Thursday, 20 May 2021

வணக்க மாதம் : நாள் - 20

 குளத்தின் அன்னை

(ஜோன் - பிரான்ஸ்)



குளத்தின் அன்னை என்பது வேலார்ஸில் உள்ள ஓச்சே பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஓர் ஆலயம் ஆகும். இது பர்கண்டியில் டிஜோனில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. 

1435 ஆம் ஆண்டில் ஜூலை 2 ஆம் தேதி குழந்தை இயேசுவை சுமந்த கன்னி மரியாவின் புதைக்கப்பட்ட சிலை இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. இது முற்றிலும் கல்லால் ஆனது. முஸ்லீம் படையெடுப்பின் போது அங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அதிசயமான இச்சிலையை நிறுவுவதற்காக புனித ஆசீர்வாதப்பர் சபை துறுவிகளால் இங்கு முதலில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது. குளத்தின் அன்னை என்று மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருத்தலம் விரைவில் இப்பகுதியின் முக்கிய ஆலயமாக மாறியது. பலர் இத்திருத்தலத்திற்கு திருயாத்திரையாகச்;கு சென்ற பல பிரபலமானவர்கள் இருந்தனர். அத்தகையோருள் புனித பிரான்சிஸ் சலேசியாரும் ஒருவர். இவரே குளத்தின் அன்னையிடம் மன்றாட ஒரு செபத்தையும் உருவாக்கினார்.

புனித ஆசீர்வாதப்பர் துறுவற சபை மடமும் இந்த ஆலயமும் 1791 இல் பிரெஞ்சு புரட்சியின் கத்தோலிக்க எதிர்ப்பு பயங்கரவாதத்தின் போது இடிக்கப்பட்டன. துறவு மடத்தின் இடத்தில் ஒரு கல் சிலுவை பின்னர் அதன் நினைவாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் குளத்தின் அன்னையின் திருவுருவச் சிலையானது பக்கத்திலிருந்த பங்கின் குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இந்த குளத்தின் அன்னையின் அதிசய சிலையின் ஆலயம் நிரந்தரமாக வேலார்ஸ் ஆலயத்திற்கு மாற்றப்பட்டதோடு, அது 1861 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டது.

திருவிழா நாள்: நவம்பர் 7

செபம்: குளத்தின் அன்னையே! எங்களுடைய வாழ்வு புதைந்து போனாலும் மீண்டும் உம் தயவால் புதுப்பிக்கப்படவும், உடைந்து போனாலும் மீண்டும் உம் பரிவால் உருப்பெறவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 19 May 2021

வணக்க மாதம் : நாள் -19

 பாதுகாப்பின் அன்னை

 (ஓவர்லூன் - ஹாலந்து)



இரண்டாம் உலகப் போரின் போது,  ஹாலந்தின் அர்ன்ஹெமுக்கு தெற்கே 30 மைல் தொலைவில் நிஜ்மெகனுக்கும் வென்லோவிற்கும் இடையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளஓவர்லூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாதுகாப்பின் அன்னை மரியா என்கிற தலைப்பு உருவானது.

ஜெர்மானியப் படைகள் ஹாலந்தைக் கைப்பற்றிய பின்னர், ஏராளமான இளம் டச்சுக்காரர்கள் ஜெர்மனியர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும், கொல்லப்படுவதிலிருந்தும் தப்பிக்க ஓடி ஒளிந்தனர். அந்த இளைஞர்களில் பலர் ஓவர்லூனில் ஒரு மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். ஓவர்லூனில் ஒரு மறைந்திருந்த அந்த அகதிகளில் பலர், மரியன்னை அவர்களை அங்கு பாதுகாப்பாய் இருப்பதற்கு உதவினால் அவர்கள் அன்னைக்கு ஓர் ஆலயத்தை அங்கு எழுப்புவதாக மரியன்னைக்கு வாக்குறுதியளித்தனர். 

ஓவர்லூனை விடுவிப்பதற்கான போரானது நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் இராணுவத்திற்கும் இடையில் 1944 செப்டம்பர் 30 முதல் 18 அக்டோபர் வரை நடந்தது. பெரும் இழப்புகளைச் சந்தித்த பின்னர், போரின் விளைவாக ஓவர்லூன் நகரத்தை ஜெர்மன் தன் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது. 

போர் முடிந்ததும், நாட்டில் அமைதி திரும்பி வந்ததும், ஓவர்லூனில் பதுங்கி இருந்த டச்சுக்கார இளைஞர்கள் நன்றியுணர்வோடு ஒன்று கூடி வாக்குறுதியளிக்கப்பட்டபடியே ஓர் ஆலயத்தை ஓவர்லூனில் கட்டி, அதை பாதுகாப்பின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தனர். 

