருட்சமாய் எழுந்திட விதையாய் விழுந்திடுவோம்! 


Saturday, 20 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நியாயத்தின் பக்கம் நிற்போம்!

யோவான் 7:40-53



நாம் வாழும் உலகில் நல்லோர் குறைந்து வருகின்றனர் என்றும், தீயோர் பெருகி வருகின்றனர் என்றும பல நேரங்களில் கவலை கொள்கிறோம். நல்லோர் எண்ணிக்கையில் குறைந்து போவதற்கு தீயோரும் அவர்களின் தீச்செயல்களும் மட்டும் காரணம் அல்ல. மாறாக நல்லோரின் பக்கம் நிற்கத் துணிவில்லாத, நல்லோருக்காக பேசும் பலமில்லாத, முதுகெலும்பில்லாத பொதுப்பட்ட பெரும்பான்மையான மனிதர்களால் என்பதே உண்மையிலும் உண்மை. நியாயம் தோற்றுப்போகும்போதும். உண்மை ஊனப்படுத்தப்படும்போதும், நன்மை நசுக்கப்படும்போதும் இவ்வுலகம் காக்கும் கள்ள மௌனமே நல்லவர்களின் நாடியை உடைக்கும் முக்கிய காரணியாகும். 

நியாயம் வெல்ல வேண்டும், நேர்மை போற்றப்பட வேண்டும், உண்மை உயர்வு பெற வேண்டும் என்பதெல்லாம் பெரும்பான்மையான பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கக் கூடியவை. ஆனால் நியாயம் வெல்லவும், நேர்மை போற்றப்படவும், உண்மை உயர்வு பெறவும் நான் என்ன செய்துள்ளேன் என்பதை எல்லோரும் கேட்டுப் பார்க்கும்வரை தீமையும் ஓயாது. நன்மையும் விடியாது. கள்ள மைளனம் கலைவதும், கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலம் முடிவதும், கையாளாகாத தனம் முடிவுறுவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். 

இன்றைய நற்செய்தியில் இயேசுவை ஒழித்துக்கட்டும் நோக்கில் சதிவலை பின்னும் தலைமைச் சங்கத்தினரைப் பார்க்கிறோம். இயேசுவைக் கைது செய்துவர காவலர்களை அனுப்புகின்றனர். ஆனால் காவலர்களோ இயேசுவின் பேச்சைக் கேட்டபிறகு, அவரைக் கைது செய்யாமல் வருகின்றனர். நியாயத்தின் வாசனையை இயேசுவிடம் பார்த்தனர் காவலர்கள். அநியாயத்தையும், அக்கிரமத்தையும் மொத்தமாய் கொண்டிருந்;த தலைமைச் சங்கத்தினருக்கு நியாயத்தின் நறுமணம் வீசிய இயேசுவைப் பிடிக்கவில்லை. ஆனால் பரிசேயருள் ஒருவரான நிக்கதேம் என்பவர் தலைமைச் சங்க கூட்டத்தில் இயேசுவின் பக்கம் நின்று பேசுகிறார். அவர் நியாயத்தை முன்நிறுத்தி பேசுகிறார். ஆளை அல்ல அவர் தரப்பு நியாயத்தையே கவனத்தில் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை தருகிறார். நியாயம் எங்கிருந்தாலும் அதன் பக்கம் நிற்பதே மேன்மக்களுக்கு அழகு என்று உணர்ந்த நிக்கதேம் இயேசுவின் பக்கம் இருக்கும் நியாயத்திற்காக தன் குரலை எழுப்புகிறார். 

நியாயத்திற்கு எதிராகப் பேசுவதும், நியாயத்திற்காகப் பேசாமல் இருப்பதும் ஒன்றுதான். அநியாயம் ஆட்டம் போடும்போது, அதட்டிப் பேசாமல் அரண்டுபோய் நாம் நிற்கும் நேரங்கள் எல்லாம், நியாயம் நம்மால் தோற்கப்படும் நேரங்கள் என்பது இன்றாவது நமக்கு உரைக்கட்டும். காவலர்களைப் போலவும், நிக்கதேமைப் போலவும் கள்ள மௌனம் கலைத்து நியாயம் உரைப்போம். நியாயத்தின் பக்கம் நிற்பது இயேசுவின் பக்கம் நிற்பது எனப் புரிந்து செயல்படுவோம். இனி எப்போதும் நம் வாழ்வில் நாம் நியாயத்தின் பக்கம் நிற்போம்!


