Tuesday, 9 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!

மத்தேயு 18:21-35



உலகத்தில் மிகவும் அபூர்வமாக பூக்கும் ‘பூ’ மன்னிப்பு. மன்னிப்பு மட்டும் இம் மண்ணுலகம் எங்கும் பூத்துக் குலுங்கினால் இவ்வுலகம் எவ்வளவு அழகாக இருக்கும்? நம் மனங்கள் நந்தவனமாய் இருக்க நினைப்பதைவிட மயான பூமியாய் இருக்கவே அதிகம் ஆசைப்படுகின்றன. மன்னிப்பு இங்கு மனங்களில் அரும்புவதும் இல்லை, மலர்வதும் இல்லை. கடவுளின் மன்னிப்பு நம் மனங்களில் விதையாய் விழுகின்றது. ஆனால் அதை பிறர் மன்னிப்பாய் வளர்த்தெடுக்கவும், பூக்கச் செய்யவும் நமக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. இந்த மன்னிப்பு மலர்ந்திட நமது மனம் மிக ஆழமாய் உழப்பட வேண்டியிருக்கிறது, உரமிடப்பட வேண்டியிருக்கிறது. 

இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் கெட்ட பணியாள் இரண்டு நல்ல பாடங்களை நமக்கு கற்றுத் தருகிறார். முதலாவதாக, மன்னிப்பு கேள் என்பதை அவன் செய்ததிலிருந்து கற்கிறோம். இரண்டாவதாக, மன்னிப்பு கொடு என்பதை அவன் செய்யத் தவறியதிலிருந்து கற்கிறோம். கடவுள் நம்மை மன்னிப்பது பிறரை நாம் மன்னிப்பதற்கு அடிப்படையாக அமைகிறது. மன்னிக்கப்பட்டவன் பிறரை மன்னிக்க வேண்டும். மன்னிப்பு ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு தொடர் சங்கிலி.

தலைவர் முதல் பணியாளருக்கு கொடுத்தது தாராள மன்னிப்பு. அவர் அவனது கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்கவில்லை. கடன் தொகையை  குறைக்கவில்லை. மாறாக கடன் முழுவதும் அப்பணியாளருக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மன்னிப்பு என்பது எதில் அடங்கியிருக்கிறது என்றால் நமக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதை தாங்குவதில் இருக்கிறது. முதல் பணியாள் தலைவருக்கு திருப்பி செலுத்திட வேண்டிய கடன் தொகை மிகப் பெரியது. அதை அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் திருப்பிச் செலுத்த முடியாத தொகையாக இருக்கிறது. இரண்டாம் பணியாளரின் கடன் தொகை சற்று குறைவான ஒன்று. அது திருப்பி செலுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் மன்னிப்பு பெற்றுக் கொண்ட அந்த முதல் பணியாள் தன்னுடைய சக பணியாளருக்கு மன்னிப்பை மறுக்கிறான். 

மன்னிப்பு என்பது தீர்ப்பிடும் உரிமையை கடவுளுக்கு கொடுத்துவிடுவது. மன்னிப்பு மறுக்கப்படும் போது மனிதம் மரிக்கிறது. நாம் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கும் மன்னிப்பு தேவையாக இருக்கிறது. மன்னிக்க மறுத்தால் மீளாத் துயர் உண்டு என்பதை அந்த முதல் பணியாளுக்கு நிகழ்ந்த முடிவிலிருந்து அறிகிறோம். மன்னித்தால் மட்டுமே மன்னிப்பு. இத்தவக்காலத்தில் நம் மனதை ஆழ உழுவோம். இறைவன் நமக்குத் தரும் மன்னிப்பை விதையாக்கி, பிறருக்கு நாம் தரும் மன்னிப்பை பூவாக்கி, அதையே கடவுளுக்கு உகந்த காணிக்கையாக்குவோம். எனவே மனிதம் மகிழ்ந்திட, நம்முடைய மனங்களில் பூத்து, பிறர் வாழ்வில் மணம் பரப்பிட வேண்டிது மன்னிப்பு என்பதை உணர்வோம். மன்னிப்பு என்னும் மாதவம் செய்வோம்!


