Friday, 14 May 2021

வணக்க மாதம் : நாள் -14

 மலைகளின் அன்னை

(இத்தாலி - லோம்பார்டி)



இத்தாலியின் லோம்பார்டியில் உள்ள வரீஸில் உள்ள புனித மலையின் வரலாறு, நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மிலன் நகர ஆயரான புனித அம்புரோசுக்கு மரியன்னை தோன்றியதை நினைவுகூரும் வகையில் அங்கு கட்டப்பட்ட ஓர் ஆலயத்தில் இருந்து தொடங்குவதாகக் கூறப்படுகிறது.

புனித அம்புரோஸ் ஓர் ஆயராகவும், திரு அவையின் தொடக்க காலத் தந்தையருள் ஒருவராகவும், அவருடைய சம காலத்தில் பழக்கத்தில் இருந்த ஆரியத் தப்பறைக் கொள்கைக்கு எதிராக மிகவும் கடுமையாகப் போதித்தார். 

புனித அம்புரோஸ் கடவுளின் தாயான மரியாவின் சிறந்த பக்தராகவும், ஆதரவாளராகவும் இருந்தார். ஆரியத் தப்பறைக் கொள்கையுடனான மோதலின் போது ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியா ஆயரான புனித அம்புரோசுக்கு தோன்றினார் என்றும், புனித அம்புரோஸ் கடவுளின் தாயின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு காட்சி அளித்த அந்த இடத்தில் மலைகளின் அன்னையின் ஆலயத்தைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது, 

இந்த புனித மலையானது குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் அகுஸ்தீனிய கன்னியர்களின் துறவு மடம் அப்பகுதியில் நிறுவப்பட்ட பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. 

பண்டைய காலங்களில் இந்த மலை பிற தெய்வங்களின் வழிபாட்டில் வெற்றியின் பெண் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதி மலைகளின் அன்னை மரியாவின் பெயரால் இப்போது வரீஸின் புனித மலை என்று அழைக்கப்படுகிறது, மேலும் 1604 மற்றும் 1623 ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் பதினான்கு சிற்றாலயங்கள் இம்மலையில் கட்டப்பட்டுள்ளன. 

திருவிழா நாள்: ஜூன் 4

செபம்: மலைகளின் அன்னையே! உண்மையை அறிந்துகொள்ளவும், உண்மையையே வாழ்வாக்கவும் உயர்ந்த மலையில் காட்சி தந்து கற்பித்தீரே. நாங்களும் எங்கள் வாழ்க்கையில் உண்மையை அறியவும், வாழ்ந்திடவும் உண்மைக் கடவுளின் பக்கம் எங்களை கொண்டு சேர்த்தருளும். ஆமென். 


Thursday, 13 May 2021

வணக்க மாதம்: நாள் -13

 வனங்களின் அன்னை

(இத்தாலி - கல்லோரோ)



1621 ஆம் ஆண்டில் கல்லோரோவில் அனாதையாக இருந்த சாந்தி பெவிலாக்வா என்ற சிறு பையன் தன் மாமாவுடன் வசித்து வந்தான். ஆடுகளைப் மேய்ப்பதற்காக சாந்தி பெவிலாக்வா காட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தான். அவ்வாறு சென்ற சாந்தி பெவிலாக்வா பெர்ரி பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு புதருக்குள் தடுமாறி விழுந்தான். 

பின்பு மீண்டும் தன்னைச் சரிசெய்து அவன் எழுந்தபோது, அங்கே ஒரு சிறிய ஓட்டின் மீது வரையப்பட்டிருந்த மரியாவின் திருப்படத்தைப் பார்த்தான். மிகவும் பக்தியுள்ள ஒரு சிறுவனாக இருந்ததால், அவன் மண்டியிட்டு அங்கேயே செபிக்கத் தொடங்கினான். பின்னர், அடுத்த நாள் அவன் கையில் பூச்செண்டுடன் அந்த இடத்திற்கு திரும்பி வந்தான். விரைவில் அவனது நண்பர்கள் பலரும் அவனுடன் காட்டில் உள்ள மரியாவுக்கு வணக்கம் செலுத்த வந்தனர். அவர்களும் பூக்களைக் கொண்டுவந்து தூவி, மரியாவின் புகழ் பாடல்களைப் பாடினார்கள். இது அண்டை வீட்டாருக்கு அறவே பிடிக்கவில்லை, அவர்கள் பல குழந்தைகள் அப்பக்கம் கடந்து செல்வதால் தங்கள் பெர்ரி பழங்கள் திருடுபோகுமோ என்று அஞ்சினர். இறுதியாக, குழந்தைகள் தாங்களே ஒரு பாதையை உருவாக்குவது பற்றி யோசித்து, விவேகமின்றி புதருக்கு தீ வைத்தனர். அத்தீ மிகவே பரவியது. இதனால் அவர்கள் காடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

