Wednesday, 8 November 2023

கல்லறைப் பாடம் - 8

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள  ஆன்மாக்களுக்காக செபிப்பதால் என்ன நடக்கும்? 



அவர்களுக்கு: 

- உத்தரிக்கும் ஆன்மாக்கள் விரைவில் விண்ணகத்தில் நுழையும்.

- துன்பங்களிலிருந்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் விடுதலை பெறுவர்.

- கடவுளை நேருக்கு நேர் முக முகமாய்ப் பார்த்து மகிழ்வர்.

- கடவுளில் அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவு பெறும். 


நமக்கு: 

- நாம் உதவிய ஆன்மாக்கள் நம்மிடம் சிறப்பு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பர்.

- அவர்கள் நமது மீட்பைப் பற்றி அக்கறை கொண்டிருப்பர். 

- அவர்களின் செபங்கள் நம் தவறுகளை அடையாளம் காண உதவுகின்றன. எனவே நாம் நமது பாவத்தின் தீமையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

- நாம் நேரடியாக விண்ணகத்திற்குச் செல்ல நமக்கு உதவுவதில் அவர்கள் பங்கு சிறப்பானது. அவர்களின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தால், நாம் நிச்சயம் உத்தரிக்கும் நிலையைத் தவிர்க்கலாம்.


Tuesday, 7 November 2023

கல்லறைப் பாடம் - 7

தூய்மை பெறும் நிலையில் உள்ள (உத்தரிக்கும்) ஆன்மாக்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?



புனிதர்களின் சமூக உறவினால் மண்ணுலகில் இன்னும் திருப்பயணிகளாக இருக்கும் இறைமக்கள், தூய்மை பெறும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காகச் செய்யப்படும் இறைவேண்டல், சிறப்பாக நற்கருணைப்பலி வழியாக உதவ இயலும். மேலும் ஏழைகளுக்கு உதவுதல், பாவ மன்னிப்பு அருள்பலன்கள், தவ முயற்சிகள் வழியாகவும் உதவலாம். 

(கத்தோலிக்க திரு அவையின் மறைக்கல்வி 1032)


Monday, 6 November 2023

கல்லறைப் பாடம் - 6

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள 

ஆன்மாக்களுக்காக நாம் ஏன் செபிக்க வேண்டும்?



பல ஆன்மாக்கள் உண்மையில் தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் துன்பப்படுகின்றனர். தூய்மை பெறும் செயல் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது மிகவும் வேதனையானது என்பது முற்றிலும் உண்மை. 

அக்குவினா நகர் புனித தாமஸ் நமக்கு கூறுகிறார்: 

“ஒருவர் ஒன்றிற்காக எவ்வளவு அதிகமாக ஏங்குகிறாரோ, அது இல்லாமல் போகிறபோது அது அவ்வளவு வேதனையாக அவருக்கு மாறுகிறது. இந்த வாழ்க்கைக்குப் பிறகு, கடவுள் மட்டுமே உன்னத ஆன்மாக்களின் ஒரே விருப்பமாக இருக்கும். அக்கடவுளை அடைவதில் ஏற்படும் தாமதமே அந்த ஆன்மாக்களுக்கு மிகப்பெரிய வேதனையாகும்”.   

எனவே, வேதனையில் இருக்கும் இந்த ஆன்மாக்களுக்காக நாம் செபிப்பது அவர்களது வேதனையைத் தணித்து, கடவுளில் இளைப்பாற நாம் அவர்களுக்கு செய்யும் நல் உதவியாகும். 

மேலும் நம்மில் பெரும்பாலோர் ஒருவேளை தூய்மை பெறும் நிலையின் அனுபவத்தை சந்திக்க நேரிடலாம். ஆகவே, உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபிப்பதன் நன்மைகளில் ஒன்று, ஒரு நாள் நமக்காக இதேபோன்று செபிக்கும் நண்பர்கள் நமக்குத் தேவைப்படும் சூழலில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த ஆன்மாக்கள் ஒரு நாள் விண்ணகத்தில் இருக்கும்போது, நமக்கு பதில் உதவி செய்யும்படியாக நிச்சயம் நமக்காக கடவுளிடம் மன்றாடுவார்கள்.  இவ்வாறு இந்த உத்தரிக்கும் ஆன்மாக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்று கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நமக்கு கற்பிக்கிறது.