Monday, 6 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 6

 ஈசாக்கு



தொடக்கநூல் 22: 14

இன்றைய நாளின் சிந்தனை : ஈசாக்கு

இன்றைய நாளின் குறியீடு : செம்மறி ஆடு


கடவுள் முதிர்ந்த வயதில் ஆபிரகாமிற்கும், சாராயிற்கும் ஒரு மகனைக் கொடுத்தார். அக்குழந்தைக்கு ஈசாக்கு என்று அவர்கள் பெயரிட்டார்கள். எபிரேய மொழியில் ஈசாக்கு என்பதற்கு ‘சிரிப்பவன்’ என்று அர்த்தம். கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும், இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர் என்றும் இந்த ஈசாக்கின் பிறப்பினைக் குறித்து சாரா சொன்னார். 

ஆபிரகாமின் நூறாம் வயதில் ஈசாக்கு பிறந்தான். காலம் கடந்து பிறந்த தன்னுடைய ஆசை மகன் ஈசாக்கின் மீது ஆபிரகாம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஒருமுறை கடவுள் ஆபிரகாமைக் கூப்பிட்டு மோரியா மலையில் ஈசாக்கைத் தனக்கு எரிபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொன்னார். மறுப்போ, மனக் கசப்போ எதுவும் இல்லாமல் மகனைப் பலியாக ஒப்புக்கொடுக்க ஆபிரகாம் புறப்பட்டார். 

ஈசாக்கின் மீது விறகுக் கட்டைகளை சுமத்தி, ஆபிரகாம் தன்னுடைய கைகளில் நெருப்பும், கத்தியும் எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அங்கே பலிபீடம் அமைத்து ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மீதிருந்த விறகுக்கட்டைகளின் மேல் கிடத்தினார். முகனை வெட்ட ஆபிரகாம் கத்தியைக் கையில் எடுத்தபோது ஆண்டவரின் தூதர் அவரைத் தடுத்தி நிறுத்தினார். ஈசாக்குக்கு பதிலாக முட்புதரில் சிக்கியிருந்த ஓர் ஆட்டுக்கிடாயை எடுத்து பலியிடச் சொன்னார். 

மகனையும் பலியிடத் தயங்காத, ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்ட கடவுள் மண்ணுலகில் அனைவருக்கும் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆசியை ஆபிரகாமுக்கு வழங்கினார். கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் ஆபிரகாம் மிகவும் கவனமாக இருந்தார். 

கடவுளுக்கும், நமக்கும் இடையேயான உறவில்  எதுவும் தடையாய் இருக்காமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை வாழ்வில் நாளும் நாம் தொடர்ந்து வளர இறைப்பற்றோடு செயல்படுவோம். நம்மிடம் இருந்து அகற்ற வேண்டியவையாக, கடவுள் எதிர்பார்க்கும் எதிர்மறை காரியங்களை பலியாக்கிட வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நம்பிக்கை என்னும் புண்ணியத்தில் நாங்கள் ஆபிரகாமைப் போல வளரவும், வாழவும் செய்தருளும். உம் மீது நாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் எழுச்சியும், வளர்ச்சியும் அடைவோமாக. நாங்கள் உம்மோடு உறவில் வாழத் தடையாக இருப்பவற்றை பலியாக்கிடவும், அதன் வழியாக நம்பிக்கையில் நிலைத்திருந்து உம் திருமகனின் வருகைக்காகத் தயாரிக்கவும் எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.


Sunday, 5 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 5

ஆபிரகாம்



தொடக்கநூல் 12: 2

இன்றைய நாளின் சிந்தனை : ஆபிரகாம்

இன்றைய நாளின் குறியீடு : கூடாரமும், ஒட்டகமும்


ஊர் என்ற கல்தேயர் நகரில் வாழ்ந்தவர் ஆபிராம். கடவுள் இவரை அழைத்து ‘ஆபிரகாம்’ என்கிற புதுப் பெயரைச் சூட்டினார். இஸ்ரயேல் மக்களின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்குகிறது. யூதர்கள் தங்கள் முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கருதினர். கடவுள் ஆபிரகாமை அவருடைய சொந்தநாட்டிலிருந்து அழைத்து, ‘நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்’ என்று சொன்னார். எங்கு போகிறோம் எனத் தெரியாதிருந்தும், ஆண்டவரை நம்பி தன் பயணத்தைத் தொடங்கினார் ஆபிரகாம். 

