Thursday, 18 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!

யோவான் 5:31-47



எங்கு சென்றால், எவரிடம் சென்றால் எது கிடைக்கும் என்று நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நற்சுகம் வேண்டுமா, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவரிடம் செல்ல வேண்டும். அறிவு வேண்டுமா, பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆசிரியர்களிடம் செல்ல வேண்டும். இவ்வாறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்துகொள்ள வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்கிறோம். எங்கு சென்றால் வேலை ஆகும், எவரிடம் சென்றால் வேலை ஆகும் என்பதெல்லாம் இச்சமூகத்தில் நாம் போகிறபோக்கில் கற்றுக்கொள்கிறோம். ஆனால் எல்லாம் இருந்தும் வாழ்வு இல்லாமல் போனால்?  

வாழ்வு என்பது கடைச் சரக்கல்ல. வாழ்வு என்பது கடவுள் தரும் கொடை. வாழ்வினைக் கடைவீதியில் அலைந்து காசு கொடுத்து சொந்தமாக்கிட முடியாது. வாழ்வின் ஊற்று நம் கடவுள். அவரிடமிருந்தே நாம் நமது வாழ்வைப் பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அக்கடவுளை நம் வாழ்விலிருந்து இழக்கின்ற போது நாம் வாழ்வையே இழக்கின்றோம் என்னும் உண்மை நமக்கு பல வேளைகளில் புரிவதில்லை. கடவுளின் இடத்தை உலகில் எதுவும் எவரும் எப்போதும் நிரப்ப முடியாது. ஆம், வாழ்வு கடவுளால் மட்டுமே கொடுக்கப்படும் ஒன்று. அவரைத் தவிர வேறு எதுவும் எவரும் வாழ்வை வழங்கிட முடியாது. 

தொடக்கநூலில் ஆதாமும் ஏவாளும் வாழ்வின் ஊற்றாம் கடவுளை மறந்து விலக்கப்பட்ட கனி இருக்கும் மரத்தை தேடிப் போனார்கள். எந்த மரத்தால் தங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்று நம்பினார்களோ, அந்த மரத்தினால் அழிவையே அவர்கள் பெற்றுக்கொண்டனர். வாழ்வு பெறும் பொருட்டு அவர்கள் போன இடம் தவறு. படைப்புக்கள் மனிதருக்கு ஒருபோதும் நிலை வாழ்வை, நிறைவாழ்வை தந்துவிட முடியாது. படைத்தவரே நம்மை நிறைவாழ்வுக்கு நிலைவாழ்வுக்கு இட்டுச்செல்ல முடியும். 

இன்றைய நற்செய்தியில் ‘வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று இயேசு யூதர்களிடம் வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் எடுத்துரைக்கிறார். யூதர்கள் தங்களுக்கான வாழ்வு திருச்சட்டத்திடம், மோசேயிடம் இருக்கின்றதென்று நம்பினர். ஆனால் உண்மையில் வாழ்வின் ஊற்றாம் இயேசுவே அவர்களைத் தேடி வந்திருந்தபோது அவர்கள் அவரைப் புறக்கணித்தனர்.

இன்று நம்முடைய வாழ்வை நாம் எதிலே தேடுகிறோம்? வாழ்வைத் தேடி நாமும் சித்தாந்தங்களிடமும், மனிதர்களிடமும் செல்வதிலிருந்து எச்சரிக்கையாய் இருப்போம். அதிர்ஷ்டத்தில், ஜோதிடத்தில், ஜாதகத்தில், நல்ல நேரத்தில்  நம் வாழ்வை தேடும் நிலையிலிருந்து விடுதலை பெறுவோம். திருச் சிலுவையே நமக்கான புதிய வாழ்வின் மரம். அதில் தொங்கிய இயேசுவே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வின் கனி. ஆகவே, நமக்கான வாழ்வின் கனியாம் இயேசுவின் வழியாக வாழ்வு பெறுவதற்கு வாழ்வின் மரத்திடம் விரைந்து வருவோம்!


