Tuesday, 30 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் செவ்வாய்

 பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!

யோவான் 13:21-33, 36-38



பள்ளங்களை நிரப்புவது மிக எளிது. ஆனால் பாதாளங்களை நிரப்புவது மிகக் கடினம். நம்முடைய பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே அவற்றை நாம் சரிசெய்துவிட வேண்டும். அப்படி செய்யத் தவறினால், நம்முடைய பலவீனங்கள் பாதாளங்களாக மாறிவிட்ட பின்பு, நாம் அவற்றைச் சரி செய்ய இயலாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம். ஆகவே நமது பலவீனங்கள் பள்ளங்களாக இருக்கும் பொழுதே நாம் அவற்றை இறையருள்கொண்டு நிரப்பிவிடுவோம். இல்லாவிட்டால் பள்ளங்கள் பாதாளங்களாய் மாறிப்போகும். 

இது ஒரு சிறிய பலவீனம்தானே, யாருக்குத்தான் இல்லை இந்த பலவீனம், பலவீனம் எல்லாம் ஒரு பெரிய குற்றம் ஒன்றும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாம் பலவீனங்களில் சுகித்திருக்கத் தொடங்கினால், நம்முடைய பலவீனங்கள் பாவங்களாய் உருவெடுக்கும் பேரவலம் ஏற்படும். பலவீனங்கள் காலப்போக்கில் கண்டிப்பாக பாவங்களாக வடிவம் பெறத் தொடங்கும். பலவீனங்களை வெற்றி கொள்ளாமல் வாழ்வில் சாதனை சாத்தியமில்லை. நமது பலவீனங்களால் நம்முடைய பலம் மறைக்கப்படும். நம்முடைய பலவீனங்கள் நமது பலங்களைப் புதைத்துவிடும்.  

பலவீனங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல இருப்பது இல்லை. அதே சமயத்தில் அப்பலவீனங்களை மனிதர்கள் கையாளும் விதமும் ஒன்றுபோல இருப்பதுமில்லை. இன்றைய நற்செய்தியில் இரு மனிதர்களின் பலவீனங்களை நம்மால் பார்க்க முடியும். ஒன்று யூதாசு இஸ்காரியோத்து. மற்றொன்று சீமோன் பேதுரு. யூதாசுக்கு ஒரு பலவீனம் இருந்தது. அது பணம் என்னும் பாதாளமாக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. பேதுருவுக்கும் ஒரு பலவீனம் இருந்தது. அது பயம் என்னும் பள்ளம் ஆக இருந்தது என நற்செய்தி சொல்கிறது. தன்னுடைய பலவீனத்தால் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். தன்னுடைய பலவீனத்தால் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பணம் காட்டிக்கொடுக்கச் செய்தது. பயம் மறுதலிக்கச் செய்தது.     

யூதாசு தன் பலவீனமாகிய பணம் எனும் பள்ளத்தை அறியவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவன் அந்த பணம் எனும் பள்ளத்தை நிரப்பிட முடியாமல், பள்ளத்தை பாதாளமாக்கி இயேசுவைக் காட்டிக்கொடுத்து அதிலேயே விழுந்துவிட்டான். ஆனால் பேதுரு தன்னுடைய பலவீனமாகிய பயம் எனும் பள்ளத்தை அறிந்து, ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் இயேசுவை மறுதலித்து அந்த பயம் எனும் பள்ளத்தில் விழுந்தாலும் மீண்டும் எழுந்து, இறையருளால் அப்பள்ளத்தை நிரப்புவதில் வெற்றி கண்டார். வாழ்க்கையில் நமக்கும் பலவீனங்கள் உண்டு. யூதாசைப் போன்று நாம் ஒருபோதும் பள்ளங்களை பாதாளங்களாக்கிவிட வேண்டாம், பலவீனங்களை பாவங்களாக்கிவிட வேண்டாம். மாறாக நாம் பேதுருவைப் போல நம்முடைய பலவீனங்கள் எனும் பள்ளங்களை நிரப்பிடுவோம்!

Monday, 29 March 2021

தவக்காலத் திருவுரைகள் - புனித வாரத்தின் திங்கள்

 பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!  

