Sunday, 17 November 2024

கல்லறைப் பாடம் - 17

கல்லறைப் பாடம் - 17

போலந்து இளவரசர்




சில அரசியல் காரணங்களுக்காக, தனது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு போலந்து இளவரசர் பிரான்சில் ஓர் அழகான கோட்டையையும் சொத்துக்களையும் வாங்கி அங்கு வசித்து வந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது குழந்தைப் பருவத்தில் பெற்ற கிறிஸ்தவ நம்பிக்கையை இழந்துவிட்டார். மேலும் அவர் கடவுளுக்கும் மறுமை வாழ்க்கையின் இருத்தலுக்கும் எதிராக ஒரு புத்தகத்தை எழுதுவதில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு நாள் மாலையில் அவர் தனது தோட்டத்தில் உலா வந்து கொண்டிருந்தபோது, ஓர் ஏழைப் பெண் கதறி அழுவதைக் கண்டார். அவளின் வருத்தத்திற்குக் காரணம் என்ன என்று அவர் அவளிடம் விசாரித்தார்.

“ஓ! இளவரசே, நான் இரண்டு நாள்களுக்கு முன்பு இறந்த, உங்கள் முன்னாள் பணியாளரான ஜோன் மரியின் மனைவி. அவர் எனக்கு ஒரு நல்ல கணவராகவும், உங்களுக்கு நல்ல ஊழியராகவும் இருந்தார். அவருக்கு நோய் நீண்ட காலமாக இருந்தது. அதனால் எங்களுடைய சேமிப்பை எல்லாம் மருத்துவர்களுக்காகச் செலவழித்தேன். இப்போது அவருடைய ஆன்ம இளைப்பாற்றிக்காக ஒரு திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குக்கூட என்னிடம் எதுவும் இல்லை" என்று அவள் பதிலளித்தாள்,

அவளது துயரத்தைக் கண்ட இளவரசர், சில அன்பான ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். மேலும் இறப்புக்குப் பிறகான வாழ்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அவளது கணவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்குச் சில பொற்காசுகளைக் கொடுத்தார்.

சிறிது காலத்திற்குப் பின்பு, ஒரு நாள் மாலை வேளையில், இளவரசர் தனது படிக்கும் அறையில், தீவிரமாக வாசிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாசலில் கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்டது. மேலே நிமிர்ந்து பார்க்காமலே அந்த பார்வையாளரை உள்ளே வரும்படி இளவரசர் அழைத்தார். கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ஒரு நபர் உள்ளே நுழைந்து இளவரசரின் புத்தக மேசைக்கு அருகே வந்தார். இளவரசர் நிமிர்ந்து பார்த்தபோது, மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். ஏனென்றால் அங்கே நின்றது இறந்துபோன அவருடைய பணியாளர் ஜோன் மரி.

ஓர் இனிமையான புன்னகையுடன் ஜோன் மரி இளவரசரைப் பார்த்து,  “இளவரசே, என் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்க,  நீங்கள் என் மனைவிக்கு உதவியதற்காக நன்றி சொல்ல வந்தேன். என் மீட்புக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நன்றி. நான் இப்போது விண்ணகம் போகிறேன். அதற்கு முன்பு, உங்களுக்கு நன்றி தெரிவித்துவர, கடவுள் என்னை அனுமதித்தார்.” என்று கூறினார்.

பின்னர் மேலும் அவர் இவ்வாறு கூறினார்:  “இளவரசே, கடவுள், இறப்புக்குப் பின் வாழ்வு, விண்ணகம், நரகம் நிச்சயம் உண்டு”. இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவர் மறைந்தார்.

உடனே, இளவரசர் முழங்காலிட்டு, நம்பிக்கை அறிக்கையை செபித்தார்.


Saturday, 16 November 2024

கல்லறைப் பாடம் - 16

 கல்லறைப் பாடம் - 16



பரவச நிலையில் உத்தரிக்கும் ஆன்மாக்களின் காட்சி

புனித நிக்கோலஸ் கோராபியூ என்னும் இடத்தில் தம்முடைய துறவற குழுமத்தைத் தொடங்கிய சில நாள்களுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெற்றது. ஒருநாள் திருப்பலிக்குப் பின்பு அனைவரும் உணவருந்தச் சென்றனர். அவ்வேளையில் பலரின் முன்பாக நிக்கோலஸ் பரவச நிலைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் பரவச நிலையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அப்போது அவர் தம்முடைய துறவற சபையினரைப் பார்த்து பின்வருமாறு கூறினார்: “ சகோதரர்களே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், அவர்களுக்காக செபியுங்கள். ஏனென்றால் அங்கு அவர்கள் தாங்க முடியாத துன்பங்களை அனுபவிக்கிறார்கள்."

அந்த நிகழ்வுப் பிறகு, அவர் வெளியே வராமல், தனது அறையிலேயே பல நாள்கள் தங்கியிருந்தார். உத்தரிக்கும் நிலையில் இருக்கும் ஆன்மாக்களுக்காக கடுமையான இறைவேண்டலிலும், நோன்பிலும் ஈடுபட்டார்.


Friday, 15 November 2024

கல்லறைப் பாடம் - 15

கல்லறைப் பாடம் - 15



இறந்த இராணுவ வீரர்களது ஆன்மாக்களின் காட்சி

1675 ஆம் ஆண்டு துருக்கிக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்றது. அச்சமயம் புனித நிக்கோலஸ் உக்ரைன் இராணுவத்தில் ஆன்மிக அருள்பணியாளராக பணியாற்றினார். ஒருமுறை போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்மாக்களது காட்சியை இவர் பெற்றார். அக்காட்சியில், உத்தரிக்கும் நிலையில் இருந்த அந்;த ஆன்மாக்கள் தங்களின் விடுதலைக்காக இவரிடம் பரிந்துரை செபங்களைக் கேட்டன. 

தன்னுடைய துறவு இல்லத்திற்குத் திரும்பியதும், இறந்தவர்களுக்காக, குறிப்பாகப் போரில் இறந்த இராணுவ வீரர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டுதல் செய்யவும், மன்த்துயர் மன்றாட்டு செபிக்கவும், பிறரன்புச் செயல்களைச் செய்யவும் தனது தோழர்களை அழைத்தார்.