Friday, 24 March 2023

தவக்காலத் திருவுரைகள்

தவக்காலத் திருவுரைகள் 


பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!


யோவான் 7:1,2,10, 25-30



நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்ள விரும்புவதில்லை. ஆகவே நமது பாதுகாப்பு என்பது நம்முடைய அடிப்படை எதிர்பார்ப்பாகவும், அத்தோடு நம்முடைய சுகமான வாழ்வு என்பது நம்முடைய அடிப்படை ஏக்கமாகவும் எல்லோருக்கும் இருக்கிறது. எதிர்பாராமல் நம் வாழ்க்கையில் வரும் பாதுகாப்பற்ற சூழலை சந்திப்பதில் பலரும் சோர்ந்து போகிறார்கள் அல்லது சோடை போகிறார்கள். 

நம்முடைய பாதுகாப்புக்காவும் வசதிக்காகவும் நாம் பலவற்றை விரும்பிச் செய்கிறோம். எவையெல்லாம் நம்மை எவ்வித தொல்லையும் தொந்தரவும் இல்லாமல் வைத்திருக்குமோ அவற்றையே விரும்பிச் செய்ய எண்ணுகிறோம். எவையெல்லாம் நமக்கு வருத்தமும் வேதனையும் தராதோ அவற்றையே விரும்பித் தேடுகிறோம். எவையெல்லாம் நம் வாழ்வில் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தாதோ அவற்றையே நமது அன்றாட பழக்க வழக்கங்களாக்கிவிடுகிறோம். 

பாதுகாப்பு வளையத்தினுள்ளேயே எப்போதும் இருப்பவர்களின் வாழ்க்கை ஆமைக்கு ஒப்பானது. சிறிது ஆபத்து வருவதை உணர்ந்ததும் ஆமை தன்னுடைய ஓட்டுக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். அதைப் போலவே நம்மில் பலரும் ஆபத்தான சூழலை, பாதுகாப்பற்ற சூழலை, வசதி குறைவான சூழலை சந்திக்க தயக்கம் காட்டுவதுண்டு. ஆபத்தை விரும்பாத ஆமை நல்ல ஆளுமையை உருவாக்க சரியான எடுத்துக்காட்டு அல்ல. பாதுகாப்பையும், வசதியான சூழலையும் எப்போதும் விரும்புகிற ஆமையின் மனநிலை கிறிஸ்துவின் மனநிலைக்கு ஏற்புடையதாகாது.   

பாதுகாப்பற்ற சூழல்கள் மட்டுமே நமது வாழ்வுக்கு வளர்ச்சியைக் கொணரும். சவாலான நேரங்கள் மட்டுமே நமது வாழ்வை சிகரத்திற்கு அழைத்துப்போகும். சிரமமான தருணங்கள் மட்டுமே நமது வாழ்வில் முன்னேற்றத்தை வழங்கும்.  ஆக, பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியே அடியெடுத்து வைப்பவர்களே, தங்கள் வாழ்வுக்கு மகத்தான பாதையை அமைத்துக்கொள்கிறார்கள். 

இயேசுவைக் கொல்ல யூதர்கள் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில், அவர் வெளிப்படையாக திருவிழாவில் மக்களுக்கு போதிக்கிறார். அனைவரும் அதைக் குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். சாவு துரத்துகிறது என்பதற்காக, வாழ்வை பிறருக்கு பயன் தரும் விதத்தில் வாழ இயேசு எப்போதும் மறந்ததே இல்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் ஒரு நாளும் பதுங்கி இருந்தவர் அல்ல இயேசு. தன்னுடைய வசதிகளை முன்னிறுத்தி இயேசு என்றும் செயல்பட்டதே இல்லை. கிறிஸ்துவின் பணி வாழ்வும் பலி வாழ்வும் பாதுகாப்பு வளையத்தை துறப்பதை வலியுறுத்துகிறது. நாமும் இனி நம்முடைய   பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வருவோம்!  


Monday, 27 February 2023

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு செய்ய விரும்பவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!

மத்தேயு 25:31-46


மனிதர்கள் கடவுளின் சாயலாய் படைக்கப்பட்டுள்ளனர். மனிதம் இறைமையைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் நமக்கு கடவுளின் முகத்தையே அடையாளம் காட்டுகின்றனர். கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு வந்தால் கடவுளை எவரும் விரட்டியடிக்கப்போவதில்லை. ஆனால் கடவுள் கடவுளாகவே இவ்வுலகுக்கு ஒருபோதும் வருவதில்லை. கடவுள் தம் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் வழியாகவே இம்மண்ணில் வலம் வருகிறார். மனிதர்களின் மாண்பைக் காக்கிறவர்கள் கடவுளையே மாட்சிப்படுத்துகிறார்கள். 

