Thursday, 16 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 16

செக்கரியாவும், எலிசபெத்தும்



லூக்கா 1:13

இன்றைய நாளின் சிந்தனை : செக்கரியாவும், எலிசபெத்தும்

இன்றைய நாளின் குறியீடு: செபிக்கும் கைகள்


யூதேய நாட்டில் ஏரோது அரசனாக, இருந்த காலத்தில் அபியா வகுப்பைச் சேர்ந்தவர் செக்கரியா என்ற குரு. இவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்து. இவர் ஆரோன் வழிமரபைச் சார்ந்தவர். இவர்கள் கடவுளின் பார்வையில் நேர்மையாளர்களாய் இருந்தார்கள். கட்டளைகளுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இவர்களுக்கு முதிர்ந்த வயதிலும் குழந்தை இல்லை. எலிசபெத்து கருவுற இயலாதவராக இருந்தார். யூத வழக்கப்படி பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்கள் என்று நம்பப்பட்டது. 

குருத்துவப் பணிமரபின்படி திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவதற்கு சீட்டுக் குலுக்கிப் போடப்படும். இந்த முறை அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. இவர் தூயகத்தில் தூபம் காட்டும் நேரத்தில் மக்கள் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் என்னும் கடவுளின் தூதர் தூப பீடத்தின் வலப்பக்கம் நின்றவாறு அவருக்கு தோன்றினார். செக்கரியா மற்றும் அவருடைய மனைவி எலிசபெத்த் ஆகியோரின் வேண்டுதல் கடவுளால் கேட்கப்பட்டது என்றும், கடவுள் இவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்றும் கூறினார். 

ஆனால் செக்கரியாவோ அதை நம்பி ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டினார். எனவே அவருடைய நா கட்டப்பட்டு, பேச்சற்றவராக இருக்கும்படி செய்யப்பட்டார். சைகைகள் வழியாகவே அனைவரிடமும் உரையாடி வந்தார். பின்பு வானதூதர் சொன்னபடியே எலிபெத்தும் கருவுற்றார். இச்செய்தி வானதூதர் வாயிலாக அவருடைய உறவினர் மரியாவுக்கும் சொல்லப்பட்டது. மரியா வந்து ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கி பணிவிடை செய்தார். எலிசபெத்தும் தன் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு யோவான் என்று பெயரிட்டனர். செக்கரியாவின் நாவும் கட்டவிழ்ந்து பேசத்தொடங்கினார். 

கடவுளால் இயலாதது ஒன்றும் இல்லை என்று துணிவுடன் நம்பிட நம்மை செக்கரியா மற்றும் எலிசபெத்தின் வாழ்க்கை அழைக்கிறது. நாமும் கூட இவர்களைப்போல கடவுளின் முன்பு நேர்மையானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வாழும்படி இவர்கள் நமக்கு முன்மாதிரி காட்டுகிறார்கள். கடவுளின் பணியைச்செய்து, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றிட தீர்மானம் எடுத்து வாழத்தொடங்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மால் எல்லாம் ஆகும் என்பதை நாங்கள் நம்புகின்றோம். அவ்வப்போது எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நம்பிக்கைக் குறைபாடுகளை நீரே நீக்கியருளும். நாங்களும்கூட செக்கரியாவையும், எலிசபெத்தையும் போல பிரச்சனைகளுக்கும், குறைபாடுகளுக்கும் மத்தியில்கூட உமக்கு மட்டுமே என்றும் பணிசெய்து வாழ வரம் தாரும். ஆமென்.

Wednesday, 15 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 15

எசாயா


எசாயா 7:14

இன்றைய நாளின் சிந்தனை : எசாயா

இன்றைய நாளின் குறியீடு : வாளும், சுத்தியலும்


புழைய ஏற்பாட்டு இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் எசாயா. கிரேக்க மொழியில் எசாயா என்பதற்கு ‘யாவே மீட்பராக இருக்கிறார்’ என்று அர்த்தம். சுமார் கி.மு. எட்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இவரை, கடவுள் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்து தன்னுடைய பணிக்காக அனுப்பினார். ‘யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?’என்று கேட்ட கடவுளுக்கு, ‘இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்’ என்று எசாயா தன்னையே கடவுளுக்கு கையளித்தார். 

எசாயாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்களினம் தொடர்ந்து எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துக்களுக்கும் உள்ளாக நேரிட்டது. அவ்வேளையில் யூதர்களுக்கான நம்பிக்கை நங்கூரமாக இறைவாக்கினர் எசாயா திகழ்ந்தார். கடவுள் மீது நம்பிக்கை இழந்து, அவருக்கு பணியாமல் இருந்ததே இஸ்ரயேலின் துன்பங்களுக்கு காரணம் என்று எசாயா தெளிவாக எடுத்துரைத்தார். எனவே பாவங்களை விலக்கி பரிசுத்தமாய் வாழமுற்பட்டால் கடவுள் விடுதலை தருவார் என்பதையும் குறிப்பிட்டார். 