தன் மனைவி சாராயையும், தன் சகோதரன் லோத்துவையும் உடன் அழைத்துப் போனார். வாக்களித்த நாட்டிற்குச் செல்லும் வழிநெடுகிலும் எத்தனையோ சறுக்கல்கள், சரிவுகள் இருந்தாலும் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் ஆபிரகாம் சிறிதும் வீழ்ந்துவிடவில்லை. கடைசியில் கடவுள் ஆபிரகாமைப் பாலும், தேனும் ஓடும் கானான் நாட்டில் குடி அமர்த்தினார். 

ஆபிரகாம் தன் வாழ்வு முழுவதும் ஆண்டவர் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே ஆண்டவர் ஆபிரகாமிடம், உன் இனத்தை கடற்கரை மணலைப் போலவும், வானத்து விண்மீன்களைப் போலவும் ஆக்குவேன் என்று உறுதியளித்தார். ஆண்டுகள் பல கடந்தன. ஆனால் ஆபிரகாமுக்கோ குழந்தை பிறக்கவேயில்லை. 

ஒரு முறை மம்ரே என்ற இடத்தில் கூடார முற்றத்தில் அமர்ந்திருந்த ஆபிரகாமைச் சந்தித்த கடவுள், முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் அவர் மனைவி சாராயிக்கும் ஒரு மகனை வாக்களிக்கிறார். கடவுள் தான் வாக்களித்ததை நிறைவேற்றியும் காட்டுகிறார். 

வாக்களித்ததை நிறைவேற்றிக் காட்டுகிறவர் கடவுள் என்பதை ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. கடவுளை நம்பி வாழ்ந்தால், கடவுள் நம்மையும் ஆபிரகாமைப் போல பெரிய இனமாக்குவார் என்ற நம்பிக்கையும் நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் கடவுள் காட்டுகிற பாதையில் நடக்க விருப்பம் கொள்வோம். நல்வாழ்வுக்கான வாக்குறுதியை நமக்கு வழங்க வரும் கடவுளை, நம்முடைய அன்றாட வாழ்க்கை எனும் கூடாரத்தின் முற்றத்தில் உறுதியான நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்ள வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பான இறைவா! நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நாளுக்கு நாள் ஆழப்பட உதவி செய்யும். உம்மை மட்டுமே நம்பியவர்களாய், நீர் எங்களுக்கு காட்டுகிற வழித்தடத்தில் வாழ்நாள் முழுவதும் ஆபிரகாமைப் போல நாங்களும் நடக்க எங்களுக்கு மனத்திடன் தாரும்;. ஆபிரகாமை வேரோடு பெயர்த்து, புதிய இடத்தில் நட்டு புதுவாழ்வை வழங்கியது போல எங்களுக்கும் செய்தருளும். நல்வாழ்வுக்கான வாக்குறுதிகளை எங்கள் நம்பிக்கையின் பயனாகத் தந்து எங்களை ஆசீர்வதியும். ஆமென்.