இயேசு சவுலை தமஸ்குக்கு செல்லும் பாதையில் சந்திக்கிறபோது ‘ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்கிற கேள்வியை எழுப்புகிறார். ஆனால் உண்மையில் பவுல் இயேசுவை அல்ல, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருந்த கிறிஸ்தவர்களையே துன்புறுத்தினார். துன்புறுவோரின் துன்பத்தை தம் துன்பமாகவே பாவிக்கிறவர் நம் கடவுள். ஆகவே கடவுளை நேரடியாக எவரும் துன்புறுத்த விரும்புவதில்லை. ஆனால் சக மனிதர்களை துன்பத்துக்கு உள்ளாக்குவதன் வழியாக கடவுளை நம்மால் துன்புறச் செய்ய முடியும்.

இறுதித் தீர்ப்பு குறித்த நற்செய்திப் பகுதியில் நிலைவாழ்வு என்பது அடுத்தவர் மீது அக்;கறைகொண்டு அவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறவர்களுக்கு வழங்கப்படும் கடவுளின் அன்புப் பரிசாகும் என்றும், அணையா நெருப்பு என்பது அடுத்தவர் மட்டில் அக்கறையற்று அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவிடும் மனமில்லாதவர்களுக்கு வழங்கப்படும் முடிவில்லாத் தண்டனையாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

தேவையில் இருப்போருக்கு செய்யப்படும் எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படுவதாகும் என்றும், தேவையில் இருப்போருக்கு செய்யப்படாத எதுவும் தெய்வத்துக்கே செய்யப்படாததாகும் என்றும் இயேசுவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆகவே கருணையுள்ளமே கடவுளுக்கு உகந்த இல்லிடம்.  ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீமொ 19:17). 

பசித்திருப்பவரும், தாகத்தோடு இருப்பவரும் இயேசுக்களே. ஆடையின்றி இருப்பவரும், அன்னியராய் இருப்பவரும் இயேசுக்களே. நோயுற்றிருப்பவரும், சிறையிலிருப்பவரும் இயேசுக்களே. இல்லாமையில் இழிவுறும் இந்த இயேசுக்களின் மீது நம் கண்களை திருப்புவோம். அடுத்தவருக்கு செய்யப்படும் நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் ஆராதனைகளே. அடுத்தவருக்கு செய்ய மறந்த நன்மைகள் ஆண்டவருக்கு செய்யப்படும் அவசங்கைகளே. ஆகவே ஆண்டவருக்கு செய்ய விரும்புவதையெல்லாம் அடுத்தவருக்கு செய்வோம்!  


Saturday, 5 November 2022

கல்லறைப் பாடம் - 5

உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர்  




1245 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் உள்ள சான்ட் ஏஞ்சலோ நகரில் பிறந்த நிக்கோலஸ், இளம் வயதிலேயே டோலண்டினோ நகரிலிருந்;த அகஸ்தினார் துறவற சபையில் சேர்ந்து, ஏழு ஆண்டுகள் படித்த பிறகு, குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

நிக்கோலஸ் ஒரு புனிதமான மனிதர். அவர் அடிக்கடி உண்ணா நோன்பும் ஒறுத்தலும் இருந்து, தன்னைத் தானே வருத்திக் கொண்டார். நீண்ட நேரம் செபத்தில் ஈடுபட்டார். 

கத்தோலிக்கத் திரு அவை 1274 இல் நடைபெற்ற இரண்டாம் லயன்ஸ் பொதுச் சங்கத்தில் தூய்மைபெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) கோட்பாட்டை முறையாக வரையறுத்தது. 

அதே காலகட்டத்தில் வாழ்ந்த புனித நிக்கோலஸைக் குறித்து இவ்வாறு சொல்வதுண்டு: நிக்கோலஸ் ஒரு இரவு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஓர் இறந்த துறவியின் குரலைக் கேட்டார். அத்துறவி நிக்கோலஸிடம் அவர் இப்போது தூய்மை பெறும் நிலையில் (உத்தரிக்கும் நிலை) இருப்பதாகக் கூறினார். எனவே அவருக்கும் அங்குள்ள மற்ற ஆன்மாக்களுக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு வலியுறுத்தினார். நிக்கோலஸ் ஏழு நாட்கள் அவ்வாறு செய்த பிறகு, துறவி மீண்டும் அவருக்குத் தோன்றி, இப்போது ஏராளமான ஆன்மாக்கள் கடவுளைச் சென்றடைந்துள்ளதாக்கூறி, நன்றி தெரிவித்தார். 

இவ்வாறு டோலண்டினோ நகர் புனித நிக்கோலஸ் இன்று உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று திரு அவையால் போற்றப்படுகிறார்.