Saturday, 6 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்! 

லூக்கா 15: 1-3, 11-32



வீடு என்பது வெறும் கற்களாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கட்டம் இல்லை. அது உறவுகள் மனம் ஒன்றித்து மகிழ்ந்து வாழும் இடம். ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் உறவுகள் வளர்வதில்லை. மாறாக தேய்ந்து வருவதையே பார்க்கிறோம். வீட்டுக்குப் போகும் விருப்பமே சிலருக்கு வருவதில்லை. வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சிலருக்கு வெறுப்பையும், சலிப்பையும் தருகிறது. 

உறவுகளைப் போற்றும் உளப்பாங்கு உருப்பெற வேண்டிய வீடுகளில், இன்று உறவுகளை உடைத்தெறியும் நிலை பெருகி வருவது நாம் அறிந்ததே. உறவுகளின் தொட்டிலாய் இருக்க வேண்டிய வீடுகள், இன்று உறவுகளைப் புதைக்கும் சமாதிகளாய் இருக்கும் அவலத்தை என்ன சொல்வது? அடுத்தவரின் நிறைகளையும் குறைகளையும் அனுசரித்து, அரவணைத்து போவதும், தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பதும், தடுக்கி விழும்போதும் தூக்கிவிடுவதும், தவறு செய்யும்போது திருத்துவதும், திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வதும் தான் நம்முடைய வீடு நமக்குக் கொடுக்கும் உறவு அனுபவம். 

இன்றைய நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ள காணாமற்போன மகன் உவமையானது வீட்டைச் சுற்றியே அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் ஒரு தந்தை. அவருக்கு இரு மகன்கள்.  இளையவன் சொத்தைப் பிரித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மூத்தவன் தந்தையோடு வீட்டில் இருக்கிறான். வீட்டைவிட்டு போனபிறகு தனது சொத்தை இழக்கிறான் இளையவன். வீட்டு நினைப்பு வருகிறது. வீட்டில் தனக்கு இருந்த வளமான வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். மீண்டும் வீட்டுக்கு வருகிறான். நொறுங்கிப்போய், உடைந்துபோய், சோர்ந்து, களைத்து, வெறுத்து, விரக்தியிலும் வேதனையிலும் வீடு திரும்புகிறான். தந்தை வீட்டுக்கு வெளியேயே அவனுக்காக காத்திருந்தார். ஓடிப்போய் வீட்டுக்குள் அவனை அழைத்து வருகிறார். தோட்டத்திற்கு போயிருந்த மூத்தவனும் வீடு திரும்புகிறான். இளையவன் வந்திருப்பதை கேள்விப்படுகிறான். வீட்டுக்குள் போக விருப்பமில்லாமல் வெளியேயே நின்றுவிட்டான். மீண்டும் தந்தைவந்து அவனையும் வீட்டுக்குள் வரும்படி அழைத்தார். இல்லை, கெஞ்சிகேட்டார். மூத்தவன் வீட்டுக்குள் சென்றானா? பதிலின்றி உவமை முடிந்தது. 

வீட்டில் இருக்கும் வரை வீடு கொடுக்கும் பாசம், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற உறவின் உன்னத பரிமாணங்கள் பல நேரங்களில் நமக்குப் புரிவதில்லை. வீட்டைவிட்டு வெளியே தனித்து, தவித்து நிற்கும்போதுதான் வீட்டின் அருமை நமக்குப் புரிகிறது. நம் தந்தையாம் கடவுளின் வீடாகிய விண்ணகத்தை விட்டு பாவத்தால் வெளியேறிவன் மனிதன். மீண்டும் தன் வீடாகிய விண்ணகத்திற்குள் மனிதன் வருவான் என கடவுள் காத்திருக்கிறார். இளையவனும் மூத்தவனும் தன்னோடு வீட்டுக்குள் இருப்பதே இறைத்தந்தையின் விருப்பம். எனவே இளையவனைப் போல வீதியிலும், மூத்தவனைப் போல வாசலிலும் நின்றுகொண்டிருக்காமல், வீட்டுக்குள் போகும் விருப்பம் வளர்ப்போம்! 


Friday, 5 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 

மத்தேயு 21: 33-43, 45-46



‘தினை விதைத்தவன் தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்.’ என்ற முதுமொழி  நமக்கு மிகவும் தெரிந்த ஒன்றே. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுப்போம் என்பது நமக்கு நன்கு புரிய வேண்டும். எள்ளை விதைத்துவிட்டு, கொள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும், கொள்ளை விதைத்துவிட்டு, எள்ளு விளைய வேண்டும் என்று எண்ணுவதும் எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போலத்தான் தீயது நினைத்துவிட்டு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும். 

‘விதை ஒன்னு போட்டால் சுரை ஒன்னா முளைக்கும்?’ என்னும் பழமொழி நம் வாழ்வில் நாம் விதைத்தவற்றுக்கும், நாம் அறுப்பவற்றுக்கும் இடையேயுள்ள தொடர்பை தோலுரிக்கிறது. நல்லதை அறுக்க ஆசைப்படுபவன் நல்லதை அல்லவா விதைக்க வேண்டும்? அன்பை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு அன்பை விதைத்திருக்க வேண்டாமா? இரக்கத்தை அறுவடை செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்பு இரக்கத்தை விதைத்திருக்க வேண்டாமா? 