Saturday, 4 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 4

நோவா


தொடக்கநூல் 9: 13

இன்றைய நாளின் சிந்தனை : நோவா

இன்றைய நாளின் குறியீடு : பேழையும், வானவில்லும்;


முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையால், பாவமாசு மனுக்குலத்தின் மீது படிந்தது. கடவுளிடமிருந்து விலகி நிற்கின்றோம் என்கிற கவலை மனிதருக்கு துளியும் இல்லாதிருந்தது. அத்தகைய சூழலில் ஏறக்குறைய கி.மு 2970 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்தான், நோவா என்கிற பழைய ஏற்பாட்டின் இஸ்ரயேல் குலமுதுவர். இவருடைய காலத்தில் மண்ணகம் பாவச் சேற்றில் மூழ்கிக் கிடந்தது. அதுவரை இல்லாத அளவிற்கு பாவ நாட்டம் மண்ணில் பெருகி இருந்தது. குற்ற உணர்வு உலகில் எவருக்குமே இல்லை. கடவுள் முதன் முதலாகதான் நன்மையாகப் படைத்த உலகைத் தீமை ஆதிக்கம் செய்வதைப் பார்த்து வருத்தமுற்றார். உலகை முழுவதுமாக அழித்துவிட முடிவெடுத்தார். 

காரிருள் கவ்வியவானில் கண்சிமிட்டும் ஒற்றை விண்மீனாய் இருந்தவர் நோவா. இவருடைய வாழ்க்கையை வாசிக்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். ஏனென்றால் ‘நோவா கடவுளோடு நடந்தார்’ என்று தொடக்கநூல் 6:9 சொல்கிறது. தம் காலத்தவருள் நோவா மட்டுமே நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார் என்ற செய்தி நோவாவினுடைய தூய்மையான வாழ்வுக்குச் சான்று. கடவுள் பார்வையில் நோவாவின் வாழ்வு புனிதமாக இருந்ததால், உலகின் அழிவிலிருந்து நோவாவை மட்டும் காப்பாற்ற கடவுள் திருவுளமானார். எனவே 3 தளங்கள் கொண்ட, 300 முழம் நீளம், 50 முழம் அகலம், 30 முழம் உயரம் கொண்ட பேழை ஒன்றைச் செய்யும்படி கடவுள் நோவாவுக்கு கட்டளையிட்டார். 

அதன்படி நோவாவும் பேழையைச் செய்து தன் குடும்பத்தோடும், மண்ணின் உயிரினங்களின் வகைகள் அனைத்திலும் சோடியாகவும் எடுத்து பேழைக்குள் சென்றார். பின்னர் கடவுள் நாற்பது இரவும், நாற்பது பகலும் மண்ணுலகில் பெருமழை பெய்யச் செய்தார். இவ்வாறு மண்ணுலகை, பெரும் வெள்ளப்பெருக்கு அழித்தது. இதில் நோவா மட்டும் கடவுளால் காப்பாற்றப்பட்டார். பெரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிய நோவா ஆண்டவருக்கு பலி பீடம் ஒன்றைக் கட்டி, பலி ஒப்புக்கொடுத்தார். அப்போது ஆண்டவர் நோவாவுடன் ஓர் உடன்படிக்கையை செய்து கொள்கிறார். அதன்படி இனி உலகை வெள்ளம் அழிக்காது என்று வாக்களித்த கடவுள் அதன் அடையாளமாக தன் வில்லை மேகத்தின் மீது வைத்தார்.

கடவுளின் முன் மாசற்ற வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நோவாவின் வாழ்வு நமக்கு தரும் அறை கூவல். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருந்தாலும், நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக இருந்தால் கடவுள் நம்மைக் கண்டிப்பாகக் காப்பார். எந்தச் சூழ்நிலையிலும் நாம் கடவுளோடு நடக்க உறுதி எடுக்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! நோவாவைப் போன்று குற்றமற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இம்மண்ணில் வாழ எங்களுக்கு உதவும். வாழ்க்கைப் பயணத்தில் நாங்கள் எப்போதும் உம் கரம் பற்றி நடக்கச் செய்தருளும். நீரே எங்களைக் காக்கும் பேழையாக இருந்தருளும். உம்மில் மட்டுமே எங்களுக்கு புதுவாழ்வு என்ற நம்பிக்கையைத் தரும் உடன்படிக்கையின் வானவில்லை எங்கள் வாழ்விலும் வைத்தருளும். ஆமென்.