Friday, 26 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்!

யோவான் 10:31-42



முகங்களைவிட முகமூடிகளுக்கே இங்கு முதல் மரியாதை. முகங்களைக் காட்டிலும் முகமூடிகளுக்கே நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம். சாதி, சமயம், மொழி, இனம் போன்றவைதான் உண்மையில் நாம் என்று எண்ணும் அளவிற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகள் இன்று ஏராளம். இதனால் நம் உண்மை உருவையும் சாயலையும், இயல்பையும் தன்மையையும் நாம் மறக்கிறோம், மறைக்கிறோம், மழுங்கடிக்கிறோம். இடத்திற்கும் ஆள்களுக்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல முகமூடிகளை அணிந்துகொள்வது நமக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டது. முகமூடிகளையே தங்களுடைய உண்மைத்தன்மை என்று சொல்லிக்கொண்டு, மெய்யை மறந்து பொய்யின் போர்வைக்குள் மனிதர் பதுங்கிக் கிடக்கின்றனர். தங்களின் முகமூடிகளைக் களைவது மனிதர் பலருக்கு மிகவும் கடினமான செயல். ஏனென்றால் தங்களது உண்மையான முகத்தையும், உருவத்தையும்விட முகமூடியே அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. 

மனிதர்கள் தங்கள் முகத்தை மறைத்து அணியும் முகமூடியினால் பிறருக்கு தங்கள் உண்மையான அடையாளத்தையும், உண்மைத் தன்மையையும் மறைக்கின்றனர். உள்ளே ஒன்றும் வெளியே வேறொன்றுமாக தங்கள் வாழ்வில் முரண்பட்டு நிற்கின்றனர். அடுத்தவருக்கு தங்களை மறைத்து, மறைத்து இறுதியில் தாங்களே தங்கள் உண்மைத் தன்மையை அறியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு நம் உண்மையான முகமும், குணமும் நமக்கே பல நேரங்களில் தெரியாமல் போகிறது. இப்படியே நம்முடைய வாழ்வு அமைந்துபோனால் முகமூடிகளே நம்முடைய முகங்களாகிவிடும் அவலம் ஏற்படும்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மீது குற்றம் ஒன்று சுமத்தப்படுகிறது. அது இயேசு தன்னையே கடவுளாக்கிக் கொள்கிறார் என்பதாகும். இயேசு கடவுள் என்கிற முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்ற எண்ணியதில்லை. மாறாக கடவுள் தன்மையே இயேசுவுடைய உண்மைத்தன்மையும் உண்மை இயல்பும் ஆகும். கடவுளின் முகமே அவருடைய உண்மை முகம் என்பதை ஊரறிய அவர் தனது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் எடுத்துக்காட்டினார். ஆம், இயேசுவின் முகமே கடவுளின் முகம். தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை தானும் உணர்ந்து பிறரும் உணரும்படி இயேசுவின் வாழ்வு அமைந்திருந்தது.

முகமூடிகளை அணிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த யூதத் தலைவர்களையும், உண்மை முகங்களை மறந்து மாயைக்குள்ளும் பொய்க்குள்ளும் பொழுதைக் கழித்த மக்கள் கூட்டத்தையும் இயேசு கடவுளின் முகங்களாக இம்மண்ணில் வாழும்படி அழைத்தார். எல்லோருக்குள்ளும் இறைச்சாயல் உறைந்திருக்கிறது என்பதை உறுதிப்பட உரைத்தார். நாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் என்பதே இயேசுவின் படிப்பினை. தொடக்கநூலில் படிப்பதுபோல நாம் அனைவரும் கடவுளின் சாயலிலும் உருவிலும் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அணிந்திருக்கும் முகமூடிகளைக் கிழித்தெறிந்து நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்! 


Thursday, 25 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!