1945 ஆம் ஆண்டில், பிரபல சிற்பி பீட் வான் டோங்கன் மரியாவை சித்தரிக்கும் ஒரு சிறந்த படத்தை உருவாக்கினார். அதில் இரண்டு இளைஞர்கள் மரியன்னையின் அங்கியின் உள்ளே பாதுகாப்பாய் மறைந்திருக்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திருவிழா நாள்:  ஜூலை 22

செபம்: பாதுகாப்பின் அன்னையே! எங்களுடைய வாழ்வில் அச்சுறுத்தல்களும், ஆபத்துக்களும் எங்களைச் சூழும் வேளைகளில் எல்லாம் நீரே எங்களுக்கு பாதுகாப்பாய் இருந்தருளும். ஆமென். 


Tuesday, 18 May 2021

வணக்க மாதம் : நாள் -18

 மகிழ்ச்சியான செய்தியின் அன்னை

 (பிரான்ஸ் - லெம்ப்ட்ஸ்)



டிசம்பர் 23, 1563 அன்று, லூகோனின் ஆயர் ஜான் பாப்டிஸ்ட் டியர்செலின் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவுக்கு இந்த ஆலயம் நேர்ந்தளிக்கப்பட்டது. ‘சீர்திருத்தத்தின்’ தலைவர்களால் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த மதக் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த முதல் ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. பிரான்சில் நடைபெற்ற மதப் போர்களுக்கு மத்தியிலும் இத்திருத்தலத்திற்கான பக்தர்களின் வருகை தடையின்றி அதிகரிக்கவே செய்தது. ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக குழந்தைகள் கன்னி மரியாவிடம் தங்கள் புதுநன்மைக்குப் பிறகு கிறிஸ்தவ நம்பிக்கையில் வேரூன்றும் வரம் கேட்டு இங்கு வருவது வழக்கமாயிருந்தது. 

பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகர கொந்தளிப்பால் ஆலயம் கலை இழந்தது. அரசு ஆலய வழிபாடுகளை முடக்கியது. ஆனால் பயங்கரவாதத்தின் போதும் சிறைவாசம் மற்றும் மரண பயம் கூட கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை அச்சுறுத்தவில்லை. 1793 ஆம் ஆண்டு வரையிலான சில திருமணங்கள் மற்றும் திருமுழுக்குகளின் பதிவேட்டில் இருந்து, திருமுழுக்கு மற்றும் திருமணங்கள் போன்றவை இரகசியமாக அங்கு நடத்தப்பட்டுள்ளது பெரும் வியப்பே. 1818 ஆம் ஆண்டில் ஒரு கடுமையான தொற்றுநோய் பிரான்ஸ் நாட்டை அழித்தது. கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் தங்கள் ஆயரின் அனுமதியுடன், மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் திருத்தலத்திற்கு பவனியாகச் சென்று, கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த திருவிழாவை அங்கு கொண்டாடுவதாக உறுதி எடுத்தனர். அவ்வாறே பவனியும் நடந்தது. கடவுள் விரைவில் தொற்றுநோயையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.

லெம்ப்ட்ஸ் பிரான்சின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாகும். அக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த, பொருளாதார நிலையில் மிகவும் ஏழையாக இருந்த ஒரு சிறுவன்  மகிழ்ச்சியான செய்தியின் அன்னையின் ஆலயத்திற்கு தவறாமல் தினமும் வருகை தரத் தொடங்கினான். பிரெஞ்சுப் புரட்சிக்கு பிந்தைய பிரான்சின் சிதைவில் அவனுடைய வாழ்க்கையும் மிகவே போராடிக்கொண்டிருந்தது. அவன் கத்தோலிக்க நம்பிக்கையை அதிகமாக வைத்திருந்தான். வளர்ந்த பிறகு ஒரு கத்தோலிக்க குருவாகவும், நியூ மெக்ஸிகோவின் முதல் பேராயராகவும் அச்சிறுவன் மாறினான். அச்சிறுவனின் பெயர் ஜான் பாப்டிஸ்ட் லாமி. 

திருவிழா நாள்: பிப்ரவரி 19

செபம்: மகிழ்ச்சியான செய்தியின் அன்னையே! எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் நாங்கள் நாள்தோறும் நம்பிக்கையில் வளர்ச்சியடையவும், அதன் பயனாக மகிழ்ச்சியின் செய்திகளைப் பெற்று இன்புற்றிருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.