Monday, 31 May 2021

வணக்க மாதம் : நாள் - 31

 

 நிறைவின் அன்னை

(கர்சி - இத்தாலி)


1640 ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் இத்தாலியின் சிறிய நகரமான கர்சியில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் செபிக்கவும், கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டவும்  மக்கள் ஆலயத்தில் கூடிவந்தனர். 

ஒரு நாள் பாக்லியோ என்ற நபர் தனது கால்நடைகளை காணவில்லை என்பதால் அவற்றைத் தேடிச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுவதைக் கவனித்தார். அவர் கிட்டத்தட்ட பயந்து ஓடத்தொடங்கினார். மரியா அவரைத் திரும்ப அழைத்தார். தன்னை விண்ணக அரசி என்று அவருக்கு அடையாளப்படுத்தினார்.  பின்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள  வறட்சியின் கொடுமைக்காக தான் வருத்தப்படுவதாகவும், இரக்கம் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மரியா, பாக்லியோவிடம் கர்சியின் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடன் சேர்ந்து தனக்கான ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவ்விடத்திற்கு வரும்படியாக பங்கு குருவிடம் சென்று தெரிவிக்கச் சொன்னார். 

அவ்வாறு செய்யப்பட்டால், மரியன்னை கர்சியையும் சுற்றியுள்ள பகுதியையும் தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார் என்றும், அதே ஆண்டின் இறுதியில் யாரும் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஏராளமான அறுவடை இருக்கும் என்று பாக்லியோவுக்கு உறுதியளித்தார். கடைசியாக, பாக்லியோ தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஏனென்றால் மரியன்னை அவரை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்;, மேலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, அவர் அங்கு தனக்காக பணியாற்ற வேண்டுமெனவும் சொன்னார். பின்னர் அன்னை தோன்றியபடியே திடீரென்று மறைந்துவிட்டார்.

இந்த நிகழ்வை பாக்லியோ குருவிடம் சொன்னார். பின்பு குருவோடு இணைந்து கர்சி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாக்லியோ தலைமையில், மரியா தோன்றிய இடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கே அவர்கள் முழங்காலில் நின்று செபித்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நகரத்திற்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் சிறிது தூரம் சென்றதுமே, மழை பெய்து கூட்டம் முழுவதையும் நனைத்தது. மூன்று நாட்கள் நல்ல மழை பெய்தது. அறுவடை முடிந்து, அனைவரின் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது. விரைவில் நன்றியுள்ள மக்கள் புனித மரியாவுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினர். 

திருவிழா நாள்: சனவரி 5

செபம்: நிறைவின் அன்னையே! வறட்சியில் பிடியில் சிக்கி நாங்கள் வேதனைப்படும் போதெல்லாம் நீரே எங்கள் வாழ்வின் களஞ்சியங்கள் நிரம்பிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென். 


Sunday, 30 May 2021

வணக்க மாதம் : நாள் - 30

நீரூற்றின் அன்னை 

(கான்ஸ்டான்டிநோபிள் - துருக்கி)


கி.பி. 457 ஆம் ஆண்டு முதல் கி.பி. 474 வரை முதலாம் லியோ பைசண்டைன் பேரரசின் பேரரசராக இருந்தார். முதலில் இராணுவத்தில் தனது பணியைத் தொடங்கிய இவர், 457 இல் அப்போதைய பேரரசர் இறந்தபோது, லியோ புதிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆர்த்தடாக்ஸ் திருஅவையில் ஒரு புனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் வரலாறு பின்வருமாறு:

பிற்காலத்தில் பைசண்டைன் பேரரசின் பேரரசராக மாறிய லியோ, பேரரசராக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு நல்ல மற்றும் பக்தியுள்ள மனிதர் ஆவார். ஒரு நாள் அவர் தனது பயணத்தில் ஒரு பார்வையற்ற மனிதரைப் பார்த்தார். அவர் தாகத்தால் வேதனை அடைந்து, லியோவிடம் தாகத்தைத் தணிக்க தண்ணீரைக் கண்டுபிடிக்கும்படி கெஞ்சினார். இந்த மனிதன் மீது இரக்கம் கொண்ட லியோ, நீர் ஆதாரத்தைத் தேடிச் சென்றார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சோர்வுற்று அவர் தனது தேடலை நிறுத்தவிருந்தபோது, ஒரு குரல் கேட்டது: ‘லியோ, அருகிலேயே தண்ணீர் இருப்பதால் நீ சோர்வடையத் தேவையில்லை.’ லியோ மீண்டும் தேடத் தொடங்கினார். ஆனால் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மீண்டும் அதே குரலைக் கேட்டார். 

இந்த முறை அவரிடம் அக்குரல் இவ்வாறு கூறியது: ‘மன்னன் லியோ, காடுகளின் அடர்ந்த பகுதிக்குள் நீ நுழை. அங்கே நீ ஓர் ஏரியைக் காண்பாய். அதிலிருந்து சிறிது தண்ணீரை உன் கைகளால் எடுத்து பார்வையற்றவரின் தாகத்தைத் தணிக்கக் கொடு. பின்னர் அவரது பார்வையற்ற கண்களில் அந்த ஏரியின் களிமண்ணைப் பூசு. பின்னர் நான் யார் என்பதை நீ உடனடியாக அறிந்து கொள்வாய். ஏனென்றால் நான் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருக்கிறேன். இங்கு என்னை தரிசிக்க வருபவர்கள் அனைவரும் தங்கள் மன்றாட்டுகளுக்கு பதில் பெறும் வகையில் இங்கு எனக்கு ஓர் ஆலயம் கட்டு’. 

