Friday, 10 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 10

ரூத்து




ரூத்து 2:23

இன்றையநாளின் சிந்தனை : ரூத்து

இன்றையநாளின் குறியீடு : கதிர்க்கட்டு


நீதித்தலைவர்கள் இஸ்ரயேலை வழிநடத்திய காலகட்டத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. யூதாவிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரைச் சேர்ந்த எலிமலேக்கு என்பவருடைய குடும்பம் பிழைப்பதற்காக மோவாபு சென்றது. எலிமலேக்கின் மனைவியின் பெயர் நகோமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மோவாபில் இவர்கள் இருந்த வேளையில் எலிமலேக்கு இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் மோவாபு நாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து வந்த நாட்களில் நகோமியின் இரு மகன்களும் இறந்துவிட்டனர். 

தன்னுடைய கணவனும், மகன்களும் இறந்த பிறகு பெத்லகேமுக்கு திரும்பிப்போக நகோமி முடிவெடுத்தார். எனவே தன்னுடைய மருமகள்களை அழைத்து தாய் வீட்டுக்கு அவர்களைத் திரும்பிப்போக கேட்டுக்கொண்டார். அதன்படியே ஒரு மருமகள் தன்னுடைய பிறந்தகம் சென்றுவிட்டாள். ஆனால் இன்னொரு மருமகளோ தன்னுடைய மாமியாரை விட்டுவிட்டு பிறந்தகம் செல்ல மறுத்துவிட்டாள். அவளுடைய பெயர்தான் ரூத்து. 

இதற்குபின்பு நகோமி தனது மருமகள் ரூத்தையும் அழைத்துக்கொண்டு பெத்லகேமுக்கு திரும்பினார். அங்கு சென்றபிறகு போவாசு என்ற செல்வருடைய வயலில் சிந்திய கதிர்களை ரூத்து தினமும் பொறுக்கிச் சேர்த்து வீட்டுக்கு எடுத்து வருவார். போவாசு நகோமிக்கு உறவினர்முறை. இறுதியில் ரூத்தை போவாசு மணந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஓபேது என்று பெயரிட்டார்கள். இந்த ஓபேதுதான் தாவீதின் தந்தையாகிய ஈசாயின் தந்தை ஆவார். இவ்வாறு மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத்தும் இயேசுவின் வழிமரபு அட்டவணையில் இடம் பெற இறைவன் துணை செய்தார். 

உறவுகள் ஏதும் இல்லாமற்போனாலும், புதிய மற்றும் பெருமைக்குரிய உறவுகளை கடவுள் உருவாக்கித் தருவார் என்பதை ரூத்துவினுடைய வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. தனது மாமியாருடனான உறவை முறிக்க விரும்பாத ரூத்தை, இறைவன் எவ்வளவு ஆசீர்வதித்தார் என்பதை நாம் அறிவோம். நாமும் நம்முடைய உறவுகளை உடைக்காமல், உறவுகளுக்கு உயிர்கொடுக்கவும், உருக்கொடுக்கவும் தீர்மானிக்க வேண்டியநாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! ரூத்தைப் போல நாங்களும் பிறரோடு நல் உறவில் வாழுகிறபோது, உம்மோடு எங்களை நீர் புதிய உறவில் பிணைத்துக் கொள்வீர் என்பதை நம்புகிறோம். ‘உறவே மனிதம், உறவே புனிதம்’ என்பதை உணர்ந்த நாங்கள், எங்களுடைய உறவுகளை மதிப்புடனும், மாண்புடனும் நடத்த உதவி செய்யும். இறை மனித உறவில் நாளும் வளர எங்களுக்கு அருள் புரிவீராக. ஆமென்.


