Wednesday, 3 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 துன்பக் கிண்ணத்தில் துணிவோடு பருகுவோம்!  

மத்தேயு 20:17-28


துன்பத்தையும், துயரத்தையும் கண்டு தூர விலகி ஓடும் மனிதர்கள் நிறைந்த சமுதாயம் இது. ஆனால் எதார்த்தம் அப்படி இல்லை. மனித வாழ்க்கையில் துன்பம் என்பது விருப்பப் பாடம் அல்ல மாறாக அது கட்டாயப் பாடம். ஆம், உலகில் எவராலும் துன்பங்களைத் தவிர்க்க முடியாது. கோடியில் புரண்டாலும் சரி, கடைக் கோடியில் கிடந்தாலும் சரி, மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் துன்பம் என்பது வந்தே தீரும். துன்பங்களைத் தவிர்த்து இன்பங்களில் திளைக்கவே மனித மனம் ஏங்குகிறது. ஆனால் முதலில் துன்பங்களைத் தாங்கிடவும், பின்பு இன்பங்களை அணைத்திடவும் கிறிஸ்தவம் நமக்கு வழிகாட்டுகிறது. 

‘துன்பம் ஒரு தூசியே’. கண்டிப்பாக இது கண்ணை உருத்தும், கண்ணீரை வரவைக்கும், பாதையை மறைக்கும். ஆனால் தூசிக்கு பயந்து பார்க்க மறுப்பதும், பயணத்தைத் தவிர்ப்பதும் சரியாகுமா? தூசி விழுந்துவிட்டதெனச் சொல்லி கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடுபவர்கள் உண்டா?  ஆகவே துன்பங்கள் தூக்க முடியாத தடித்த பாறைகள் இல்லை மாறாக துடைத்தெறியக்கூடிய தட்டையான தூசிகளே என்னும் புரிதல் உண்மையில் நம்மைப் பக்குவப்படுத்த உதவும்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசு தன் பணி வாழ்வின் இறுதியில் தான் சந்திக்க இருக்கும் துன்பங்களையும் பாடுகளையும் குறித்து முன் அறிவிக்கிறார். தன் அரியணையின் வலமும் இடமும் இடம் வேண்டி நின்ற செபதேயுவின் மக்களான யாக்கோபுவுக்கும், யோவானுக்கும் அவர் கொடுத்த அழைப்பும், ‘என் துன்பக் கிண்ணத்தில் பருகுங்கள்’ என்பதாகவே இருக்கிறது. இனிக்கிறது என்பதற்காக இன்னும் கொஞ்சம் என்று கேட்டதும் இல்லை, கசக்கிறது என்பதற்காக காறித் துப்பியதும் இல்லை. இதுதான் இயேசுவின் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மீதான பக்குவப்பட்ட பார்வையாக இருந்தது.  

இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் நாம் பருகுவதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு, அதுவே அருமையான சீடத்துவ வாழ்வும் கூட. துன்பத்தை சந்திப்பதில் நமக்கு புதிய புரிதலை இயேசு கொடுக்கிறார். நம் பொருட்டு அல்லாமல், கடவுளுக்காகவும் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதருக்காகவும் துன்பத்தை சந்திக்கின்றபோது, அத்துன்பம் நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. 

இயேசு பருகிய துன்பக் கிண்ணத்தின் கசப்பான துளிகளே இந்த மானுடத்தில் பரவிக்கிடக்கும் அலகையின் பாவ, சாப விடத்தை அறவே முறிக்கும் மாமருந்து. பணி வாழ்வும், பலி வாழ்வும் மட்டுமே இயேசுவின் கிண்ணத்திலிருந்து நாம் பருகுகிறோம் என்பதன் வெளிப்பாடு. இயேசுவைப் போல நாமும் பிறருக்கு பணி செய்வோம். இயேசுவைப் போல நாமும் பிறருக்காக பலியாவோம். இவ்வாறு நாமும் இயேசுவின் துன்பக் கிண்ணத்தில் இயேசுவைப் போல துணிவுடன் பருகுவோம். 


