Wednesday, 13 November 2024

கல்லறைப் பாடம் - 13

 கல்லறைப் பாடம் - 13


இறந்த நம்பிக்கையாளர் நினைவு நாளில் 3 திருப்பலிகள்

இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், அருள்பணியாளர்கள் மூன்று திருப்பலிகளைக் கொண்டாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வரலாற்றுச் சூழல்

1915 ஆம் ஆண்டில், திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் முதல் உலகப் போரின்போது, அதிக எண்ணிக்கையிலான போர் இறப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக, இறந்த நம்பிக்கையாளர் நினைவு தினத்தில், மூன்று திருப்பலிகளைக் கொண்டாடும் அனுமதியை அருள்பணியாளர்களுக்கு வழங்கினார். 

பின்வரும் கருத்துக்களுக்காக மூன்று திருப்பலிகள் கொண்டாடப்படுகிறது:

முதல் திருப்பலி: அன்றைய ஒரு குறிப்பிட்ட கருத்திற்காக 

இரண்டாவது திருப்பலி: இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமாக 

மூன்றாவது திருப்பலி: திருத்தந்தையின் கருத்துக்களுக்காக


Tuesday, 12 November 2024

கல்லறைப் பாடம் - 12

கல்லறைப் பாடம் - 12



புனித ஒடிலோ 

பிறப்பு: 962, பிரான்ஸ்

இறப்பு: சனவரி 1, 1049

புனிதர் நிலை: திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் 1063


1030 ஆம் ஆண்டில், குளுனி துறவற மடத்தின் தலைவர் ஒடிலோ நவம்பர் 2 ஆம் தேதியை தனது துறவற சபையில் இறந்த உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு சிறப்பு நினைவு நாளாக ஒதுக்கினார். அனைத்து புனிதர்களின் பெருவிழாவுக்கு அடுத்த நாளில், அதாவது நவம்பர் 2 ஆம் தேதி அன்று, இறந்த துறவிகளுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று அவர் கோரினார். 

நாளடைவில் அவர் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மடங்களுக்கும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதியில் திருப்பலி, இறைவேண்டல், சுய ஒறுத்தல் செயல்கள் மற்றும் பிறரன்புச் செயல்கள் ஆகியவற்றை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக அவசியம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

இது உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்கு மூன்று திருப்பலிகள் நிறைவேற்றும் பழக்கமாக மிக விரைவில் வளர்ந்தது. இறுதியில் 1748 இல் உரோமைத் திரு அவையால், இந்த அனுசரிப்பு அதிகாரப்பூர்வமாக முழு மேற்கத்திய திரு அவைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு இது உலகளாவிய அனுசரிப்பாக வளர்ந்தது. 


Friday, 29 March 2024

சிலுவைப் பாடங்கள்

சிலுவைப் பாடங்கள்





1. கசப்பை விரும்பு

மருந்திற்குக்கூட கசப்பை விரும்பாத சமுதாயம் இது. திருச்சிலுவையை துன்பம், அவமானம், போராட்டம், கண்ணீர், வேதனை என்றெல்லாம் முத்திரைகுத்தி மூலையில் கிடத்தினோம். ஆனால் இறைவனோ திருச்சிலுவையை விடுதலையின் வாசலாகவும், மகிழ்ச்சியின் மந்திரச்சாவியாகவும், மீட்பின் கருவியாகவும் பயன்படுத்தினார். இவ்வுலகம் துன்பத்தை வெறுக்கிறது. ஆனால் கடவுளோ துன்பத்தை இன்பத்திற்கான திறவுகோலாக மாற்றியிருக்கிறார். இறைவனின் பாடத்திட்டத்தில் சிலுவை ஒரு தெரிவுப் பாடமல்ல மாறாக கட்டாயப்பாடம் (Cross is not optional but mandatory and compulsory).  வாழ்வில் சிலுவையைப் படிக்க விரும்பாதவன் கிறித்துவின் சீடனாக இருக்க முடியாது. புனித வெள்ளியைக் கடக்காமல் உயிர்ப்பின் ஞாயிறுக்குள் நுழைய முடியாதல்லவா? எனவே உளியின் வலி தாங்கும் கல் மட்டுமே சிற்பமாகும். செதுக்கப்பட அனுமதிக்காத கல் படிக்கல்லாய் இருந்து காலால் மிதிபடும். செதுக்கப்பட அனுமதித்த கல்லோ தெய்வத்தின் சிலையாகி கோவிலுக்குள்ளே எல்லோராலும் கை கூப்பி வணங்கப்படும். 

2. சுமக்கப் பழகு 

‘தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது’ (லூக்கா 14:27). இயேசுவின் சீடத்துவத்தின் முதன்மையான நிபந்தனையே சுமப்பதுதான். இயேசுவின் சீடர்கள் அனைவரும் சுமக்க அழைக்கப்படுகிறார்கள். தன் குழந்தையால் சுமக்க இயலாத அளவிற்கு எந்த தாயும் சுமையைக் கட்டி தன் பிள்ளையின் தலையில் வைப்பது உண்டா? கடவுளும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மீது நாம் சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை. ‘சுமை பெரிதாய் இருக்கிறதெனப் புலம்புவதை விடுத்து தோள்களை அகலமாக்கித் தா எனக் கேள்’ என்கிறது யூதப் பழமொழி. இயேசுவின் பாடசாலையில் சுமையாளர்களே சாதனையாளர்கள். பாரத்தைக் குறைக்க முடியாது, ஆனால் தோள்களை வலுப்படுத்திக் கொள்ளலாம்.  “சிறகுகள் விரிக்கப்படும் பொழுது சிகரங்கள் எட்டப்படுகின்றன. சிலுவைகள் சுமக்கப்படும் பொழுது சிம்மாசனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.”