நெகேமியா
நெகேமியா 4:17
இன்றையநாளின் சிந்தனை : நெகேமியா
இன்றையநாளின் குறியீடு : ஈட்டியும்,கொத்துக்கரண்டியும்
இஸ்ரயேல் நாட்டை ஆள்வதற்கு தாவீதின் வழி மரபில் பல அரசர்களைக் கடவுள் தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆனால் மன்னன் சாலமோனுக்குப் பிறகு இஸ்ரயேல் வட நாடு, தென் நாடு என்று இரண்டாகப் பிரிந்தது. அச்சமயத்தில் அடுக்கடுக்காக அந்நிய நாட்டுப் படையெடுப்புகளுக்கு இஸ்ரயேல் தேசம் ஆட்பட்டது. குறிப்பாக கி.மு. 587 ஆம் ஆண்டளவில் பாபிலோனுக்கு இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். தொடர்ந்து பாபிலோன் பாரசீக மன்னனால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்பு கி.மு. 538 ஆம் ஆண்டில் பாரசீக மன்னன் சைரசு என்பவன் இஸ்ரயேல் மக்களை சொந்த நாடு திரும்ப அனுமதி அளித்தான்.
பாபிலோனின் அடிமைத்தளையிலிருந்து மீண்டுவந்த யூதர்கள், மன்னன் சாலமோன் கட்டியெழுப்பிய எருசலேம் ஆலயம் சிதிலம் அடைந்து இருப்பதைப் பார்த்து மனம் கசந்தவர்களாக, எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணியில் இறங்கினர். அத்தருணத்தில் வாழ்ந்த முக்கியமான யூதத் தலைவர்தான் நெகேமியா. இவர் பாரசீகத் தலைநகராகிய சூசாவில் அரசன் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். கடவுளின் இல்லமான கோவில் சிதைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தமுற்றார்.
தொலைநாட்டில் இருந்தாலும் சொந்த நாட்டில் மக்கள் சந்திக்கும் இழிநிலை இவரைப் பாதித்தது. எப்போதும், எல்லாக் காரியங்களுக்காகவும் கடவுளிடம் மன்றாடுவதற்கு இவர் மறந்ததேயில்லை. யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்ற நெகேமியா, மன்னனின் மடலோடு வந்து, எருசலேம் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணிகளை வெகு சிறப்பாய் செய்தார். இடையில் ஒரு கட்டத்தில் யூதர்கள் நெகேமியாவின் வழிகாட்டலில், எதிரிகளை முறியடிக்க ஒரு கையில் ஆயுதம் தாங்கி, இன்னொரு கையில் கோவிலைப் புதுப்பிக்கும் வேலைகளைச் செய்தனர். இவ்வாறு பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், கோவிலைச் சீரமைத்துக் கட்டியெழுப்பும் பணியில் நெகேமியா மிகவும் துடிப்புடன் செயல்பட்டார். இஸ்ரயேலில் பல சீர்திருத்தங்களையும் இவர் மேற்கொண்டார்.
அரசு வேலையைச் செய்து மகிழ்வாய்த் தன் வாழ்வைக் கழித்த நெகேமியாவை, இறைவன் தன்னுடைய கோவிலுக்கான பணியைச் செய்ய வருமாறு அழைக்கிறார். கடவுளின் வீட்டைக் கட்டியெழுப்புவதில், தன்னுடைய பங்கு தனிச் சிறப்பானதாக அமையுமாறு நெகேமியா வருந்தி உழைத்தார். அவரைப் போல நாமும் கடவுளின் காரியங்களில் அக்கறையும், ஆர்வமும் கொண்டு செயல்படுவோம். இறைவனுக்குரிய காரியங்களை இன்முகத்துடன் செய்ய நாம் உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள்.
செபம்: அன்பின் இறைவா! பாழடைந்த எருசலேம் ஆலயத்தை புனரமைப்பு செய்ய நெகேமியாவை அழைத்து பணியமர்த்தியது போல, எங்களையும் உம்முடைய காரியங்களைக் கருத்தாய்ச் செய்யும்படி வழிநடத்தும். நெகேமியாவைப் போன்று நாங்களும் செபத்தின் வழியாக உம்மிடம் நெருக்கமான உறவில் இருப்போமாக. இனி எங்கள் வாழ்வில் நாங்கள் இறைவனையும், இறைவார்த்தையையும், இறைவனின் இல்லத்தையும் கண்முன் கொண்டு சிறப்பாய் செயல்பட அருள்புரியும். ஆமென்.