இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!
மத்தேயு 26:14-25
விற்பதும் வாங்குவதும் வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் தொடர்ந்து நடக்கும் செயல்களே. ஒன்றை வாங்குவதற்கு, நாம் இன்னொன்றை கொடுக்கவோ அல்லது இழக்கவோ அல்லது விற்கவோ வேண்டியிருக்கிறது. எதை விற்கிறோம்? எதை வாங்குகிறோம்? என்கிற தெளிவு இல்லாமல் போனால் வாழ்க்கையில் வசந்தம் வற்றிப்போகும். காலை விற்று செருப்பும், கையை விற்று கைக்கடிகாரமும் வாங்கும் நிலை போன்று நம் ஆன்மீக வாழ்வு மாறிக் கொண்டு வருகின்றது.
இன்றைய நற்செய்தியில் யூதாசு இயேசுவுக்கு விலை பேசுகிறான். இதுவரை இயேசுவில் தனது நம்பிக்கையை, இயேசுவில் தனது கனவை, இயேசுவில் தனது பற்றுறுதியை வைத்திருந்த யூதாசு, இப்போது அவற்றை எல்லாம் பணத்தின் மீது வைக்கிறான். முன்பு இயேசு தன்னை அழைத்தபோது, அவரைப் பின்பற்றுவதற்காக யூதாசு தன்னையே அவருக்கு கையளித்தான். இப்போது அவரையே யூதத் தலைமைக் குருவுக்கு கையளிக்கிறான். எந்த பணத்திற்காக யூதாசு தனக்கு சொந்தமான இயேசுவைக் காட்டிக்கொடுத்தானோ, கடைசியில் அப்பணத்தையே அவனால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. இயேசுவிடம் தன்னையே அவன் விற்றபோது அவனுக்கு வந்தது வாழ்வு. இயேசுவை தலைமைச் சங்கத்திடம் விற்றபோது அவனுக்கு வந்தது சாவு.
ஒருவர் தனக்குரிய யாவற்றையும் விற்று முத்தை வாங்கினார் என்றும் இன்னொருவர் தனக்குரிய அனைத்தையும் விற்று பெரும் புதையல் இருக்கும் நிலத்தை வாங்கினார் என்றும் நற்செய்தியில் ஓர் இடத்தில் இயேசு கூறுவார். விலை மதிப்பு மிகுந்த முத்தும், பெரும் புதையல் உள்ள நிலமும் இயேசுவே. இயேசுவை சொந்தமாக்கிக் கொள்வதற்காக எதையும் விற்றுவிடலாம். ஒருவன் இயேசுவை சொந்தமாக்குவது என்பது, தனக்குரிய யாவற்றையும் விற்றாவது பெரும் புதையல் உள்ள நிலத்தையோ அல்லது விலை மதிப்பு மிகுந்த முத்தையோ சொந்தமாக்குவதைவிட மேலானது ஆகும்.
அன்று வரலாற்றில் ஒரு முறை இயேசுவுக்கு விலை பேசினான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் ஓராயிரம் முறை நமது வேலைக்காக, தொழிலுக்காக, படிப்பிற்காக, பொழுதுபோக்கிற்காக, திறமைகளுக்காக என்று இயேசுவுக்கு விலை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். அன்று ஒரு தடவை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இயேசுவின் மீது தான் கொண்டிருந்த தன்னுடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுத் தொலைத்தான் யூதாசு. ஆனால் இன்று நாமோ தினமும் பலமுறை இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்முடைய நம்பிக்கையை, கனவை, பற்றுறுதியை விற்றுக்கொண்டே இருக்கின்றோம். எதையும் இயேசுவுக்காக இழக்கலாம். ஆனால் இயேசுவை எதற்காகவும் இழந்துவிடக் கூடாது. எனவே நாம் இனியாவது யூதாசைப் போன்று இயேசுவை விற்க விலை பேச வேண்டாம்!