Saturday, 27 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 பிறருக்காக பலியாக முன்வருவோம்! 

யோவான் 11:45-57



அடுத்தவரின் முதுகில் ஏறி சவாரி செய்வது இங்கு பலருக்கு விருப்பமான செயலாக இருக்கிறது. ஆனால் அடுத்தவரை முதுகில் ஏற்றிச் சுமப்பது என்பது பலரால் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அடுத்தவரின் முதுகில் ஏறினால் நமக்கு சுகம் பிறக்கிறது. ஆனால் அடுத்தவரை நம் முதுகில் ஏற்றினால் நமக்கோ சோகம் வருகிறது. நாம் வாழ பிறரை பலியாக்குவோம். ஆனால் பிறர் வாழ நாம் நம்மைப் பலியாக்கிட தயங்குவோம். இன்னும் எவ்வளவு நாள் அடுத்தவரின் தியாகத்தில் நாம் வாழ்வது? இன்னும் எத்தனை பேரின் வாழ்வை நமக்காக பலியாக்கப் போகிறோம்? 

பயன்பாட்டுத் தத்துவம் மிகவும் பெருகிப்போன காலச்சூழலில் நாம் இருக்கிறோம். நாம் வாழ வேண்டுமென்றால் எவரையும் எதுவும் செய்யலாம் என்னும் கருத்து இங்கு எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டுவிட்டது. இது இன்று மனித இதயங்களை இறுகச் செய்துவிட்டது. எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்னும் சொல்லாடல் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. இதுதான் இன்றைய மனிதர்களின் எண்ணமும் வாழ்வும் என்பதை எல்லோரும் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வோம். அடுத்தவரின் அழிவில் தங்களது வாழ்வை கட்டமைக்கும் கயவர் கூட்டம் அதிகம். இவர்கள் பிறருடைய கல்லறையில் தங்களுடைய மாளிகையை கட்டியெழுப்பும் கல் நெஞ்சம் படைத்தவர்கள்.   

இன்றைய நற்செய்தியில் தலைமைச் சங்கத்தினர் கூடி இயேசுவுக்கான சாவுத் தீர்ப்பை முடிவு செய்கிறார்கள். அக்கூட்டத்தில் தலைமைக் குரு கயபா ‘இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது’ என்று சொன்னார். மானுடத்தின் வாழ்வுக்கு தன்னுடைய வாழ்வை இயேசு விலையாகக் கொடுப்பார் என்பதன் அடையாளமே இது. இயேசுவின் வாழ்வும் பணியும் பிறருக்கானதாகவே எப்போதும் அமைந்திருந்தது. தன்னைப் பற்றி ஒருபோதும் அவர் சிந்திக்கக் கூட இல்லை. அவருடைய பணி வாழ்வு அவருடைய பலிக்கான வெள்ளோட்டமே.

பிறரைப் பலியாக்கி தங்களை வாழ்விக்க விரும்பியது யூத குருக்கள் கூட்டம். அதற்காக இயேசுவின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் முடிவு செய்தனர். இயேசுவின் இரத்தத்தில் தங்கள் வாழ்வுக்கு வண்ணம் பூசிக்கொள்ள அவர்களுக்கு அவ்வளவு ஆசை. இயேசுவைத் தொலைத்துக் கட்டும் வரை தங்களுக்கு தூக்கம் இல்லை என்று தீர்மானித்து படைத்தவரையே பலியாக்க, வாழ்வு தந்தவரின் வாழ்வை எடுக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டனர். தன்னைப் பிறருக்காக பலியாக்க விரும்பியது இயேசுவின் மனநிலை. தனக்காக பிறரை பலியாக்கிட விரும்பியது யூத குருக்களின் மனநிலை. நம் மனநிலை இயேசுவின் மனநிலையின் பிரதிபலிப்பாக வேண்டும். பிறர் வாழ்வு பெற நம்மைப் பலியாக்கிட முன்வரும் நல்மனம் நமக்குள் பிறக்க வேண்டும். வாழ்வதைவிட வாழ்விப்பதே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். ஆக நாமும் இயேசுவைப் போல பிறருக்காக பலியாக முன்வருவோம். 


Friday, 26 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்!

