தாவீது
திருத்தூதர்பணிகள் 13:22
இன்றையநாளின் சிந்தனை : தாவீது
இன்றையநாளின் குறியீடு : மணிமகுடம்
யூதாவின் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன் தாவீது. இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை இறைவாக்கினர் சாமுவேல் திருநிலைப்படுத்தினார். ஆனால் சவுல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காததால், கடவுள் சாமுவேலிடம் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு கூற, சாமுவேலும் அப்படியே செய்தார். இவ்வாறு சவுல் உயிரோடு இருக்கும் போதே தாவீதின் அரசத் திருப்பொழிவு நடைபெற்றது.
ஒருமுறை பாளையத்தில் பெலிஸ்தியன் கோலியாத்தை தோற்கடிக்கமுடியாமல் சவுலின் படை திணறியது. அத்தருணத்தில் சிறுவன் தாவீது, மாமிச மலைபோல் நின்றிருந்த கோலியாத்தை வெறும் கவணையும், கூழாங்கல்லையும் வைத்து தரையில் வீழ்த்திக் கொன்றான். தாவீது கடவுளின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருந்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் தாவீதின் புகழ் பரவத் தொடங்கியது. அது சவுலின் மனதில் பொறாமையை விதைத்தது. பிறகு சவுல் தாவீதைக் கொல்லத் தேடினான. ஆனால் இறைவன் தாவீதைத் தப்புவித்தார். அதே நேரத்தில் கடவுள் தாவீதின் கையில் சவுலை ஒப்படைத்தார். ஆனாலும் தாவீது சவுலைக் கொல்லவில்லை.
சவுலின் இறப்பிற்குப் பின்பு தாவீது அரசரானார். பல அண்டை நாடுகளை வென்று இஸ்ரயேல் நாட்டை விரிவுபடுத்தினார். தாவீது தவறுகள் பல செய்தாலும் அதற்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு மன்றாடத் தவறியதில்லை. ஆண்டவருக்காக கோவில் ஒன்று கட்டவேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்தது. தாவீதைப் பற்றிச் சொல்லும்போது திருப்பாடல்களில் பல இவருடைய பாடல்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து பாடுவது, தாவீதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.
ஆட்டு இடையன் தாவீதையும், கடவுள் இஸ்ரயேலுக்கு மன்னனாக மாற்றினார் என்றால் கடவுளின் கரம் நம் வாழ்வில் செயல்படும்போது, நாமும் அவரால் மேன்மைப்படுத்தப்படுவோம் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பாவம் செய்திட்டாலும், மீண்டும் நாம் பரமனின் பாதத்தில் விழவேண்டும். எப்போதும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம் காணவேண்டும். தாவீதைப் போல கடவுளின் இதயத்துக்கு உகந்தவர்களாக, நாமும் வாழ முயற்சி செய்யவேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! தாவீது சிறுவனாக இருக்கும்போதே திருப்பொழிவு செய்து, உம்முடைய இதயத்துக்கு ஏற்றவராக வாழச் செய்ததுபோல எங்களையும் உமக்கு உகந்தவாழ்வு வாழச் செய்தருளும். தாவீதிடம் இருந்த அதே மனம் வருந்தும் குணமும், மன்னிப்பு வேண்டும் பண்பும் எங்களிடமும் வளரச் செய்யும். நாங்கள் என்றும் உம்மைப் புகழ்ந்து பாடியவர்களாய், உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.