Wednesday, 17 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!

யோவான் 5: 17-30



மனித வாழ்வில் விருப்பங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பது உண்டு. விருப்பங்கள் இல்லாத மனிதரும் இல்லை. அந்த விருப்பங்கள் ஏற்படுத்தாத திருப்பங்களும் உலகில் இல்லை. எல்லா நேரங்களிலும் நமது எல்லா விருப்பங்களும் சரியாக இருப்பது இல்லை. விருப்புகளும் வெறுப்புகளும் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் இறுதிவரை நம்மை அலைக்கழிக்கின்றன. நமது விருப்பு இன்னொருவருக்கு வெறுப்பாக இருக்கலாம். நமக்கு வெறுப்பாய் இருப்பது இன்னொருவருக்கு விருப்பமாக இருக்கலாம். ஆம், ஒருவருக்கு அமிழ்தாய் இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாய் அமையலாம். 

மனிதர்கள் எப்போதும் தங்கள் விருப்பு வெறுப்புகளின்படியே வாழ்வில் செயலாற்றுகிறார்கள். தன் விருப்பத்தை தலையில் வைத்து ஆடும் மனிதர்கள், அடுத்தவரின் விருப்பத்தை காலில் போட்டு மிதிப்பதும் இங்கு நாளும் நடக்கும் அத்துமீறலே. தனக்கென்று மட்டுமே நலம் விரும்புவது மனிதரின் பண்பு. தரணிக்கே நலம் விரும்புவது தெய்வத்தின் பண்பு. கடவுளின் விருப்பம் எப்பொழுதும் எல்லோருக்கும் நல்லது நினைக்கும் ஒன்று. மனிதர்களின் விருப்பமோ நான், எனது, என்னுடைய என்று கூண்டுக்கிளி போன்றது. இந்த தன் விருப்பச் சிறை வாசத்திலிருந்து விடுதலை பெற்றிடவே இறைவன் மனிதரை அழைக்கிறார். அவரது விருப்பத்தை நமதாக்கிட நம்மைக் கேட்கிறார்.

தொடக்கத்தில் முதல் பெற்றோர் கடவுளின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்தனர். தங்கள் விருப்பத்தை தலையில் தூக்கிவைத்து ஆடினர். இறைவனின் விருப்பத்தை நம் வாழ்விலிருந்து விலக்கினால் பாவமும், சாபமும் மட்டுமே நம்மைத் தொடரும் என்பதற்கு ஆதாம் ஏவாளின் வாழ்வு நமக்குப் பாடம். மீட்பின் வரலாற்றில் எப்பொழுதெல்லாம் இறைவனின் விருப்பம் மனித வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மனித வாழ்வில் வருத்தங்களும் தேக்கங்களும் ஏற்பட்டன. இறைவனின் விருப்பத்தை தனதாக்கி வாழ்ந்தவர், நம்மையும் அப்படி வாழ அழைக்கிறவர் இயேசு. இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையின் விருப்பப்படியே தான் செயலாற்றுவதாக சொல்கிறார். தந்தையின் விருப்பமே தனது விருப்பம் ஆனதால் தந்தையோடு தானும் இணைந்து செயலாற்றுவதாகவே கூறுகிறார். 

மனித விருப்பங்கள் தன்னலத்தில் தோன்றும். இறை விருப்பமோ பொது நலத்தை போற்றும். மனித விருப்பங்கள் சிலரை வாழ வைக்கும். இறை விருப்பமோ எல்லோரையும் வாழ வைக்கும். மனித விருப்பங்கள் நிழல்கள். இறை விருப்பமோ நிஜம். நிழல்களை விடுத்து நிஜத்தை பற்றிக்கொள்வோம். மனித விருப்பங்களை மக்கச் செய்து இறை விருப்பத்தை இறுதிவரை வாழ்ந்திடவே இயேசு நம்மை அழைக்கிறார். ‘என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்’ என்று சொன்ன இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைப் படைத்தவரின் விருப்பத்தை நாடப் பழகுவோம். இறைவனின் விருப்பமே இனி நம் விருப்பம் ஆகட்டும்!


