Friday, 19 February 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு அருகே செல்வோம்!

மத்தேயு 9:14-15


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக விரும்பி அனுசரிக்கும் ஆன்மீக பக்தி முயற்சிகளுள் மிகவும் முக்கியமானது நோன்பு. இந்த நோன்பின் மீதான இயேசுவின் பார்வையை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசுவின் காலத்தில் யூதர்கள் தங்கள் சமயம் சார்ந்த நோன்புச் சடங்குகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக கடும் துறவு வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானின் சீடர்கள் மற்றும் பரிசேயர்கள் நோன்புக்கான சட்டங்களை மிகத் துல்லியமாய் கடைப்பிடித்து வந்தனர். 

ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பைக் கடைபிடிக்கத் தவறினார்கள் என்கிற குற்றச்சாட்டு அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதைக் குறித்து இயேசு பேசும்போது, ‘மணமகன் தங்களோடு இருக்கும்வரை, மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?’ என்கிற கேள்வியைக் கேட்கிறார். தன்னை மணமகனாகவும் தன்னுடைய சீடர்களை மணவிருந்தினர்களாகவும் எடுத்துச்சொல்லும் இயேசு தன்னோடு இருப்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை என எடுத்துக்காட்டுகிறார். 

இயேசுவின் பிரசன்னம் இன்பம் தரும் பிரசன்னம். எனவே அவரோடு நாம் இருந்தால் அங்கே துக்கத்திற்கோ, நோன்புக்கோ வேளையில்லை. அதே சமயத்தில் அவரைப் பிரிந்து நிற்கும் வேளைகளில் நமக்கு நோன்பு தேவை என்பதையும் இந்நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. 

நோன்பு என்பது கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவும் நமக்கான பாதை. நோன்பு என்பது கடவுளோடு இணைந்திருக்கும்படி நம்மை இறுக்கிக் கட்டும் கயிறு. ஆம், நோன்பு ஆண்டவரின் அருகே நம்மை அழைத்துப்போகிறது. இறைவனுக்கு இன்னும் நெருக்கமாய் வாழும்படி நமக்கு வழிசெய்கிறது. 

விண்ணிலிருந்து மண்ணிற்கு நம்மைத் தேடி வந்தார் இயேசு. ஆனால் நம்மைத்தேடி நம்மருகே வந்த இயேசுவுக்கு அருகே நாம் செல்லத் தயங்குவதை என்னவென்று சொல்வது? கடவுளை அணுகிச் செல்லத் தடைகளாக இருப்பவற்றை தவிர்ப்பதே இத்தவக்காலத்தில் நமக்கான நோன்பாக அமையட்டும். உணவை மட்டுமல்ல ஆன்மீக வாழ்வுக்கு ஊறுவிளைவிக்கும் தேவையற்ற கசடுகளையும், கழிவுகளையும் ஒதுக்கிவிடவும், தவிர்த்துவிடவும், தள்ளிவைக்கவும் நோன்பு நமக்கு கற்றுத் தரட்டும். 

இவ்வாறு நோன்பெனும் கயிற்றால் கடவுளோடு நம்மை இறுக்கி கட்டுவோம். நோன்பெனும் பாதையில் ஆனந்தமாய் ஆண்டவருக்கே அருகே செல்வோம்.

Thursday, 18 February 2021

தவக்காலத் திருவுரைகள்

தன்னலம் துறக்க தயாராவோம்!

லூக்கா 9:22-25


இயேசுவின் சீடர்களாய் வாழ விரும்புகின்றவர்களுக்கு தன்னலம் துறத்தல் என்பதை முக்கியமான பண்பாய் முன்வைக்கிறது இன்றைய நற்செய்தி. தன்னலம் துறத்தல் சீடத்துவத்திற்கான அடிப்படை நிபந்தனை. தம்மைப் பின்பற்றுபவர்களும் தன்னைப்போல தன்னலம் துறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். 