யோவான் 12:1-11



பொதுவாகவே நான் இதைச் செய்தால் பிறர் என்னை என்ன நினைப்பார்கள், நான் இப்படி நடந்துகொண்டால் பிறர் என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பவை போன்ற எண்ண ஓட்டங்களே நம் வாழ்வுச் செயல்பாடுகளை அதிகம் கட்டுப்படுத்துகின்றன. ஆன்மீக காரியங்களில் இது இன்னும் கூடுதல் உண்மையாக இருக்கிறது. நம்மை இயக்கும் சாவியாக பிறர் நம்மைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணப்போக்கு ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது. நமது செயல்பாடுகள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில் பிறர் நினைப்பது பற்றி நாம் பயமோ பதட்டமோ அடைய அவசியம் இல்லை.   

இன்றைய நற்செய்தியில் புனித வாரத்தின் திங்களில் இயேசுவின் வாழ்வின் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடம்பரமாய் வெற்றி பவனியாய் எருசலேம் நகருக்குள் முதல் நாள் நுழைந்த இயேசு, அடுத்த நாளே எருசலேம் ஆலயத்தை தூய்மை செய்கிறார். அதற்குப் பிறகு இயேசு பெத்தானியாவுக்குச் செல்கிறார். அங்குதான் இயேசு இறந்துபோன இலாசரை நான்கு நாள்களுக்குப் பிறகு உயிர்ப்பித்திருந்தார். இப்போது இலாசருடைய வீட்டில் இயேசுவுக்கு விருந்து பரிமாறப்படுகிறது. அச்சமயத்தில் இலாசரின் சகோதரி மரியா இலாமிச்சை நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் ஊற்றி தன் கூந்தலால் துடைக்கத் தொடங்கினார். இச்செயல் யூதாசால் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. ஆனால் இயேசுவுக்கு அவளின் செயல் பிடித்திருந்தது.  

எவர் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. என் ஆண்டவராம் இயேசுவின் மீது நான் கொண்டிருக்கும் புனிதமான அன்பை எனக்கு தெரிந்த சிறிய வழியில் எப்படியும் வெளிப்படுத்தியே தீருவேன். அடுத்தவர் பார்த்து நகைத்தாலும், தடுத்தாலும் இயேசுவின் மீதான என் பவித்திரமான அன்பை வெளிப்படுத்தும் பரிசுத்தமான இச்செயலை எப்படியும் செய்தே தீருவேன் என்பதே மரியாவின் திண்ணமான முடிவு. எனவே தான் பொதுவெளியில் அத்தனை பேருக்கு முன்னால் அச்சம் அணுவளவுமின்றி அவள் அன்பால் இயக்கப்பட்டவளாய் ஆண்டவரின் பாதங்களை பக்தியோடு அர்ச்சனை செய்தாள். அதுவே நம் பக்தி முயற்சிகளின் முன்னோடி.  

நாமும் நம் வாழ்வில் இயேசுவின் மீது கொண்டிருக்கும் அன்பை அடுத்தவர் முன்பாக அவையில் காட்டும் அசாத்திய துணிச்சல் நமக்கு இருக்கிறதா? அடுத்தவர் என்னவெல்லாம் நினைத்தாலும் அது பற்றி கவலை கொள்ளாமல், ஆண்டவர் மீதுள்ள நம்முடைய அன்பை வெளிப்படுத்தும் அன்பு நிறை பக்தி செயல்பாடுகளில் நம்மால் சமரசம் செய்யாமல் இருக்க முடியுமா? பொதுவெளிகளில் இயேசுவின் மீதான அன்பை செயலில் காட்டிட, பணம், மானம், மதிப்பு, மரியாதை, கௌரவம், சொத்து, உடைமை இவற்றை எல்லாம் இயேசுவின் மீது கொண்டுள்ள கள்ளமில்லா அந்த அன்பை வெளிப்படுத்துவதற்காக தியாகம் செய்யும் திராணி நமக்கு உண்டா? என்று நம்மையே கேட்டுப்பார்ப்போம். இனியாவாது மரியாவைப் போன்று நம்மிலும் பயம் விலகட்டும்! பக்தி ஓங்கட்டும்!  

Sunday, 28 March 2021

தவக்காலத் திருவுரைகள் - குருத்து ஞாயிறு

இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!