Monday, 8 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!

லூக்கா 4:24-30



இந்த உலகம் சற்று விசித்திரமானது. இங்கு நல்லவர்கள் பரிகசிக்கப்படுவார்கள். கெட்டவர்கள் பரிசளிக்கப்படுவார்கள். நல்லவர்கள்  எதிர்க்கப்படுவார்கள். கெட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். நல்லவர்கள்  வெறுக்கப்படுவார்கள். கெட்டவர்கள் விரும்பப்படுவார்கள். நல்லவர்களை திண்டாடச்செய்வார்கள். கெட்டவர்களை கொண்டாடி மகிழ்வார்கள். இப்படி தலைகீழ் முரணாய் தவிக்கும் வாழ்க்கையே நமதாகிவிட்டது. 

நாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் நல்லவர்கள் பக்கம் நிற்பதில்லை. நாம் தீயது களையப்பட வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் நாம் தீயவர்களை எதிர்த்து நிற்பதில்லை. இப்படி நம்முடைய முரண்பட்ட வாழ்வுமுறையால், உலகில் தீமை தலை நிமிர்வதற்கும், நன்மை தலை குனிவதற்கும் தினமும் நாமும் காரணமாகிறோம். நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை வெளிப்படையாக நாம் நடத்துவதில்லை. ஆனால் நல்லவர்களைப் புறக்கணிப்பதன் வழியாக நல்லவர்கள் எதிர்ப்பு என்பதை நாள்தோறும் இம்மண்ணில் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.  

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊராகிய நாசரேத்திற்கு வருகிறார். ஆனால் அங்கு அவருடைய பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இயேசு ஏமாற்றத்தை மட்டுமே நாசரேத்தில் அனுபவித்தார்.  சொந்த மண்ணின் மக்கள்கூட இயேசுவின் இறையாட்சிப் பணியைப் புரிந்துகொள்ளவும் இல்லை. அப்பணிக்கு ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. புறக்கணிப்பே பல நேரங்களில் இயேசுவின் பணிக்கு கிடைத்த பரிசு. அவமானமே இயேசுவுக்கு அடிக்கடி கிடைத்த வெகுமதி. சிவப்புக் கம்பள வரவேற்பையும், ஆளுயர மாலையையும் விரும்பும் அயோக்கியர்கள் மத்தியில், நல்லவர்கள் நசுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் நாளும் நடக்கிற செயலே ஆகும். இறைவாக்கினர்களுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவுக்கும் அப்படியே நடந்தது. இயேசுவின் சீடர்களுக்கும் அப்படியே நடந்தது. 

தீமையை ஆதரிக்கிறோம் என்பதால் அல்ல, நன்மையை ஆதரிக்கவில்லை என்பதால் நாம் தீமைக்கு துணை போகிறோம். பொய்மைக்கு பரிவட்டம் கட்டுகிறோம் என்பதால் அல்ல, உண்மைக்கு பாடை கட்டுவதால் நாம் பொய்மையை வெற்றி பெறச் செய்கிறோம். தீமையின் பக்கம் நிற்பவர்களைவிட உண்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்களால் தீமை ஜெயிக்கிறது. நன்மையின் பக்கம் நிற்க மனமில்லாதவர்கள், நல்லவர்கள் நசுக்கப்படும்போது வேடிக்கை பார்க்கிறவர்கள், உத்தமர்கள் உதாசீனப்படுத்தப்படும்போது உம்மென்று இருப்பவர்கள் ஆகிய எல்லோருமே நாசரேத்தில் இயேசுவைப் புறக்கணித்த போலியான சொந்தங்களே. ஏற்றுக்கொள்ளப்படாமல் வீதியில் விரட்டப்படும் இயேசுக்களாய் இன்று ஏராளமான நல்லோர் நம்மிடையே உண்டு. எனவே நல்லோரைப் புறக்கணிப்பது இயேசுவையே புறக்கணிப்பபதாகும். நல்லோரைத் தாங்கிப் பிடிப்பது இயேசுவையே தாங்கிப்பிடிப்பபதாகும். ஆகவே, இனி நல்லவர்களைத் தாங்கிப் பிடிப்போம்!