யோவான் 10:31-42



முகங்களைவிட முகமூடிகளுக்கே இங்கு முதல் மரியாதை. முகங்களைக் காட்டிலும் முகமூடிகளுக்கே நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம். சாதி, சமயம், மொழி, இனம் போன்றவைதான் உண்மையில் நாம் என்று எண்ணும் அளவிற்கு நாம் அணிந்திருக்கும் முகமூடிகள் இன்று ஏராளம். இதனால் நம் உண்மை உருவையும் சாயலையும், இயல்பையும் தன்மையையும் நாம் மறக்கிறோம், மறைக்கிறோம், மழுங்கடிக்கிறோம். இடத்திற்கும் ஆள்களுக்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல முகமூடிகளை அணிந்துகொள்வது நமக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டது. முகமூடிகளையே தங்களுடைய உண்மைத்தன்மை என்று சொல்லிக்கொண்டு, மெய்யை மறந்து பொய்யின் போர்வைக்குள் மனிதர் பதுங்கிக் கிடக்கின்றனர். தங்களின் முகமூடிகளைக் களைவது மனிதர் பலருக்கு மிகவும் கடினமான செயல். ஏனென்றால் தங்களது உண்மையான முகத்தையும், உருவத்தையும்விட முகமூடியே அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. 

மனிதர்கள் தங்கள் முகத்தை மறைத்து அணியும் முகமூடியினால் பிறருக்கு தங்கள் உண்மையான அடையாளத்தையும், உண்மைத் தன்மையையும் மறைக்கின்றனர். உள்ளே ஒன்றும் வெளியே வேறொன்றுமாக தங்கள் வாழ்வில் முரண்பட்டு நிற்கின்றனர். அடுத்தவருக்கு தங்களை மறைத்து, மறைத்து இறுதியில் தாங்களே தங்கள் உண்மைத் தன்மையை அறியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு நம் உண்மையான முகமும், குணமும் நமக்கே பல நேரங்களில் தெரியாமல் போகிறது. இப்படியே நம்முடைய வாழ்வு அமைந்துபோனால் முகமூடிகளே நம்முடைய முகங்களாகிவிடும் அவலம் ஏற்படும்.  

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மீது குற்றம் ஒன்று சுமத்தப்படுகிறது. அது இயேசு தன்னையே கடவுளாக்கிக் கொள்கிறார் என்பதாகும். இயேசு கடவுள் என்கிற முகமூடியை அணிந்து மக்களை ஏமாற்ற எண்ணியதில்லை. மாறாக கடவுள் தன்மையே இயேசுவுடைய உண்மைத்தன்மையும் உண்மை இயல்பும் ஆகும். கடவுளின் முகமே அவருடைய உண்மை முகம் என்பதை ஊரறிய அவர் தனது வார்த்தையிலும் வாழ்க்கையிலும் எடுத்துக்காட்டினார். ஆம், இயேசுவின் முகமே கடவுளின் முகம். தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை தானும் உணர்ந்து பிறரும் உணரும்படி இயேசுவின் வாழ்வு அமைந்திருந்தது.

முகமூடிகளை அணிந்து ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த யூதத் தலைவர்களையும், உண்மை முகங்களை மறந்து மாயைக்குள்ளும் பொய்க்குள்ளும் பொழுதைக் கழித்த மக்கள் கூட்டத்தையும் இயேசு கடவுளின் முகங்களாக இம்மண்ணில் வாழும்படி அழைத்தார். எல்லோருக்குள்ளும் இறைச்சாயல் உறைந்திருக்கிறது என்பதை உறுதிப்பட உரைத்தார். நாம் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் என்பதே இயேசுவின் படிப்பினை. தொடக்கநூலில் படிப்பதுபோல நாம் அனைவரும் கடவுளின் சாயலிலும் உருவிலும் உண்டாக்கப்பட்டவர்கள். எனவே நாம் அணிந்திருக்கும் முகமூடிகளைக் கிழித்தெறிந்து நமக்குள் உறைந்திருக்கும் தெய்வீகம் காண்போம்! 


Thursday, 25 March 2021

தவக்காலத் திருவுரைகள்

 ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!

