Tuesday, 7 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 7

யாக்கோபு




தொடக்கநூல் 28: 12

இன்றைய நாளின் சிந்தனை : யாக்கோபு

இன்றைய நாளின் குறியீடு : ஏணி


ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரு மகன்கள் பிறந்தனர். மூத்தவன் பெயர் ஏசா. இளையவன் பெயர் யாக்கோபு. இவர்கள் பிறக்கும் முன்னரே மூத்தவன், இளையவனுக்கு பணிந்திருப்பான் என்று கடவுள் சொல்லியிருந்தார். ஒரு முறை ஏசா மிகவும் களைப்போடு வீட்டிற்கு வந்தான். அப்போது யாக்கோபு கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த செந்நிற சுவையான கூழில் தனக்கும் கொஞ்சம் கொடுக்குமாறு தன்னுடைய தம்பி யாக்கோபிடம் ஏசா கேட்டான். ஆனால் யாக்கோபோ தனக்கு தலைமகனுக்குரிய உரிமையை விற்றால்தான் கூழ் கொடுக்க முடியும் என்று கூற, ஏசாவும் கூழுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய தலைமகனுரிமையை யாக்கோபிற்கு விற்றுவிட்டான். 

அதற்குப் பின்பு ஈசாக்கு மரணப்படுக்கையில் இருந்தபோது, அவர் ஏசாவை அழைத்து தன்னுடைய ஆசியை ஏசாவுக்கு வழங்க விரும்புவதாகவும், அதற்காக அவன் வேட்டையாடி, வேட்டைக்கறி சமைத்து வரும்படியும் சொன்னார். அதைக் கேட்ட தாயார் ரெபேக்கா யாக்கோபிடம் கறியை சமைத்துக் கொடுத்து ஆசியைப் பெற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார். இவ்வாறு யாக்கோபும் ஏசாவாக நடித்து, தந்தையை ஏமாற்றி அவருடைய இறுதி ஆசியைப் பெற்றுக்கொண்டார். 

இதன் காரணமாக ஏசாவுக்கும், யாக்கோபுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு, பின்னர் இணைந்தார்கள். ஒருநாள் இரவு பெத்தேல் என்ற இடத்தில் யாக்கோபு கனவு ஒன்று கண்டார். அதில் ஓர் ஏணியைப் பார்த்தார். அதன் ஒரு நுனி தரையைத் தொட்டுக் கொண்டும், மறு நுனி வானத்தைத் தொட்டுக் கொண்டும் இருந்தது. அதன் மேல் கடவுளின் தூதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாய் இருந்தனர். அங்கே கடவுளுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை யாக்கோபு ஏற்படுத்தினார். 

யாக்கோபை பெனியேல் என்ற இடத்தில் ஆண்டவர் ஓர் ஆடவர் உருவில் சந்தித்தார். அங்கே யாக்கோபு அந்த ஆடவரோடு இரவு முழுவதும் சண்டையிட்டார். கடைசியில் ஆண்டவர் யாக்கோபின் பெயரை மாற்றி ‘இஸ்ரயேல்’ என்ற புதிய பெயரை வழங்கினார். யாக்கோபு என்ற சொல்லுக்கு எபிரேயத்தில் ‘ஏமாற்றுக்காரன்’ என்பது பொருள். இஸ்ரயேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுபவன்’ என்று பொருள்.

நாமும் யாக்கோபைப்போல கடவுளின் சிறப்பான அன்பிற்கு உரியவர்கள் என்பதை உணருவோம். ஆண்டவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார், கீழாக்காமல் மேலாக்குவார் என்பதை யாக்கோபின் வாழ்விலிருந்து புரிந்து கொள்வோம். கடவுள் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளுக்காகவும், நம்மீது பொழிந்துள்ள சிறப்பான ஆசிகளுக்காகவும் நன்றி சொல்ல வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நீர் எங்கள் மீது பொழிந்துள்ள தனிப்பட்ட அன்பிற்காக நன்றி. யாக்கோபைப் போல நாங்கள் உம்முடைய அன்பிற்கு பிரமாணிக்கமாக தொடர்ந்து வாழவும், அதன் வழியாக நீர் எங்களுக்கு வைத்திருக்கின்ற பெரிய ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவுவீராக. அன்பால் எங்கள் உள்ளங்கள் பற்றி எரியச் செய்தருளும். ஆமென்.