மாற்கு 11:1-10


ஒருநாள் எருசலேமின் வீதியில் இரு கழுதைகள் பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது: ‘இந்த எருசலேம் நகரின் வீதியில்தான் நேற்று நான் பவனியாய் வந்தேன். எவ்வளவு வரவேற்பு! எத்தனை உபசரிப்பு! ஆனால் இன்றும் அதே பாதையில்தான் வருகிறேன். ஆனால் இன்று என்னைக் கவனிப்பார் எவருமில்லை’. இன்னொரு கழுதை சொன்னது: ‘நீ சொல்வது உண்மைதான். நேற்று உனக்கு மிகப் பெரிய வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் கிடைத்தது. ஆனால் அது உனக்கானது அல்ல. நீ சுமந்த வந்த இயேசுவுக்கு இம்மக்கள் கூட்டம் கொடுத்தது. அவர் உன் மீது அமர்ந்திருந்ததால் அது உனக்கும் கிடைத்தது. நீ யாரைச் சுமக்கின்றாயோ, எதைச் சுமக்கின்றாயோ அதைப் பொறுத்தே உன் மதிப்பு அமையும்’. 

மனிதர்களாகிய நாமும் நம்முடைய உள்ளத்தில் யாரைச் சுமக்கின்றோம், எதைச் சுமக்கின்றோம் என்பவற்றைப் பொறுத்தே நம்முடைய வாழ்வின் மதிப்பு தீர்மானிக்கப்படும். ஒரு பாத்திரத்தில் மண்ணும் இன்னொரு பாத்திரத்தில் பொன்னும் இருந்தால், பொன் இருக்கும் பாத்திரத்தின் மதிப்பே பெரிதாகக் கருதப்படும். மண்ணைச் சுமக்கும் மடையர்களாக அல்ல, பொன்னைச் சுமக்கும் பாக்கியசாலிகளாக வாழ்வதே நம் வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும். நம்முடைய வாழ்வில் நாம் எதைச் சுமக்கிறோம் என்று சிந்திப்போம்.  

இயேசுவின் மகிமையைத் தானும்  அனுபவிக்க அன்று அக்கழுதை நான்கு காரியங்களை செய்தது. 

1. யாரும் அதுவரை அமராததாக அது இருந்தது. 

2. இருக்கும் இடத்திலிருந்து அவிழ்த்து வரப்பட்டது. 

3. இயேசு இருக்கும் இடத்திற்கு வந்தது. 

4. இயேசுவை விரும்பிச் சுமந்தது. 

இதையே இன்று நாமும் செய்யத் துணிவோம். 

அற்ப மனிதர்களும், அவர்களது ஆக்கப்பூர்வமற்ற கருத்தியல்களும் நம்மீது சவாரி செய்ய ஒருபோதும் அனுமதியாதிருப்போம். இயேசுவைச் சுமக்க வேண்டிய நமது வாழ்க்கையில், உலகின் எச்சங்களையும், மிச்சங்களையும் சுமந்து நொந்து போக வேண்டாம். இயேசுவே நம்மீது அமரட்டும். அவருடைய இறையாட்சி விழுமியங்களும் மதிப்பீடுகளும் நம்மீது சவாரி செய்யட்டும்.  சொல்லிலும் செயலிலும் நாம் இயேசுவையே சுமந்து போவோம். 

அன்று எருசலேம் நகரில் எத்தனையோ கழுதைகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் இயேசு ஏதோ ஒரு கழுதையை மட்டும் அவர் தன்க்காக தெரிவு செய்தார். அக்கழுதையை இயேசு மிகவும் கவனமாய்த் தன்னுடைய பயணத்திற்கு தேர்ந்தெடுத்தார். ‘இந்த கழுதைக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்’ என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். இயேசுவால் அன்று அந்த எருசலேம் கழுதைக்கு வாழ்வு வந்தது. நாமும் இயேசுவுக்கு கழுதையானால் நமக்கும் இன்று அச்சிறப்பான வாழ்வு வரும். ‘நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்’ என்று சொல்வதைப் போன்று இயேசுவுக்கு கிடைப்பது அனைத்தும் இயேசுவைச் சுமக்கும் நம் அனைவருக்கும் கிடைக்கும். எனவே, நாமும் அன்றாடம் சொல்லிலும் செயலிலும் இயேசுவைச் சுமக்கும் கழுதை ஆவோம்!