லூக்கா 1:26-38



தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்கூட தோற்றுப்போகும் சில மனிதர்களின் தலையாட்டும் குணத்திற்கு முன்னால். அதிகார வர்க்கத்திற்கும், ஆளும் மனிதருக்கும் தலையாட்டினால் வாழ்வு வளமாக இருக்கும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் இருப்பது கண்கூடு. கண்ணை மூடிக்கொண்டு கைப்பாவை போல அடுத்த மனிதருக்கு மாறுகின்றவர்கள், தங்கள் வாழ்வினை அடுத்தவர் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வாழ்ந்து தொலைக்க நேரிடும். உலகில் பலர் அப்படி வாழ்வதையே விரும்புகின்றனர். தங்கள் வாழ்க்கை என்னும் பட்டத்திற்கான நூலை எவரிடமாவது கொடுத்துவிட்டு, பிரச்சனைகள் புயலாய் வந்து நிற்கும்போது சிக்கி சின்னாபின்னமான மனிதர்கள் இங்கு அதிகம்.   

பணத்திற்கு தலையாட்டி, பதவிக்கு தலையாட்டி, அதிகாரத்திற்கு தலையாட்டி, உறவுக்கு தலையாட்டி, அடக்குமுறைக்கு தலையாட்டி என்று மொத்தத்தில் கடைசிவரை கடவுளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தலையாட்டி வாழும் தரங்கெட்ட  வாழ்வு நம்மில் பலருடையதாக இருக்கிறது. வாழ்க்கை பட்டத்தின் நூல் கடவுளின் கையில் இருந்தால் நமக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் நிச்சயம் உண்டு. ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவரின் கையில் நம்மை ஒப்படைப்பது மிகப் பெரிய ஆபத்தே. மனிதருக்கு ஆம் சொல்லி, மங்கிப்போகும் மண்ணின் மகிழ்ச்சியை மடியில் கட்டிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். மாறாக ஆண்டவருக்கு ஆம் சொல்லி, விண்ணக மகிழ்ச்சியில் நம் வாழ்க்கையின் நிறைவை அடைவோம். 

இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா தன் வாழ்வில் முக்கியமான ஒரு பதில் தருகிறார். மெசியாவின் தாயாக இருப்பாய் என்று, தன்னிடம் மங்கள வார்த்தை சொல்லிய கபிரியேல் வானதூதருக்கு அழுத்தமாய் ஆம் சொல்லிய நாசரேத்து இளம் நங்கை கன்னி மரியா. தரணியின் மனிதர்களுக்கு அல்ல தெய்வத்துக்கு மட்டுமே தலையாட்டும் நெஞ்சுரம் கொண்டவர் மரியா. ஏதோ ஒரு நாளில், ஒரு நிகழ்வில் மட்டுமல்ல, வாழ்வின் இறுதிவரை ஆண்டவருக்கு மட்டுமே ஆம் என்று சொல்லி வாழ்ந்தவர் மரியா. ஆண்டவருக்கு ஆம் சொல்லி அன்னை மரியாவின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போன்று இறைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

உலகத்தையே எதிர்த்து கடவுளுக்கு தலையாட்டினார் கன்னி மரியா. உலகிற்கு தலையாட்டினால் நம்மால் ஒருபோதும் கடவுளுக்கு தலையாட்ட முடியாது. யாருக்கு தலையாட்டினால் நமது வாழ்வில் நிறைவு, நிம்மதி, மகிழ்வு, மீட்பு ஆகியவை கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்கு தெரியும். நமக்கு எது நல்லதென்று நம்மைவிட நம்மைப் படைத்த நம் கடவுளுக்கு நன்கு தெரியும். உலகத்தின் கைகளிலோ, மனிதரின் கைகளிலோ அல்ல, மாறாக ஆண்டவரின் கைகளில் முழுமையாய் சரணடைவதே நம் வாழ்வின் நிறைவுக்கு வழி என்பதை உணர்ந்து, வாழும் காலம் முழுவதும் ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!    