Friday, 19 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!

மத்தேயு 1:16,18-21,24



மனித வாழ்வில் கனவுகள் முக்கியமானவை. கனவும் வாழ்வும் பிரிக்க முடியாதவை. வாழ்க்கையில் கனவும் அக்கனவை நனவாக்கிடும் ஆற்றலும் இருந்தால் வாழ்வில் வசந்தம் நிச்சயம் மலரும். கனவுகள் காணாத மனிதரும் இல்லை. மனிதர்கள் கண்டிராத கனவுகளும் இல்லை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கனவிலேயே வாழ்வினைக் கடந்தவர்களும் உண்டு. கனவை நனவாக்கிட வாழ்வில் கடைசிவரை உழைத்து உயர்ந்தவர்களும் உண்டு. கனவில் வாழ்வது அல்ல, கனவை நனவாக்க வாழ்வதே மனிதருக்கு அழகு. 

மனிதர்கள் தங்களுக்காக கனவுகள் காண்பார்கள். மகான்கள் பிறருக்காக கனவுகள் காண்பார்கள். பொதுவாக தங்கள் வாழ்வின் ஏற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் மனிதர்களின் கனவுகள் அமையப்பெறுவதுண்டு. தன்னுடைய சுக துக்கங்களையும், விருப்பு வெறுப்புகளையும், ஆசைகளையும் அடிப்படையாக வைத்து மனிதனின் கனவுகள் உருப்பெறுகின்றன என்பதே எதார்த்தம். நம்முடைய மூளை எவற்றை அதிகம் சிந்திக்கிறதோ அதுவே நம்முடைய கனவுகளில் பிரதிபலிக்கும் என்று சொல்வார்கள். அதிக அழுத்தம்பெற்ற எண்ணங்களும் சிந்தனைகளும் கனவுகளில் வெளிப்படும். பயமே சிந்தையாக இருந்தால் அச்சுறுத்தும் கனவுகளும், தோல்வியே எண்ணமாக இருந்தால் தோற்கடிக்கப்படும் கனவுகளும், மகிழ்ச்சியே எண்ணமாக இருந்தால் மகிழ்ச்சிக்குரிய கனவுகளும் வருவதுண்டு. எதை அதிகம் நம்முடைய எண்ணம் ஆக்கிரமிக்கிறதோ அதுவே கனவுகளில் வெளிப்படும். 

இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்பு தன்னுடைய வாழ்வில் ஒரு மாபெரும் கனவு காண்கிறார். அது இறைவனின் தூதரை அவருக்கு அறிமுகப்படுத்திய கனவு. இறைத்தூதரின் வார்த்தைகளை கேட்கச் செய்த கனவு. பிறருக்காக வாழப் பணித்த கனவு. அடுத்தவரை அன்புடன் ஏற்றக்கொள்ளத் தூண்டிய கனவு. மனைவியாக மரியாவை ஏற்று வாழப் பணித்த கனவு. தன்னுடைய ஆசைகளை விடுத்து ஆண்டவரின் ஆசைகளைக் கைக்கொண்டு வாழ அழைத்த கனவு. 

புனித யோசேப்பு தனக்காக கனவு கண்டவர் அல்ல. கடவுளின் விருப்பத்தை கனவாக கண்டவர். ஆம், கடவுளையும் அவரின் கட்டளையையும் விருப்பத்தையுமே அதிகம் நாடியதாலும், சிந்தித்ததாலும் அவருடைய கனவும் கடவுளின் விருப்பத்தை அவருக்கு சொல்வதாகவே அமைந்திருந்தது. அவரைப்போன்று நாமும் கடவுளை நம் கண்முன் கொண்டு வாழப் பழகும்போது நம்முடைய கனவுகளும் கடவுளின் விருப்பங்களை நமக்கு வெளிப்படுத்தும் சிறப்புக்குரியவையாக  அமையும். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு கடவுளின் கனவுக்கு உயிர் கொடுத்தார். கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்திய அவருடைய கனவுகளை நனவாக்கிடவே காலம் முழுவதும் வாழத் துணிந்தார். அவரின் வழியில் நாமும் கடவுளின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம்!