Thursday, 9 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 9

மோசே



விடுதலைப்பயணம் 34:29

இன்றையநாளின் சிந்தனை : மோசே

இன்றையநாளின் குறியீடு : கற்பலகைகள்


யோசேப்பின் காலத்திற்குப் பின்பு இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்டனர். இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையில் மிகுதியாவதையும், பலத்தில் சிறந்து விளங்குவதையும் கண்ட எகிப்தின் புதிய மன்னன், இஸ்ரயேல் மக்களுக்கு பிறக்கும் அனைத்து ஆண் மகவுகளையும் நைல் நதியில் வீசிக் கொல்ல உத்தரவிட்டான். அத்தருணத்தில் பெண்ணொருத்தி தான் பெற்ற பிள்ளையை பேழையில் வைத்து நைல் நதியில் விட்டாள். அக்குழந்தையை எடுத்த பார்வோனின் மகள் அதற்கு மோசே என்று பெயரிட்டாள். 

மன்னனின் மாளிகையில் வளர்ந்த மோசே, எபிரேயனைத் துன்புறுத்திய எகிப்தியன் ஒருவனை கொன்றுவிட்டு, எகிப்தைவிட்டு தப்பியோடினார். ஒரேபு மலையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை, எரியும் முட்புதரின் வாயிலாக கடவுள் அழைத்தார். எகிப்தில் அடிமைகளாக இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலைசெய்து அழைத்துவரும்படி ஆண்டவர் மோசேக்கு சொன்னார். 

மோசேயும் எகிப்துக்குப் போனார். கடவுளின் வல்லமையின் உதவியால் பத்து கொள்ளை நோய்கள் ஏற்பட்டன. கடைசியில் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து விடுதலைபெற்று இஸ்ரயேல் மக்கள் வெளியேறினர். செங்கடலில் அவர்கள் கால் நனையாமல் கடவுள் கடந்துபோகச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையிலான மாபெரும் இணைப்பாளராக மோசே இருந்தார். அவ்வப்போது முணுமுணுப்புகள் வந்தாலும், மோசே அம்மக்களுக்காக எப்போதும் கடவுளிடம் பரிந்து பேசினார். காலையில் மன்னாவும், மாலையில் காடையும் கடவுளால் அவர்களுக்கு கிடைத்தது. பாலைநிலத்தில் பாறையிலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் பெற்றனர். 

விடுதலைப் பயண நிகழ்வுகளில் எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாய் மலையில் மோசேயின் வழியாக கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். பத்துக் கட்டளைகளைக் கொடுத்து தன்னுடைய சொந்த மக்களினமாக அவர்களைத் தெரிந்துகொண்டார். 

பயந்து ஓடிப்போன மோசேயை, விடுதலைப்பயணத்துக்குத் தலைவராக கடவுள் ஏற்படுத்தியது போல, நம்முடைய பலவீனங்களிலும் அவர் பலமாக வெளிப்படுவார் என்பதை நம்புவோம். இறை மனித உறவுவாழ்வுக்காக கடவுள் தந்த பத்துக்கட்டளைகளை இனிமேல் மிகவும் கவனத்துடன் கடைப்பிடிப்போம் என்று முடிவெடுத்து, உடன்படிக்கையின் மக்களாக நாம் வாழத் தொடங்க வேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! பழைய ஏற்பாட்டு விடுதலைப் பயணத்தில் வியப்புக்குரிய செயல்கள் பலவற்றை நீர் செய்து அவர்களை வழி நடத்தியதுபோல, எங்கள் வாழ்விலும் செய்வீராக. பல்வேறு அடிமைத் தளைகளில் சிக்கியிருக்கும் எங்களுக்கு விடுதலைதந்து, உம்முடைய கட்டளைகளின்படி வாழ்வதற்குத் தேவையான அருளை வழங்கியருளும். ஆமென்.


Wednesday, 8 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 8

யோசேப்பு




தொடக்கநூல் 37:3

இன்றைய நாளின் சிந்தனை : யோசேப்பு

இன்றைய நாளின் குறியீடு : பல வண்ண அங்கி


யாக்கோபின் கடைசி மகனுடைய பெயர் யோசேப்பு. யோசேப்புக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் யோசேப்பின் மீது மட்டும் தனிப்பட்ட சிறப்பான அன்பும், பாசமும் அவருடைய தந்தை யாக்கோபுக்கு இருந்தது. யாக்கோபு தன்னுடைய செல்லப் பிள்ளை யோசேப்புக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியைச் செய்து கொடுத்தார். அதுமற்ற சகோதரர்கள், யோசேப்பை பொறாமையோடு பார்க்கவும், வெறுப்போடு நடத்தவும் காராணமாக அமைந்தது. 