Tuesday, 2 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!

மத்தேயு 23:1-12



மகுடிக்கு மயங்காத பாம்பும் இல்லை. புகழுக்கு மயங்காத மனிதருமில்லை. இன்றைய கலாச்சாரம் புகழ் விரும்பும் கலாச்சாரமாக மாறி வருகிறது. பெருமைப்படுத்தப்பட வேண்டும், எங்கும் எதிலும் எப்போதும் முதலிடமும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும், பாராட்டு மழை பொழிய வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும் என்கிற ஆசை அதிகரித்து வருகிறதைப் பார்க்க முடியும். உயர்ந்த இடத்தில் இருப்பதற்கே, உலகில் வாழும் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். மனிதர்கள் தங்களுடைய பெருமையையும், புகழையும் நிலைநாட்டுவதற்காக அதிகாரத் தளங்களைக் கட்டமைக்கிறார்கள். அவற்றின் வழியாக அடுத்தவரை அடிமைப்படுத்துகிறார்கள், ஆட்டிப்படைக்கிறார்கள். 

எஜமானன், முதலாளி, நிர்வாகி, அதிகாரி என்று அடுத்தவரை ஆட்டிப் படைக்கும் பணிகள் மட்டிலான தாகம் நம்மில் பலருக்கு உண்டு. ‘நான்கு பேருக்காவது நான் நாட்டாண்மையாக இருக்கணும்’, ‘என் பேச்சை கேட்க ஒரு கூட்டம் இருக்கணும்’ என்று அதிகாரத்தின் மீதான நம்முடைய ஆவல் தணியாத தாகமாய் தினமும் கூடுகிறது. ‘கல்யாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளையாக இருக்கணும்’, ‘சாவு வீட்டில் நான்தான் பிணமாக இருக்கணும்’ என்ற கவன ஈர்ப்பு மனநிலை உள்ளோர் நம்மில் நிறைய பேர். ஆக பாம்பாட்டி, குரங்காட்டி போல வாழவே நாம் ஆசைப்படுகிறோம் என்பது மட்டும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆம், ஆட்டுவிப்பவர்களாய், அதிகாரம் செலுத்துகிறவர்களாய், வாழ்வதில் அவ்வளவு போதை நமக்கு. 

ஆனால் இன்றைய நற்செய்தி தற்பெருமையைத் தவிர்க்கவும், தாழ்ச்சியில் தலைநிமிரவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் அதிகார போதை விரும்பிகளாகவும், புகழுக்கு அலைபவர்காளகவும், தற்பெருமையும் தலைக்கனமும் மிகுந்தவர்களாவும் இருந்ததைக் கண்டு, இயேசு அவர்களை மிகவும் வன்மையாகச் சாடுகிறார். ‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப் பெறுவர்’ என்று இயேசு தாழ்ச்சியின் மகத்துவம் குறித்து போதித்தார். 

தாழ்ச்சி வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் நம் வாழ்வைத் திறக்கிறது. ‘பெருமை மேலே ஏறிச் செல்வதில் அல்ல, கீழே இறங்குவதில்தான் இருக்கிறது’ என்பதன் உண்மை  இனியாவது நமக்கு உரைக்கட்டும். ‘தாழ்ச்சியின் வழியே மாட்சி’ என்பது தவிர்க்க முடியாத கிறிஸ்தவ ஆன்மீகப் பாடம். மாட்சியை நோக்கிய பயணத்தில், தாழ்ச்சி எனும் புதிய பாதையை வகுத்து, அதில் தானும் நடந்து, தரணியர் அனைவரும் நடக்கக் கற்பித்தவர் இயேசு. சிகரத்தை எட்டிப்பிடிக்க ஒரு சின்ன வழி இருக்கும் என்றால் அது தாழ்ச்சி மட்டுமே. எனவே நாமும் தாழ்ச்சியில் தடம் பதிப்போம்! மாட்சியின் மகுடம் சூடுவோம்!  