லூக்கா 1:26-38



தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்கூட தோற்றுப்போகும் சில மனிதர்களின் தலையாட்டும் குணத்திற்கு முன்னால். அதிகார வர்க்கத்திற்கும், ஆளும் மனிதருக்கும் தலையாட்டினால் வாழ்வு வளமாக இருக்கும் என்ற எண்ணம் நம்மிடையே அதிகம் இருப்பது கண்கூடு. கண்ணை மூடிக்கொண்டு கைப்பாவை போல அடுத்த மனிதருக்கு மாறுகின்றவர்கள், தங்கள் வாழ்வினை அடுத்தவர் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வாழ்ந்து தொலைக்க நேரிடும். உலகில் பலர் அப்படி வாழ்வதையே விரும்புகின்றனர். தங்கள் வாழ்க்கை என்னும் பட்டத்திற்கான நூலை எவரிடமாவது கொடுத்துவிட்டு, பிரச்சனைகள் புயலாய் வந்து நிற்கும்போது சிக்கி சின்னாபின்னமான மனிதர்கள் இங்கு அதிகம்.   

பணத்திற்கு தலையாட்டி, பதவிக்கு தலையாட்டி, அதிகாரத்திற்கு தலையாட்டி, உறவுக்கு தலையாட்டி, அடக்குமுறைக்கு தலையாட்டி என்று மொத்தத்தில் கடைசிவரை கடவுளைத் தவிர மற்ற அனைத்திற்கும் தலையாட்டி வாழும் தரங்கெட்ட  வாழ்வு நம்மில் பலருடையதாக இருக்கிறது. வாழ்க்கை பட்டத்தின் நூல் கடவுளின் கையில் இருந்தால் நமக்கு பாதுகாப்பும் பராமரிப்பும் நிச்சயம் உண்டு. ஆனால் அவரைத் தவிர வேறு ஒருவரின் கையில் நம்மை ஒப்படைப்பது மிகப் பெரிய ஆபத்தே. மனிதருக்கு ஆம் சொல்லி, மங்கிப்போகும் மண்ணின் மகிழ்ச்சியை மடியில் கட்டிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். மாறாக ஆண்டவருக்கு ஆம் சொல்லி, விண்ணக மகிழ்ச்சியில் நம் வாழ்க்கையின் நிறைவை அடைவோம். 

இன்றைய நற்செய்தியில் அன்னை மரியா தன் வாழ்வில் முக்கியமான ஒரு பதில் தருகிறார். மெசியாவின் தாயாக இருப்பாய் என்று, தன்னிடம் மங்கள வார்த்தை சொல்லிய கபிரியேல் வானதூதருக்கு அழுத்தமாய் ஆம் சொல்லிய நாசரேத்து இளம் நங்கை கன்னி மரியா. தரணியின் மனிதர்களுக்கு அல்ல தெய்வத்துக்கு மட்டுமே தலையாட்டும் நெஞ்சுரம் கொண்டவர் மரியா. ஏதோ ஒரு நாளில், ஒரு நிகழ்வில் மட்டுமல்ல, வாழ்வின் இறுதிவரை ஆண்டவருக்கு மட்டுமே ஆம் என்று சொல்லி வாழ்ந்தவர் மரியா. ஆண்டவருக்கு ஆம் சொல்லி அன்னை மரியாவின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போன்று இறைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

உலகத்தையே எதிர்த்து கடவுளுக்கு தலையாட்டினார் கன்னி மரியா. உலகிற்கு தலையாட்டினால் நம்மால் ஒருபோதும் கடவுளுக்கு தலையாட்ட முடியாது. யாருக்கு தலையாட்டினால் நமது வாழ்வில் நிறைவு, நிம்மதி, மகிழ்வு, மீட்பு ஆகியவை கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்கு தெரியும். நமக்கு எது நல்லதென்று நம்மைவிட நம்மைப் படைத்த நம் கடவுளுக்கு நன்கு தெரியும். உலகத்தின் கைகளிலோ, மனிதரின் கைகளிலோ அல்ல, மாறாக ஆண்டவரின் கைகளில் முழுமையாய் சரணடைவதே நம் வாழ்வின் நிறைவுக்கு வழி என்பதை உணர்ந்து, வாழும் காலம் முழுவதும் ஆண்டவருக்கு ‘ஆம்’ சொல்வதில் ஆனந்தம் அடைவோம்!