தன்னுடைய எழுச்சியூட்டும் சொற்களாலும், செயல்களாலும் இஸ்ரயேல் மக்களையும் தென் தலைவர்களையும் நேர்மையோடும், நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடுக்காமல் போனால் அழிவு காத்திருக்கிறது என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் மரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம் அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார். ‘கன்னி கருவுற்று ஒரு மகனைப் பெறுவார். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்’ என்று மெசியாவின் பிறப்பை முன்னறிவிப்பு செய்தவர் எசாயா. இவ்வாறு மெசியாவின் வருகையை எப்போதும் எடுத்துரைத்ததோடு அல்லாமல், புதிய விண்ணகம் மற்றும் புதிய மண்ணகம் பற்றியும் இறைவாக்குரைத்து மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் எசாயா சிறப்பாகப் பணியாற்றினார்.

இறைவனோடு இணைந்து வாழ்ந்தால் இன்பம் பிறக்கும் என்பதையும், இறைவனைவிட்டு விலகி வாழ்ந்தால் இன்னல்கள் பிறக்கும் என்பதையும் எசாயாவின் இறைவாக்கிலிருந்து புரிந்து கொள்ளலாம். கடவுளின் மகன் நமக்கு முழு விடுதலை தருவார் என்று நம்பி வாழவும் பாவத்தை விலக்கி பரிசுத்தமான பாதையில் நடக்கவும் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! மெசியாவின் வருகை, அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றும் என்பதை அறிந்திருக்கும் நாங்கள் எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் புதிய படைப்பாக உருமாற்றிட உம்மை வேண்டுகிறோம். எசாயாவைப் போன்று நாங்களும் நம்பிக்கையில் எப்போதும் நிலைத்திருக்கவும், வாழ்வில் பிறருக்கு நம்பிக்கையூட்டவும் எங்களுக்கு உமது அருளைத் தாரும். ஆமென்.


Tuesday, 14 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 14

தானியேல்


தானியேல் 6:22

இன்றைய நாளின் சிந்தனை: தானியேல்

இன்றைய நாளின் குறியீடு : சிங்கம்


கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டிருந்தார்கள். அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த யூத சமய இளம் இறைவாக்கினர் தானியேல் என்பவர். அடிமைகளாக இருந்த தானியேலையும், அவருடைய மூன்று நண்பர்களையும் அரசனின் அரண்மனையில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும், உணவும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதைத் தவிர்த்து, மரக்கறி உணவையே உண்டு வந்தார்கள். இறுதியில் பாபிலோனின் எல்லா மாயவித்தைக்காரர்களையும், மந்திரவாதிகளையும்விட தானியேலும் அவருடைய நண்பர்களும் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்தனர்.  

ஒரு சமயம் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் கனவு ஒன்று கண்டான். அக்கனவின் உட்பொருளை விளக்கிக் கூற ஒருவராலும் முடியவில்லை. ஆனால் இறைவாக்கினர் தானியேல் கனவையும் சொல்லி, கனவின் அர்த்தத்தையும் மன்னன் நெபுகத்னேசருக்கு விளக்கினார். இவ்வாறு கனவு காண்பவராகவும், கனவுகளுக்கு பொருள் சொல்லக் கூடியவராகவும் தானியேல் திகழ்ந்தார் என நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மானிடமகன் என்கிற சொல்லாடல், பழைய ஏற்பாட்டில் முதன் முதலாக தானியேலின் நூலில் தான் இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தகுந்தது. 

பின் ஒருமுறை அரசன் நெபுகத்னேசர் நிறுவிய பொற்சிலையை வணங்க மறுத்த தானியேலின் நண்பர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ ஆகிய மூவரையும் எரியும் தீச்சூளைக்குள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராமல் கடவுளால் அற்புதமாய் காப்பாற்றப்பட்டனர். அதேபோன்று தானியேல் தினமும் மூன்று வேளை கடவுளை நோக்கி செபிப்பதை அறிந்த எதிரிகள், தானியேலைக் கட்டி சிங்கக் குகைக்குள் எறிந்தார்கள். ஆனால் அவையோ அவரைத் தீண்டவில்லை. 

இவ்வாறு உண்மைக் கடவுளாம் யாவேயை மட்டுமே நம்பிக்கையோடு வழிபட்டும், அவரிடம் மட்டுமே இடைவிடாது மன்றாடியும் வந்த தானியேலை கடவுள் அடிமைநிலையிலிருந்து அதிகாரியாக உயர்த்தினார். நம்முடைய நம்பிக்கையும், வழிபாடும் எல்லாம் வல்ல கடவுள் மீது மட்டுமே இருக்கவும், தொடர்ந்து தினமும் செபிக்கவும் நாமும் தீர்மானிப்போம். தானியேலைப் போன்று இறைவன் காட்டிய வழியில் நடக்க முடிவெடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மில் நம்பிக்கை கொண்டு நாங்கள் வாழ்ந்தால், நீர் எங்களை காத்து வழிநடத்துவீர் என்பதை நாங்கள் தானியேலின் வாழ்விலிருந்து அறிந்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் உம்மில் மட்டுமே என்றும் நம்பிக்கை வைப்போமாக. எதிரிகளின் சூழ்ச்சிகளை வெற்றிகொள்ளவும், இறுதிவரை ஒரே மனதோடு உமக்கு உகந்த வாழ்வு வாழவும் எங்களுக்கு உதவியருளும். ஆமென்.