Monday, 1 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இரக்கம் காட்டுவோம்! இறைவனைக் காட்டுவோம்! 

லூக்கா 6:36-38



மனிதரின் வாழ்வுக்கான இயக்கம் இரக்கத்தில் தான் இருக்கிறது. இரக்கம் இல்லையேல் இம்மண்ணில் இனிமை என்பதே இல்லாமல் போய்விடும். இரக்கம் காட்டப்படாததால் வாழ்வைத் தொலைத்தவர்களும் இங்கு உண்டு. இரக்கம் காட்டப்பட்டதால் வாழ்வைப் பெற்றவர்களும் இங்கு உண்டு. இரக்கம் இறைமையின் குணம். இரக்கமின்மை அரக்க குணம். அதனாலேயே இரக்கம் காட்டும் இயல்புடையவர்களை இறைவனைப் போன்று பார்க்கிறோம். இன்று இரக்கத்திற்கான அவசியம் இவ்வுலகில் மிகவே இருக்கிறது. எனவே தான் அகிம்சையை அடிக்கோடிட்டுக் காட்டிய புத்தரும், கொல்லாமையைக் கற்றுத்தந்த மகாவீரரும், ஜீவ காருண்யம் வளர்த்த வள்ளலாரும் நம் மண்ணில் மகான்களாய்ப் போற்றப்படுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி நம்மையும் தந்தையாம் இறைவனைப் போல தரணியில்; இரக்கமுடையவர்களாய் இருக்க அழைப்பு தருகிறது. ‘தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்’ (லேவி 19:2) என்கிற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை, ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6:36) என்று இயேசு புதிய ஏற்பாட்டில் மாற்றித் தருகிறார். 

இயேசு புனிதத்தை, இறைமையை, தூய்மையை இரக்கத்தோடு இணைத்துப் பார்க்கிறார். ஆகவே தான் பழைய ஏற்பாட்டில் தூயோராய் இருங்கள் என்று சொல்லப்பட்டதை, இயேசு இரக்கமுள்ளரோய் இருங்கள் என்று இன்னும் இயல்பு வாழக்கைக்கு ஏற்ற விதத்தில் தெளிவாய் கற்பிக்கிறார். இறைவன் காட்டும் இரக்கம் நம்மை வாழச் செய்வது போல, நாம் பிறர் மீது காட்டும் இரக்கம் அவர்களையும் வாழச் செய்யட்டும். அடுத்தவருக்கு இரக்கம் காட்டுகிறவர்கள் இரக்கத்தை மட்டுமல்ல, இறைவனையே காட்டுகிறார்கள் என்பதே உண்மை. 

மானுட வரலாற்றில் மனித மனங்கள் எனும் தராசில்  இரும்பாய் இறுகிப்போன இதயங்களல்ல, இலவம் பஞ்சாய் இளகி நின்ற இதயங்களே அதிக நிறை கொண்டிருந்தன. ஹிட்லரைப் போன்று இரக்கம் தொலைத்த அரக்கர்களாக அல்ல, இயேசுவைப் போன்று இரக்கம் வளர்க்கும் இனியவர்களாக வாழ்வதே வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும். ‘இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்ற புனித அன்னை தெரசாவின் அமுத மொழிகள் நம் அன்றாட வாழ்வில் எதிரொலிக்கட்டும். 

வாழ்க்கையில் இரக்கம் எவரையும் எப்போதும் கீழே இறக்கிவிடுவதில்லை. மாறாக ஒருவரின் இரக்கம் அவரை இமயமளவு உயரே ஏற்றிவிடுகிறது என்பதே உண்மை. இரக்கம் சுரக்கும் இதயங்களாய் இனி நம் இதயங்கள் இருந்திடட்டும். இரக்கம் நிச்சயம் நம்மை சிறக்கச் செய்யும். ஆம், இரக்கம் சுரக்கும் இதயம் என்றுமே சிறக்கும். எனவே இனி அடுத்தவருக்கு இரக்கம் காட்டுவோம்! அதன் வழியாய் இறைவனைக் காட்டுவோம்!