புழைய ஏற்பாட்டின் ‘கனவின் மன்னன்’ என்று சொல்லப்படக் கூடியவர் யோசேப்பு. ஒரு முறை இவர் தன்னுடைய இரு கனவுகளைத் தன் வீட்டில் சொன்னார். முதலாவதாக வயலில் இவருடைய அரிக்கட்டை சகோதரர்களின் அரிக்கட்டுகள் சுற்றி வணங்கின என்றும், இரண்டாவதாக கதிரவன், நிலா, விண்மீன்கள் அனைத்தும் யோசேப்பை வணங்கின என்றும் இவர் கூறியபோது, அனைவரும் இவரை இன்னும் வெறுப்போடு பார்க்கத் தொடங்கினர். 

இப்படிப்பட்ட அதீத வெறுப்பின் காரணமாக யோசேப்பின் சகோதரர்கள் அவரைக் கொல்ல விரும்பினார்கள். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர்களைக் காண வந்த யோசேப்பை முதலில் ஆழ் குழிக்குள் தள்ளிவிடுகிறார்கள். பின்னர் யோசேப்பை எகிப்துக்குப் போகின்ற வணிகர்களிடம் 20 வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிடுகிறார்கள். யோசேப்பு முதலில் எகிப்திய மன்னன் பார்வோனின் படைத்தலைவன் போத்திபாரின் வீட்டில் வேலை செய்து வந்தார். போத்திபாரின் மனைவியின் சதியால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிறகு மன்னனின் கனவுக்கு பொருள் சொல்லி, யோசேப்பு எகிப்தின் ஆளுநராகவே உயர்ந்தார். 

பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிய காலத்தில், எகிப்து நாட்டில் மட்டும் யோசேப்பால் முன்னதாகவே தானியங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. அச்சமயத்தில் யோசேப்பின் சகோதரர்களும், தந்தையும் உணவுவேண்டி எகிப்திற்கு வருகிறார்கள். யோசேப்பு அவர்களுக்கு தான் யார் என்று வெளிப்படுத்துகிறார். தன்னுடைய குடும்பத்தையும், மக்கள் அனைவரையுமே பஞ்சகாலத்தில் காப்பாற்றும்படியாக கடவுள் அவரை முன்னதாகவே எகிப்திற்கு அனுப்பியதாக யோசேப்பு அறிவித்தார். 

நமக்கு செய்யப்படும் கெடுதல்களிலும் கடவுள் நன்மையின் ஊற்றை திறந்துவிடுவார் என்பதே யோசேப்பின் வாழ்வு நமக்குத் தரும் செய்தி. அடுக்கடுக்கான துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் யோசேப்பு தவறு இழைக்க மனதில்லாதவராய், கடவுளின் விருப்பத்தை செயல்படுத்தி வாழ்ந்ததை நாமும் கற்றுக் கொள்வோம். கடவுளின் விலையேறப் பெற்ற அன்பிற்காக, நம்முடைய சிரமங்களையும் நாம் உற்சாகமாய் சந்திக்க வேண்டிய நாள் இந்நாள்.

செபம்: அன்பின் இறைவா! உறவுகள் எங்களை வெறுத்தாலும் நீர் எங்களை அன்பு செய்கிறீர். சூழ்ச்சிகள் எங்களை வீழ்த்தினாலும் நீர் எங்களைத் தாங்குகின்றீர். எனவே நன்றி கூறுகிறோம். உம்மால் நாங்கள் இன்னும் நேசிக்கப்படவும், நீர் எங்கள் வாழ்வில் வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையோடு காத்திருக்கவும் வரம் தாரும். ஆமென்.