சில நாள்களுக்குப் பின்பு, சாந்தி தனது மாமாவின் தச்சு கடையில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மூலையில் மரக்கட்டைகளின் அருகே தூங்கிவிட்டான். அவன் தூங்கும்போது மரம் வெட்டும் துண்டு அவர் மீது விழுந்தது. அவன் வனங்களின் அன்னையைத் தன்னைக் காப்பாற்றும்படி அழைத்து கத்தியபடியே விழித்தான். பயந்துபோன அவனது மாமா, மரக்கட்டைகளை அகற்றி, சிறுவனை காயமடையாமல் கண்டுபிடித்து, அவரை யார் காப்பாற்றினார் என்று தெரிந்துகொள்ளும்படி அவனைக் கேட்டார். அச்சிறுவனும் கல்லோரோவில் வனங்களின் அன்னை பற்றி சொன்னான். பின்பு பல தடைகளுக்குப் பின்பு சாந்தி பெவிலாக்வாவின் மாமாவின் பெரும் முயற்சியால், அங்கே வனங்களின் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. 

திருவிழா நாள்: செப்டம்பர் 5

செபம்: வனங்களின் அன்னையே! இயற்கையின் எழிலில் நீர் உம்மை எங்களுக்கு எப்போதும் வெளிப்படுத்துகிறீர். எம் வாழ்வும் வனங்களைப் போல் அழகும் எழிலும் பசுமையும் செழுமையும் நிறைந்ததாய் மாறிட எங்களுக்கு நீர் உதவி செய்யும். ஆமென். 


Wednesday, 12 May 2021

வணக்க மாதம் : நாள் -12

 குருத்தோலைகளின் அன்னை 

(ஸ்பெயின் - காடிஸ்)



குருத்தோலைகளின் அன்னை ஆலயத்தில் சில காலத்திற்கு முன்பே நடந்த அதிசயம் ஒன்று புகழ் பெற்றது. அதற்கு ஏன் குருத்தோலைகளின் அன்னை என்று பெயரிடப்பட்டது என்பது குறித்த சரியான பதிவு எதுவும் இல்லை.

1755 நவம்பர் முதல் தேதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளின் தாக்கத்தின் போது இந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த நாளில் மிகவும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது, அது ஐரோப்பா முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்ஜீசிராஸ் என்பது ஸ்பெயினின் ஒரு துறைமுகமாகும்.

அல்ஜீசிராஸின் நகர மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் நீர் வாயில்களை மூடிவிட்டு, குருத்தோலைகளின் அன்னை ஆலயத்திற்கு செல்லுமாறு மக்களை வலியுறுத்தினர். அப்போது ஆலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. 

அருள்பணியாளர் அமைதியாக திருப்பலியை முடித்துவிட்டு, கையில் குருத்து மடல்களின் அன்னையின் திருப்படத்தை ஏந்தியவாறு, தெருவில் வெளியே சென்றார். அங்கு ஏற்கனவே தண்ணீர் சுவர்களைத் தள்ளி முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது அருள்பணியாளர் பெரிய அலையின் பயங்கரச் சூழலில் தெருவில் அன்னையின் படத்தை ஊன்றிவிட்டு, “இதுவரை போதும், என் அம்மா” என்று உரத்த குரலில் கத்தி வேண்டினார்.

தண்ணீர் அன்னையின் திருப்படத்தின் வரை முன்னேறியது, பின்னர் அதிசயமாக அதன் முன்னோக்கி வருவதை நிறுத்தியது. அதுவரை தண்ணீர் அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்திருந்தாலும் கூட, அருள்பணியாளர் தனது உயர்த்தப்பட்ட கையில் அன்னையின் படத்துடன் தைரியமாக நீர் மதில் சுவரை நோக்கி நடந்து செல்லும்போது, அந்த பிரம்மாண்டமான அலை அவரிடமிருந்து விலகி, மரியன்னையின் முகத்திலிருந்து விலகி, மீண்டும் கடலுக்குத் திரும்பியது.

திருவிழா நாள்: நவம்பர் 1

செபம்: குருத்தோலைகளின் அன்னையே! வாழ்க்கையில் சரிவுகளும் சறுக்கல்களும் எங்களை அச்சத்திலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், நீர் உம் பிள்ளைகளாகிய எங்களோடு எப்போதும் உடனிருந்து உதவி செய்யும்.  ஆமென்.