இன்றைய உலகில் தன்னலம் தலைவிரித்தாடும் போக்கு தாராளமாய் உண்டு. இங்கு தன்னலம் என்பதனைப் பல்வேறு புதுப்பது வடிவங்களாக ஏராளமாய்ப் பார்க்க முடியும். நான், எனது, என்னுடைய என்கிற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு குரூர சிந்தையும், கொடூர வாழ்க்கையும் நம்முடையதாகிவிட்டது. ஆண்டவரையும், அடுத்தவரையும் அப்புறப்படுத்திவிட்டு தன்னை மட்டுமே மையப்படுத்தி வாழும் வாழ்வுமுறை பெருகிவிட்டது. 

‘சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்கிறார் விவேகானந்தர். ஆம், தன்னலம் என்பது ஒழுக்கக் கேடு. தன்னலம் குற்றங்களைக் குவிக்கும் குப்பைத்தொட்டி. ஆகவே தன்னலத்தை தவிடுபொடியாக்குவோம். தன்னலமற்ற நிலையே தெய்வத்தின் முன் நம்மை அவருக்குரியவர்களாக அடையாளப்படுத்தும். தன்னலம் என்னும் சிறைக்குள் ஆயுள் கைதிகளாய்; காலம் தள்ளும் நிலையில் பலர் இன்று இருக்கிறோம். தன்னலம் சொகுசான சிறைவாசம். ஆனால் அதுவே நம் வாழ்க்கையை தொலைத்துக் கட்டிவிடும். எனவே தன்னலச் சிறையிலிருந்து விடுதலை பெறுவோம். 

தன்னலத்தால் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சொந்தமாக்கிவிடலாம். ஆனால் அதனால் நாம் நம்முடைய வாழ்வைத் தொலைத்துவிடுவோம் என்பதை மறக்க வேண்டாம். எனவே தான் இயேசு சொல்கிறார்: ‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ 

தன்னலம் நம் உயிரைக் காத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் பொதுநலம் நம் உயிரை இழக்கச் சொல்லும். ஆனால் இறுதியில் என்ன ஆகும்? இயேசுவின் வார்த்தைகளில் பார்க்கிறோம்: ‘தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டு தம் உயிரை இழக்க விரும்பும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்’. 

தன்னலம் என்பது சயனைடு தடவிய சாக்லெட் போன்றது. காப்பாற்றுவது போன்று தெரியும், ஆனால் காவு வாங்கிவிடும். இனிப்பது போன்று தெரியும், ஆனால் வாழ்க்கையை கசக்கச் செய்துவிடும். எனவே இயன்ற வழிகளில் எல்லாம் தன்னலம் துறக்க தயாராவோம். 


Wednesday, 17 February 2021

திருநீற்றுப் புதன்

 திருநீற்றுப் புதன் 




திருநீற்றுப் புதன் 

- இது தவக்காலத்தின் தொடக்க நாள்.

- இன்று இறைமக்கள் தங்கள் நெற்றியில் திருநீறு பூசி பாஸ்காவிற்காக தங்களையே தயாரிக்க ஆரம்பிப்பர்.

- இது ‘சாம்பல் புதன்’ என்றும் ‘விபூதி புதன்’ என்றும் அழைக்கப்படுகிறது. 


சாம்பல் ஆன்மீகம்

- திருநீறு அல்லது விபூதி எனப்படுவது அடிப்படையில் சாம்பல்.

- இறப்பு, நிலையாமை, ஒன்றுமில்லாமை, வெறுமை, சூன்யம் ஆகியவற்றை சாம்பல் நினைவூட்டுகிறது.

- எல்லாம் முடிந்த பிறகு எஞ்சுவது சாம்பல் மட்டுமே என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது.

- விபூதி நல்ல அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறன் கொண்டது.