Wednesday, 24 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!

யோவான் 8:31-42



மனித வாழ்க்கை என்பது உண்மை, போலி எனும் இரு வேறுபட்ட முரண்களுக்கிடையே போராடும் ஒரு போர்க்களமே. எங்கும் போலி எதிலும் போலி என்று போலிகள் நிறைந்த உலகம் இது. இங்கு போலிகளுக்கு மவுசு அதிகம், பொய்களுக்கு வரவேற்பு நிறைய. போலிகளை விரும்பும், பொய்மையை நம்பும் மனிதர்கள் நம்மில் பலர் உண்டு. இதனால் உண்மை ஓரம் கட்டப்படுவதும், நிஜம் ஒதுக்கப்படுவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. போலிக்கு பரிவட்டம் கட்டி, உண்மைக்கு பாடை கட்டும் பலரை இங்கு நாளும் எதிர்கொள்கிறோம். 

அரசியல், ஆன்மீகம், உறவு, வாணிகம் என எல்லாவற்றிலும் போலிகள் அதிகரித்துப்போன இக்காலத்தில், மறைக்கப்பட்ட உண்மையை, மழுங்கடிக்கப்பட்ட நிஜத்தை மீண்டும்  நம்முடைய வாழ்வில் கண்டுகொள்வது காலத்தின் கட்டாயம். போலித்தனத்தை நம்பி ஏமாறாமல் இருப்பதும், போலியாய் நடித்து பிறரை ஏமாற்றாமல் இருப்பதும் விடுதலை வாழ்வுக்கான செயல்பாடுகள். போலிக்கு போகி வைப்பதும் உண்மைக்கு உயிர் கொடுப்பதும் எல்லா மனிதருக்குமான கடமையும் பொறுப்புமாகும்.  

மீட்பின் வரலாற்றைக் கூறும் திருவிவிலியம் முழுக்க விரவிக் கிடக்கும் ஒரு யுத்தம் எதுவெனில் அது போலிக்கும் உண்மைக்குமான யுத்தம். பாம்பின் போலியையும், பொய்யையும் நம்பி ஏமாந்துபோன ஏவாளின் கதையில் தொடங்கியது போலியின் வெற்றி. போலியான காயினின் சகோதர பாசத்தை நம்பி உயிரை இழந்த ஆபேல், போலித்தனமான உடன் பிறப்புகளால் விற்கப்பட்ட யோசேப்பு. இப்படியாக தொடர்ந்து பொய்மையும், போலித்தனமும் பலரின் உயிரை, உடைமைகளைக் காவு வாங்கியது. இவ்வாறு போலியின் வெற்றியையும் உண்மையின் தோல்வியையும் மானுட வரலாற்றில் அதிகம் பார்க்க முடியும். அதற்கு காரணம் மானுடம் பொய்க்கு அடிமைப்பட்டதே.

இன்றைய நற்செய்தியில், ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்கிற இயேசுவின் வாக்கு நம்பிக்கைக் கீற்றை நம் மனங்களில் விதைக்கிறது. யூதர்கள் தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும், தாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்றும் பெருமையடித்தபோது, பாவம் செய்கிற எவரும் பாவத்திற்கு அடிமை என்று இயேசு சொல்லி, யூதர்களின் பொய்யான போலியான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டி, அது பாவத்திற்கு அடிமைப்பட்ட வாழ்வு என்று இயேசு கண்டித்தார். 

‘உண்மையா அது என்ன?’ என்ற பிலாத்தின் கேள்வியே இன்று உலகத்தின் கேள்வியாய் உரக்க ஒலிக்கிறது. உண்மைகள் திரிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, போலியும், பொய்யும், புரளியும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன்றைய சமூகத்தில் யூதர்களைப் போன்று பொய்க்கு அடிமையாகாமல், இயேசுவின் வழியில் உண்மையால் நாம் விடுதலை அடைவோம்!