Tuesday, 16 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!

யோவான் 5:1-3, 5-16


‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்னும் கூற்றை நாம் அறிந்திருக்கிறோம். நம்மைப் படைத்த இறைவன் நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு நினைவூட்டுகிறது. கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரைக்குக்கூட உணவூட்டுகிறவர் கடவுள். எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்று விரும்புவர் நம் இறைவன் ஒருவர் மட்டுமே. பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவது எப்படி பெற்றோரின் பொறுப்பாக இருக்கிறதோ, அதே போன்று தான் படைத்த உயிர்களை தாங்கிப்பிடிக்க வேண்டியதும் அந்த வல்ல தெய்வத்தின் நல்ல பொறுப்பு என்பதை விவிலியம் பல நிகழ்வுகளின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறது.

எவ்வளவுதான் கடவுள் நம்பிக்கையில் கொடிகட்டி பறந்தாலும் துன்பத்தில் தனித்துவிடப்படும் நேரங்களில் எனக்கென்று யாருமில்லையே என்கிற அங்கலாய்ப்பும் ஆதங்கமும்  நம்மில் பலருக்கு அதிகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட சூழல்களில் எனக்கென்று ஒருவர் உண்டு. என் நலம் நாடும் நல்லவர் அவர். என்னைப் படைத்தவரே அவர் என்கிற பக்குவம் நமக்கு நிச்சயம் பிறக்க வேண்டும். என்னை அன்பு செய்யவும் என்மீது அக்கறை காட்டவும் எனக்கு யாருண்டு? என்று தவித்து நிற்கும் மனிதர்களுக்கு நம்மீது அக்கறைகாட்ட நம்மைப் படைத்தவர் நமக்குண்டு என்கிற நல்ல செய்தியை இன்றைய நற்செய்தி தருகிறது.  

இன்றைய நற்செய்தியில் எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகிலுள்ள பெத்சதா என்கிற அக்குளத்தருகில் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்த அம்மனிதரின்மீது இயேசு அக்கறைகாட்டுகிறார். ‘என்னைக் குளத்தில் இறக்கிவிட யாருமில்லை’ என்று அம்மனிதர் இயேசுவிடம் சொல்லிய அவ்வார்த்தைகளில் அவருடைய தனிமையின் வலியும் வேதனையும் நமக்குப் புரிகிறது. என் நலம் நாடும் நல்ல உள்ளங்கள் எதுவும் என் வாழ்க்கையில் எனக்கு இல்லையே என்கிற அவருடைய வருத்தத்தை இயேசு புரிந்துகொள்கிறார். யாருமில்லாத அம்மனிதருக்கு எல்லாமாய் நான் இருக்கிறேன் என்று இயேசு செயலில் காட்டுகிறார். அம்மனிதரை தன்னுடைய அக்கறை என்கிற குளத்தில் இறக்கி அற்புதமாய் சுகம் பெற்றிட செய்தார்.  

தனிமையின் வலியும் வேதனையும் நம் இயேசுவுக்கு நிச்சயம் நன்கு புரியும். ஏனென்றால் இயேசு தன்னுடைய வாழ்வில் தனிமையின் வலியை வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறார். அக்கறைகாட்டப்படாத மனிதர்களுக்கு அக்கறைகாட்டும் அன்புள்ளம் ஆண்டவர் இயேசுவுடையது. யாருமில்லை எனக்கு என்று சொல்லி விரக்தியோடு வாழ்வின் விளிம்பில் வாடிப்போக வேண்டாம். அந்த ஏழை இலாசரைப் போல உலகில் உனக்கென்று யாருமில்லாமல் இருக்கலாம். ஆனால் உலகைப் படைத்தவரே உன்மீது அக்கறைகொள்வார். ஆகவே அக்கறைகாட்ட ஆண்டவருண்டு! ஆனந்தம் அடைவோம்!