Friday, 10 November 2023

கல்லறைப் பாடம் - 10

புனித மரிய பவுஸ்தினாவின் 

இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 2



நவம்பர் 2, 1936 அன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாளில் ஒரு சந்திப்பு நடந்தது. அன்று மாலை புனித மரிய பவுஸ்தினா கல்லறைக்குச் சென்றார். அங்கு சிறிது நேரம் இறைவேண்டல் செய்தார்.

“நாங்கள் சிற்றாலயத்தில் இருக்கிறோம்” என்று சொன்ன சகோதரிகளுள் ஒருவரை அவர் அங்கு பார்த்தார். அதைக் கேட்ட புனித மரிய பவுஸ்தினா உடனே தான் சிற்றாலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, அங்கு சென்று உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு பரிபூரணப்பலன் கிடைக்க இறைவேண்டல் செய்தார். 

அடுத்த நாள் திருப்பலிக்குச் சென்றபோது அவர், மூன்று வெள்ளை புறாக்கள் பலிபீடத்தில் இருந்து வானத்தை நோக்கி உயரப் பறந்ததைப் பார்த்தார். அதிலிருந்து மூன்று ஆன்மாக்கள் விண்ணப் பேரின்பம் சென்றதாகப் அவர் புரிந்துகொண்டார். இந்நிகழ்வையும் அவர் தம்முடைய நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 748).


Thursday, 9 November 2023

கல்லறைப் பாடம் - 9

புனித மரிய பவுஸ்தினாவின் 

இறந்த ஆன்மாக்களுடனான சந்திப்புகள் - 1



புனித மரிய பவுஸ்தினாவின் பெயரைக் கேட்டவுடன், இறை இரக்க பக்தியை நாம் உடனடியாக நினைவுகூறுகிறோம். இப்புனிதருக்கு தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்கள் இவரைச் சந்தித்த அனுபவங்களும் இருந்தன. 

1933 இல், புனித மரிய பவுஸ்தினாவை அன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட ஓர் அருள்சகோதரியின் ஆன்மா சந்தித்தது. அந்த சகோதரி மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தார். அவரது முகம் வலிமிகுந்ததாயும், தீப்பிழம்புகளில் சிதைந்ததாயும் இருந்தது. புனித மரிய பவுஸ்தினா அச்சகோதரிக்காக தனது செபங்களை அர்ப்பணித்தார்.

அடுத்த நாள் இரவு, இன்னும் மோசமான தீப்பிழம்புகளால் சூழப்பட்ட நிலையில், முன்பு இருந்ததைவிட இன்னும் மோசமான நிலையில், அச்சகோதரி மீண்டும் தம்மிடம் வருவதைக் கண்டு மரிய பவுஸ்தினா அதிர்ச்சியடைந்தார்.

“என் செபங்கள் உங்களுக்கு உதவவில்லையா?" புனித மரிய பவுஸ்தினா அச்சகோதரியிடம் கேட்டார். 

“உதவவில்லை, எதுவும் எனக்கு உதவாது” என்று அச்சகோதரி பதிலளித்தார். 

“எல்லோரும் சேர்ந்து உங்களுக்காகச் செய்த எந்த செபங்களும் உங்களுக்கு உதவவில்லையா?" என்றார் புனித மரிய பவுஸ்தினா. 

“இல்லை. அந்த செபங்கள் மற்ற ஆன்மாக்களுக்கு உதவின” என்றார் அச்சகோதரி.

“என் செபங்கள் உங்களுக்கு உதவவில்லை என்றால், தயவுசெய்து நீங்கள் என்னிடம் வருவதை நிறுத்துங்கள்" என்று புனித மரிய பவுஸ்தினா பதிலளித்தார். உடனே அச்சகோதரியின் ஆன்மா அங்கிருந்து மறைந்தது.

ஆனாலும், புனித மரிய பவுஸ்தினா செபித்துக்கொண்டே இருந்தார். 

சிறிது நேரம் கழித்து, அச்சகோதரி மீண்டும் திரும்பி வந்தார். ஆனால், இம்முறை அவருடைய தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தீப்பிழம்புகள் மறைந்துவிட்டன, மேலும் அவருடைய முகம் சிறிது பிரகாசமாக இருந்தது. அவருடைய கண்கள் மகிழ்ச்சியால் பிரகாசித்தன என்று புனித மரிய பவுஸ்தினா தனது நாட்குறிப்பில் எழுதுகிறார். (எண். 58). 

“தூய்மை பெறும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக செபம் செய்வதை நிறுத்த வேண்டாம் என்று அச்சகோதரி எனக்கு வலியுறுத்தினார்….. கடவுளின் வழிகள் எவ்வளவு பிரமிக்க வைக்கின்றன!” என்று புனித மரிய பவுஸ்தினா எழுதுகிறார்.  

அந்த சகோதரி மூன்றாவது முறையாக புனித மரிய பவுஸ்தினாவிடம் சென்றபோது, அவர் இன்னும் தூய்மைபெறும் நிலையில் இருந்தபோதிலும், அவருடைய துன்ப நிலையின் அளவு மாறியிருந்தது. அவர் வேதனை மற்றும் விரக்தியிலிருந்து ஒளி மற்றும் பேரின்பத்தை நோக்கிய தன் வழியில் இருந்தார். 


Wednesday, 8 November 2023

கல்லறைப் பாடம் - 8

தூய்மை பெறும் (உத்தரிக்கும்) நிலையில் உள்ள  ஆன்மாக்களுக்காக செபிப்பதால் என்ன நடக்கும்? 



அவர்களுக்கு: 

- உத்தரிக்கும் ஆன்மாக்கள் விரைவில் விண்ணகத்தில் நுழையும்.

- துன்பங்களிலிருந்து உத்தரிக்கும் ஆன்மாக்கள் விடுதலை பெறுவர்.

- கடவுளை நேருக்கு நேர் முக முகமாய்ப் பார்த்து மகிழ்வர்.

- கடவுளில் அவர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவு பெறும். 


நமக்கு: 

- நாம் உதவிய ஆன்மாக்கள் நம்மிடம் சிறப்பு அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பர்.

- அவர்கள் நமது மீட்பைப் பற்றி அக்கறை கொண்டிருப்பர். 

- அவர்களின் செபங்கள் நம் தவறுகளை அடையாளம் காண உதவுகின்றன. எனவே நாம் நமது பாவத்தின் தீமையை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

- நாம் நேரடியாக விண்ணகத்திற்குச் செல்ல நமக்கு உதவுவதில் அவர்கள் பங்கு சிறப்பானது. அவர்களின் தூண்டுதலுக்குச் செவிசாய்த்தால், நாம் நிச்சயம் உத்தரிக்கும் நிலையைத் தவிர்க்கலாம்.