Wednesday, 5 May 2021

வணக்க மாதம் : நாள் -5

 முட்புதரின் அன்னை

(பிரான்ஸ் - மார்னே)



1400 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருவிழாவின் முந்திய நாள் இரவு, பிரான்சின் மார்னே என்னும் இடத்தின் அருகே ஆடு மேய்ப்பவர்கள் சிலர் தங்கள் கிடைகளை காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் தூரத்தில் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் ஒன்றைக் கண்டார்கள். 

அவர்கள் அந்த வெளிச்சம் வரும் இடத்தை நெருங்கியபோது, அது முட்புதரிலிருந்து வருகிறது என்பதையும், அம்முட்புதரின்  கிளைகளும் இலைகளும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்படவில்லை என்பதையும் கண்டார்கள். மேலும் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சிறு பாதிப்புமில்லாமல் இருந்த புனித மரியன்னையின் திருவுருவச்சிலை ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். 

இந்த அதிசயம் அன்றிரவிலிருந்து மறுநாள் வரையிலும் தொடர்ந்தது. இச்செய்தி விரைவாக அப்பகுதி எங்கும் பரவியது. எரியும் புதரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் திரண்டது, அது ஒரேபு மலையில் மோசே கண்ட முட்புதரை நினைவூட்டுகிறது. சலோன்ஸ் மறைமாவட்ட ஆயர் சார்லஸ் போய்ட்டர்ஸ் என்பவரும் எரியும் முட்புதரையும் அதிசயமான அந்த மரியன்னையின் திருவுருவச்சிலையையும் நேரில் கண்டதோடு, இரண்டும் நெருப்பால் பாதிக்கப்படவில்லை என்று சாட்சியம் அளித்தார். 

இறுதியாக தீப்பிழம்புகள் அணைந்த பின்பு, ஆயர் மிகுந்த பயபக்தியுடன் தனது கைகளில் அச்சிலையை எடுத்து, அருகிலுள்ள புனித யோவான் ஆலயத்தில் அதனை நிறுவினார். பின்னர் அதிசயம் நடைபெற்ற தளத்திலேயே ஓர் ஆலயம் கட்டப்பட பணிகள் தொடங்கின. இந்த ஆலயம் கட்டப்பட்டபோது, கட்டடத் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றபின் வானதூதர்கள் இரவில் கட்டட வேலையைத் தொடர்ந்து செய்தனர் என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுவருகிறது. 

அதிசயமான இந்த முட்புதரின் அன்னை மரியாவின் திருவுருவச் சிலைக்கு முடிசூட்டுவதற்கு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ (சிங்கராயர்) உத்தரவிட்டார்.  



திருவிழா நாள்: பிப்ரவரி 16

செபம்: முட்புதரின் அன்னையே! எரியும் முட்புதரிலும் தீங்கின்றி நீர் பிரகாசித்தீரே. எங்கள் வாழ்க்கையில் நாங்களும் துன்பங்களால் புடமிடப்படும்போது, இறைநம்பிக்கையில் நலிவுறாமல் பிரகாசிக்கவும், தொடர்ந்து உம் திருமகனின் பாதையில் பயணிக்கவும் அருள் பெற்றுத் தாரும். ஆமென். 


Tuesday, 4 May 2021

வணக்க மாதம் : நாள் - 4

    கண்ணீரின் அன்னை

                                                            (பிரேசில் - காம்பினா)



சமீபத்திய நூற்றாண்டுகளில், புனித மரியன்னை தன்னுடைய சில திருக்காட்சிகளில் கண்ணீர் வடித்தார் என்று அறிகிறோம். குறிப்பாக, 1846 ஆம் ஆண்டு, செப்டம்பர் 19, அன்று லா சலேத்தில் காட்சியளித்;தபோது மரியா கண்ணீர் சிந்தினார். 1953 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 2 வரை இத்தாலியின் சிசிலியில் ஓர் ஏழைத் தொழிலாளியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த புனித மரியாவின் திருப்படத்தில் அன்னை மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்தார். ஒரு முழுமையான நீண்ட விசாரணைக்குப் பின்னர் இத்தாலியின் சிசிலி ஆயர்கள் மாமன்றம் இந்த கண்ணீரின் அற்புதத்தை உறுதிப்படுத்தியது. அதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வந்தனர். மேலும் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் வானொலியில் ஒரு முறை உரையாற்றும்போதும் இந்நிகழ்வைக் குறித்து, ‘ஓ மரியாவின் கண்ணீர்!’ என்று நெகிழ்ந்தார்.

1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவில் இருந்த இயேசுவின் திருக்காய வரம் பெற்றிருந்த அருள் சகோதரி அமலியா, தனது உறவினர் ஒருவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவருக்காக வருத்தத்தோடு இயேசுவிடம் செபிக்க எண்ணினார். 

1929 ஆம் ஆண்டு, நவம்பர் 8 அன்று அருள்சகோதரி அமலியாவுக்கு நம் ஆண்டவர் அருளிய வார்த்தைகள்: ‘என் மகளே, என் தாயின் கண்ணீர் வழியாக எதைக் கேட்டாலும், நான் அன்பாகக் கொடுப்பேன்.’ 