- நெற்றி உடலின் முக்கியமான பாகம். இங்குதான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது மற்றும் உள்ளிழுக்கவும்படுகிறது. ஆகவே நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) பூசப்படும் சாம்பலானது விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலன் தரக்கூடியது.



திருநீற்றுப் புதனின் வரலாறு

- சாம்பல் பூசி தவக்காலத்தைத் தொடங்கும் வழக்கம் ஏறத்தாழ கி.பி 6-ஆம் நூற்றாண்டிலேயே பழக்கத்தில் இருந்ததாகக் காண்கிறோம்.

- தொடக்க காலத்தில் தனி நபர் ஒருவர் திருமுழுக்குப் பெறும் முன் கடைபிடிக்கப்பட்ட தயாரிப்பு

- சடங்குகளுள் சாம்பல் அணிவதும் ஒன்று. காலப்போக்கில் இது ஒட்டுமொத்த இறைமக்களுக்குமான அங்கீகரிக்கப்பட்ட பொதுவான சடங்காக மாறியது.

- கி.பி.1091 -இல் நடைபெற்ற பெனெவென்டோ மாமன்றத்தில் மேலைத் திரு அவை முழுவதற்குமான தவக்காலத்தின் தொடக்கத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய பொது தயாரிப்புச் சடங்காக அறிவிக்கப்பட்டது.


திருநீறு தயாரிக்கப்படும் விதம்

- கடந்த குருத்தோலை ஞாயிறு அன்று புனிதம் செய்யப்பட்டு,நம் இல்லங்களில் வைக்கப்பட்டிருந்த குருத்தோலைகளை எரித்து சாம்பல் தயாரிக்கப்படும்.

- இது அருள்பணியாளரால் புனித நீர் கொண்டு மந்திரிக்கப்படும்.


திருநீறு பூசப்படும் விதம்

- இறைமக்கள் நெற்றியில் புனிதப்படுத்தப்பட்ட திருநீறானது பூசப்படும் போது இரு வகையான வாய்பாடுகள் பயன்படுத்தப்படும்.


(1) ‘மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’ - இது மனித வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை நமக்கு நினைவுபடுத்தி, இறைவன் மட்டுமே நிரந்தரம் என்றும், அவரையே நாம் பற்றிப் பிடிக்க வேண்டுமென்றும் நமக்குத் தரப்படுகிற அழைப்பு இது.

(2) ‘மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ - இது இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில் அவரால் பயன்படுத்தப்பட்ட வாக்கியம் (மாற்கு 1:15) ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப பாவத்தை களைந்துவிட்டு, புனிதத்தைப் போர்த்திக்கொள்ள மனமாற்றமும், நற்செய்தியை ஏற்றுக்கொள்வதுமே சிறந்த வழிகளென நம்மை நெறிப்படுத்தும் அழைப்பு இது.


விவிலியமும் சாம்பலும்

- சாம்பலைப் பூசிக்கொள்வது மனமாற்றத்தை வெளிப்படுத்துகின்ற ஓர் அடையாளம்.

- இறைவாக்கினர் யோனா கூறிய நினிவே நகருடைய அழிவின் செய்தியைக் கேட்டு மன்னனும் மக்களும் சாம்பல் பூசி, சாக்கு உடை அணிந்து தங்கள் மனமாற்றத்தை வெளிப்படுத்தினர். (யோனா 3:6-8)

- யோபு தன்னுடைய மனவருத்தத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் சாம்பலில் உட்கார்ந்தார். (யோபு 2:8, 42:6)

- இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல் மக்களுக்குக் கூறிய ஆண்டவரின் வாக்கு: ‘என் மக்களே!  சாக்கு உடை உடுத்துங்கள்;;; சாம்பலில் புரளுங்கள்’. (எரே 6:26)

- இவ்வாறு விவிலிய மரபில் சாம்பல் அணிவது என்பது துக்கம், துயரம், பரிகாரம் போன்றவற்றைக் குறிக்கும்.