Sunday, 7 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நாமே ஆண்டவரின்   ஆலயங்களாவோம்!

யோவான் 15: 13-21


ஆலயம்: ஆ - ஆன்மா, லயம் - லயித்தல். ஆக, ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் லயிக்கும் இடம். எனவே தான் நம் ஆன்மா இறைவன் பால் லயிக்க ஆலய வழிபாடு உதவுகிறது என்பதனால் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று தமிழுலகம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு ஆலயம் அல்லது கோயில் என்பது எல்லா சமயத்திலும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. அதைக் குறித்தே ‘கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார் ஒளவை மூதாட்டி. அந்த அளவிற்கு ஓர் ஊருக்கு கோயில் என்பது முதன்மையாக, மையமாக போற்றப்பட்டுள்ளது.          

யூத சமயத்திலும் ஆலயம் என்பது அவர்களுடைய பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. ஆனால் விவிலியத்தில் பார்க்கும் போது தொடக்க காலங்களில் ஆலயம் என்பதே யூத சமயத்தில் இல்லை. இஸ்ரயேல் மக்களுடைய விடுதலைப் பயணத்தின்போது இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாக இருந்த உடன்படிக்கைப் பேழையினை மக்கள் தங்கியிருந்த பாளையத்திற்கு வெளியே சந்திப்புக்கூடாரம் என ஒன்றை நிறுவி அதிலே வைத்திருந்தார்கள். கடவுளின் பிரசன்னத்தை தங்களிடமிருந்து தள்ளிவைத்துப் பார்த்தார்கள். காரணம் இறைவனின் பரிசுத்த பிரசன்னம் பாவிகளாகிய தங்களுடைய இடத்திலிருந்து அகன்று, அப்பால் இருந்திட வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். ஆனால் சாலமோன் மாhமன்னன் யாவே இறைவனுக்கென்று முதன்முதலாக விவிலியத்தில் ஆலயம் ஒன்றை எருசலேம் நகரிலே கட்டியெழுப்பினான். இதுவரை தள்ளி வைத்துப் பார்த்த கடவுளின் பிரசன்னத்தை, அவர்கள் இப்போது தங்கள் மத்தியிலே வைத்துப் பார்த்தார்கள். 

கடவுள் தங்களோடு உடனிருக்கிறார். தங்கள் பக்கத்திலேயே இருக்கிறார். இதுவரை அப்பால் இருந்த கடவுள் இப்போது அருகிலேயே இருக்கிறார். தங்கள் வாழ்விடத்திலே அவர் தங்களோடு தங்கியிருக்கிறார். தாங்கள் வாழும் சூழலை அவர் அறிந்திருக்கிறார். அவருடைய பரிசுத்தம் தங்கள் பாவங்களைப் போக்கி, தங்களையும் பரிசுத்தமாக்குகிறது என்கிற நம்பிக்கை வளர்ச்சியை ஆலயத்தின் வழியாக யூதர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆலய வருகையும், வழிபாடும் யூதர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. 

அந்த ஆலய அனுபவம் இயேசுவைப் பொறுத்த மட்டில் அருள் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்துப்போக வேண்டும். ஆண்டவரின் இல்லத்தின் மீது ஆர்வம் கொள்வது இயேசுவைப் போல எல்லாருக்கும் தேவையான ஒன்று. ஆம், இயேசு தன்னையே கடவுளின் ஆலயம் என்றும் ஆண்டவரின் இல்லம் என்றும் குறிப்பிட்டுப் பேசுகிறார். நம்முடைய ஆலய அனுபவங்கள் எல்லாம் நமக்குள் இறைப்பிரசன்னத்தை உணரச் செய்யவும், அதன் விளைவாக நாமே ஆண்டவருக்கான ஆலயங்களாக உருவாகிட உதவிடவும் வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஆலய அனுபவங்களை வளப்படுத்துவோம். அதனால் நாமே ஆண்டவரின் ஆலயங்களாவோம்!