1930 ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று அருள்சகோதரி அமலியாவிடம் மிகவும் பரிசுத்தமான கன்னி மரியா இவ்வாறு கூறினார்: ‘இந்த கண்ணீரின் செபமாலை மூலம் பிசாசு அடங்கி, நரகத்தின் சக்தி அழிக்கப்படும். இந்த மாபெரும் போருக்கு உங்களை தயார்படுத்துங்கள்.’

இவ்வாறு அருள்சகோதரி அமலியாவுக்கு இறைவன் மற்றும் அவரது மிகவும் பரிசுத்தமான தாயாரால் இந்த கண்ணீரின் செபமாலை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆயர் காம்போஸ் பாரெட்டோவால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.



திருவிழா கொண்டாடப்படும் நாள்: சனவரி 24

செபம்: கண்ணீரின் அன்னையே! உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பலியோடு, உமது ஈடு இணையற்ற கண்ணீரையும் இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினீரே. உம்மைப்போல நாங்களும் எங்கள் கண்ணீரை மீட்புக்கானதாய் மாற்றிடவும், துன்பங்கள் மத்தியில் இயேசுவின் பாதையில் துணிவுடன் நடக்கவும் எங்களுக்கு அருள் பெற்றுத்தாரும். ஆமென்.


Monday, 3 May 2021

வணக்க மாதம் : நாள் - 3

 நம்பிக்கையின் அன்னை

(பெல்ஜியம் - லீஜ்)



லீஜ் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் செல்லஸ் என்பவரின் வீட்டிற்கு அருகில் இரண்டு அற்புதமான ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. 1609 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பழைய மரங்களில் ஒன்று கில்லஸ் என்னும் மரம் வெட்டுபவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரத்தின் உட்புறத்தை பரிசோதித்த அம்மரம் வெட்டும் மனிதர்,  மூன்று இரும்புக் கம்பிகளுடன், ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் மீது அமர்ந்த வண்ணம் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட புனித மரியன்னையின் ஒரு சிறிய திருவுருவச் சிலையைக் கண்டார். 

முன்பு அந்த ஓக் மரம் இளமையாக இருந்திருந்த காலத்தில் அவ்வழியே பயணம் செய்திருந்த நல்ல கிறிஸ்தவர்களுள் எவராவது ஒருவர், அந்த மரத்தில் காணப்பட்ட ஒரு துவாரத்தில் இந்த மரியன்னையின் திருவுருவச் சிலையை வைத்திருக்க வேண்டும். பின்பு காலப்போக்கில் திறந்திருந்த அந்த துவாரம்  படிப்படியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வளர வளர, அம்மரம் தன்னுடைய வயிற்றில் அச்சிறப்புக்குரிய மரியன்னையின் திருவுருவச் சிலையை சிதைவுறாமல் தாங்கியபடியே இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்வுக்குப் பின்னர், செல்லஸ் என்னும் அந்த உரிமையாளர் விரும்பியபடியே புனித கன்னி மரியாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அத்திருவுருவச் சிலையை மீண்டும் அங்கிருந்த மற்றொரு ஓக் மரத்தின்மீது நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது மரத்தில் நிறுவப்பட்ட கடவுளின் தாய் மரியாவின் திருவுருவத்தை ‘எங்கள் நம்பிக்கையின் தாய்’ என்ற தலைப்பில் மக்கள் வணங்கத் தொடங்கினர். பல அதிசயிக்கத்தக்க குணப்படுத்துதல்கள் அவ்விடத்தில் நடைபெற்றன. இவ்வாறு ஆச்சரியமூட்டும் அற்புதங்களால் விரைவில் திருப்பயணிகள் அந்த பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர். 

இப்பக்தி முயற்சியை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதல் ஓக் மரத்திலிருந்து உண்மையான அன்னையின் திருவுருவத்தைப் போலவே ஒரு திருவுருவச் சிலையைச் செய்யச் சொன்னார். வியப்பூட்டும் வகையில் இரண்டாவதாக செய்யப்பட்ட அத்திருவுருவம் அப்படியே முதலாவதை ஒத்து இருந்தது. இந்த இரண்டாவது திருவுருவச் சிலையானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் பங்கு ஆலயத்தில் ஆடம்பரமாய் நிறுவப்பட்டது. 1622 ஆம் ஆண்டிலிருந்து இந்த நம்பிக்கை அன்னையின் பக்தி முயற்சி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியது. 



திருவிழா கொண்டாடப்படும் நாள்: ஜீலை 27

செபம்: அற்புதமாய் ஓக் மரத்தில் வீற்றிருந்த புனித அன்னையே! உம் கருணையும் கரிசனையும் எங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும். அன்றாட வாழ்வில் எங்களுக்கு அருளின் வாய்க்காலாய் நீரே இருந்தருளும். எங்கள் நம்பிக்கையில் நாளும் எங்களை புதுப்பித்தருளும். ஆமென்.