‘நல்லது நினைத்தேன். ஆனால் நல்லது நடக்கவில்லையே’ என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. இதற்கான பதில்தான் இன்றைய நற்செய்தி. ஒரு நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு போகிறார். தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாட்களை அவர்களிடம் அனுப்பினார். அதைக் கொடுக்க மனமில்லாத குத்தகைக்காரர்கள் பணியாட்களை வதைத்தார்கள். கடைசியில் தம் மகனை அனுப்பினார். அவரையும் அவர்கள் கொன்றார்கள். எனவே  நிலக்கிழார் வரும்போது குத்தகைக்காரர்களை ஒழித்துவிட்டு, உரிய காலத்தில் தனக்குரிய பங்கைக் கொடுக்கும் வேறு பணியாளர்களுக்கு குத்தகைக்கு விடுவார். இதுவே இயேசு சொன்ன கொடிய குத்தகைக்காரர் உவமை. 

நிலக்கிழார் குத்தகைக்காரர்களுக்கு நல்லது நினைத்தார். ஆனால் குத்தகைக்காரர்கள் நிலக்கிழாருக்கு நல்லது நினைக்கவில்லை. நல்லது நினைத்த நிலக்கிழார் உவமையின் கடைசியில் நல்லதையே அறுவடை செய்தார், ஆம், தன் திராட்சைத் தோட்டத்தை மீட்டுக்கொண்டார். ஆனால் குத்தகைக்காரர்களோ நிலக்கிழாருக்கு தீயது நினைத்தார்கள். எனவே தீயதையே அறுவடை செய்தார்கள், ஆம் அழிந்துபோனார்கள். இறைவன் நமக்கு நல்லதே நினைக்கிறார், திராட்சைத் தோட்டத்தை தந்ததுபோல நன்மைகளால் நிரப்புகிறார். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கேற்ப நாமும் நல்லது நினைக்கும் நன்மனம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். எனவே பெற்றுக்கொண்ட நன்மைகளை மறந்துவிட்டு, அக்கொடிய குத்தகைக்காரர்களைப்போல நல்லது நினைத்தவருக்கே தீயது நினையாமல் இருப்போம். நல்லது நினைப்போம்! நல்லது நடக்கும்! 


Thursday, 4 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்போம்! 

லூக்கா 16:19-31 



‘பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிற கூற்றை இன்றைய நற்செய்தி சுக்குநூறாக உடைக்கிறது. யூதர்கள் செல்வத்தை கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்த்தார்கள். அதனால் செல்வந்தர்களை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் ஏழைகளை இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்றும் யூதர்கள் கருதினர். ஆனால் எதார்த்தத்தில் செல்வம் நம்மை கடவுளிடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தள்ளி நிற்கச் செய்கிறது. இயேசுவின் செல்வரும் ஏழை இலாசரும் என்கிற இந்த உவமை புதிய ஏற்பாட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்துகிறது. எல்லாம் கிடைத்த வாழ்க்கையை செல்வரும், எதுவுமே கிடைக்காத வாழ்க்கையை ஏழையும் வாழ்கிறார்கள்.

ஏழை எளியவர்கள் படைத்தவரை மட்டுமே நம்பி வாழ்வார்கள். பணக்காரர்களோ படைப்பு பொருட்களை மட்டுமே நம்பி வாழ்வார்கள். இயேசுவுக்கு ஏழை எளியவர்கள் மட்டில் சிறப்பு கரிசனை இருப்பதற்கான காரணம். அவர்கள் இறைப் பராமரிப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழ்வதுதான். ஆனால் செல்வர்களோ தங்களுடைய பணம், செல்வம், சொத்து இவற்றின் மீது நம்பிக்கை கொண்டு இறைப்பராமரிப்பை இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள், இறைப்பராமரிப்பை நம்பி வாழ்வோரையும் இளக்காரமாய்ப் பார்க்கின்றார்கள். 

செல்வனின் வீட்டு வாசலிலேயே ஏழை இலாசர் கிடந்தாலும் அவனைப் பார்க்க மறந்தவனாக, அவனுடைய துன்புறும் நிலையைப் பார்க்க மறந்தவனாக செல்வன் இருக்கிறான். செல்வன் அந்த ஏழை இலாசரை அடித்துத் துரத்தவில்லை, அவனுடைய உடைமைகளைக் கவரவில்லை. ஆனால் அவன் இலாசரின் இழிநிலையை கண்டுகொள்ளவே இல்லை என்பதே அந்த செல்வனிடம் இருந்த தவறு. வீட்டுக்குள் வசதியாய் வளமாய் வாழ்ந்தவன், தன் வீட்டு வாசலில் தவித்துக்கிடக்கும் ஏழையை ஒருபோதும் பாசத்துடன் பார்த்ததில்லை என்பதே அவன் தண்டிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. ஆகவே நாமும் இந்த உவமையில் வரும் செல்வரைப் போல மறு உலகில் வேதனைப் படாமல் இருக்க செய்ய வேண்டியது: பார்க்க மறந்தவர்களைப் பாசத்துடன் பார்ப்பது. 

திருத்தந்தை பிரான்சிஸ் சொல்கிறார்: ‘இன்றைய நவீன உலகின் பெரிய பாவம் பாராமுகம்’. நம் அருகில் இருப்போரின் அவலத்தை  பார்த்தும் பார்க்காதபடி போவது, கண்டும் காணாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்றும், அது நரகத்தில் நம்மை தள்ளும் அளவுக்கு கொடியது என்றும் இயேசுவின் இந்த உவமை உணர்த்துகிறது. எனவே இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைப் பிடித்திருக்கின்ற பாராமுகப் போக்கை ஒழிப்போம். பார்க்க மறந்தவர்களையும், பார்க்க தவிர்த்தவர்களையும் இனி முதற்கொண்டு பாசத்துடன் பார்ப்போம்.