இதைக் கேட்ட லியோ ஏரியைக் கண்டுபிடித்து அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி செய்தார். பார்வையற்றவரின் கண்களில் களிமண் பூசப்பட்டவுடன், அவர் தனது பார்வையைப் பெற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு லியோவும் பேரரசராக ஆனார். பின்னர் அவர் அந்த இடத்தில் மரியாவுக்கு ஒரு பெரிய, அழகான ஆலயத்தை கட்டினார். இந்த ஆலயம் பல்வேறு படையெடுப்புகளில் சேதமடைந்தபோதும், மீண்டும் மீண்டும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இன்னும் இங்குள்ள நீரூற்றில் இருந்து வரும் நீர் தொடர்ந்து அற்புதங்கள் நிகழ்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

திருவிழா நாள்: மார்ச் 16

செபம்: நீரூற்றின் அன்னையே! உமது தயை நிறைந்த தாயுள்ளம் எங்கள் வாழ்வின் தாகம் தணிக்கும் அற்புத நீரூற்றாய் அமைந்திடவும், அதனால் நாங்கள் என்றும் உம் பிள்ளைகளாய் அகமகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு நீர் உதவி புரியும். ஆமென். 


Saturday, 29 May 2021

வணக்க மாதம் : நாள் -29

 இறைப்பராமரிப்பின் அன்னை

(கசானியோ, இத்தாலி)



இறைப்பராமரிப்பின் அன்னையின் திருத்தலம் இத்தாலியின் ஃபோசானோ மறைமாவட்டத்தின் குசானியோ என்னும் கிராமத்தில் உள்ளது. அங்கு பிறப்பு முதல் காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாதிருந்த பார்தலோமியோ கோப்பா என்பவர் இருந்தார். அவர் கால்நடைகளை மேய்ப்பவராக இருந்தார். மிகவும் மோசமான தோற்றம் மற்றும் நாகரீகமற்ற உடையில் எப்போதும் அவர் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பார்தலோமியோவைப் பற்றி யாரும் எப்போதும் கவலைப்பட்டதேயில்லை. 1521 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி மரியா வெண்ணிற அங்கியில் அவருக்குத் தோன்றி, அவரை ஆசீர்வதித்து, அவரது இயலாமையை குணப்படுத்தினார். பின்பு பார்தலோமியோவிடம் மரியன்னை ஃபோசானோவில் வாழ்பவர்களுக்கு, மனம்மாறும்படி அறிவிக்கும்படியும், கடவுளின் நீதியைப் பறைசாற்றும்படியும் சொன்னார். அவர்கள் தவம் செய்து மனம்மாறாவிட்டால் கொடிய துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று அவர்களை எச்சரிக்கவும் சொல்லிவிட்டு மரியன்னை மறைந்துவிட்டார். 

மரியன்னை கேட்டுக்கொண்டபடி, பார்தலோமியோ மூன்று நாட்கள் ஃபோசானோவின் தெருக்களில் மரியா தனக்குச் சொல்லியதை அறிவித்தார். ஆனால் எவரும் இவர் சொன்னதைக் குறித்து கவலைப்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்பு, சோர்வுடனும் பசியுடனும் அவர் அன்னை காட்சியளித்த இடத்திற்குத் திரும்பி, திறந்த நிலத்தில் தூங்கினார். இங்குதான் ஒரு புதிய அதிசயம் நடந்தது. மரியா பார்தலோமியோவுக்கு இரண்டாவது முறையாக தோன்றினார். இம்முறை நீல நிற அங்கியில் அன்னை காட்சியளித்தார். பார்தலோமியோவின் பசியை அறிந்து, மூன்று புதிய ரொட்டிகளை கொடுத்து, மீண்டும் ஃபோசானோ மக்களுக்கு மனமாற்றத்தை அறிவிக்கச் சொல்லி மறைந்துபோனார். அவர் ஃபோசானோவுக்குத் திரும்பி, மீண்டும் அவர்களுக்கு அன்னை கூறியவற்றை எடுத்துரைத்தார். ஆனால் மீண்டும் அவர் அவர்களால் நம்பாமல் ஏளனம் செய்யப்பட்டார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆண்டின் அக்டோபரில், ஃபோசானோவிலும் அதைச் சுற்றியும் ஒரு பயங்கரமான பிளேக் நோய் வந்தது. பின்பு பார்தலோமியோவின் எச்சரிக்கையை நினைவுகூர்ந்து தவம் செய்து அன்னையிடம் மன்றாடினர். பிளேக் நோய் தணிந்தது. மேலும் கன்னி மரியாவுக்கு ஒரு சிறிய ஆலயம் எழுப்பப்பட்டது. இது இறைப்பராமரிப்பின் அன்னை ஆலயம் என்று அழைக்கப்பட்டது. 

திருவிழா நாள்: நவம்பர் 19

செபம்: இறைப்பராமரிப்பின் அன்னையே! உமது இரக்கத்தாலும் கருணையாலும் எங்கள் வாழ்வில் எப்போதும் உமது அன்பான பரிந்துரையின் பயனாக, இறைப்பராமரிப்பை முழுமையாகப் பெற்று மகிழ உதவிசெய்யும். ஆமென்.