Sunday, 12 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 12

தாவீது




திருத்தூதர்பணிகள் 13:22

இன்றையநாளின் சிந்தனை : தாவீது

இன்றையநாளின் குறியீடு : மணிமகுடம்


யூதாவின் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாய் என்பவரின் கடைசி மகன் தாவீது. இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக சவுலை இறைவாக்கினர் சாமுவேல் திருநிலைப்படுத்தினார். ஆனால் சவுல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்காததால், கடவுள் சாமுவேலிடம் தாவீதை அரசராகத் திருப்பொழிவு செய்யுமாறு கூற, சாமுவேலும் அப்படியே செய்தார். இவ்வாறு சவுல் உயிரோடு இருக்கும் போதே தாவீதின் அரசத் திருப்பொழிவு நடைபெற்றது. 

ஒருமுறை பாளையத்தில் பெலிஸ்தியன் கோலியாத்தை தோற்கடிக்கமுடியாமல் சவுலின் படை திணறியது. அத்தருணத்தில் சிறுவன் தாவீது, மாமிச மலைபோல் நின்றிருந்த கோலியாத்தை வெறும் கவணையும், கூழாங்கல்லையும் வைத்து தரையில் வீழ்த்திக் கொன்றான். தாவீது கடவுளின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருந்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் தாவீதின் புகழ் பரவத் தொடங்கியது. அது சவுலின் மனதில் பொறாமையை விதைத்தது. பிறகு சவுல் தாவீதைக் கொல்லத் தேடினான. ஆனால் இறைவன் தாவீதைத் தப்புவித்தார். அதே நேரத்தில் கடவுள் தாவீதின் கையில் சவுலை ஒப்படைத்தார். ஆனாலும் தாவீது சவுலைக் கொல்லவில்லை.

சவுலின் இறப்பிற்குப் பின்பு தாவீது அரசரானார். பல அண்டை நாடுகளை வென்று இஸ்ரயேல் நாட்டை விரிவுபடுத்தினார். தாவீது தவறுகள் பல செய்தாலும் அதற்காக மனம் வருந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு மன்றாடத் தவறியதில்லை. ஆண்டவருக்காக கோவில் ஒன்று கட்டவேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்தது. தாவீதைப் பற்றிச் சொல்லும்போது திருப்பாடல்களில் பல இவருடைய பாடல்கள் என்றும், இறைவனைப் புகழ்ந்து பாடுவது, தாவீதுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.

ஆட்டு இடையன் தாவீதையும், கடவுள் இஸ்ரயேலுக்கு மன்னனாக மாற்றினார் என்றால் கடவுளின் கரம் நம் வாழ்வில் செயல்படும்போது, நாமும் அவரால் மேன்மைப்படுத்தப்படுவோம் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பாவம் செய்திட்டாலும், மீண்டும் நாம் பரமனின் பாதத்தில் விழவேண்டும். எப்போதும் கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம் காணவேண்டும். தாவீதைப் போல கடவுளின் இதயத்துக்கு உகந்தவர்களாக, நாமும் வாழ முயற்சி செய்யவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! தாவீது சிறுவனாக இருக்கும்போதே திருப்பொழிவு செய்து, உம்முடைய இதயத்துக்கு ஏற்றவராக வாழச் செய்ததுபோல எங்களையும் உமக்கு உகந்தவாழ்வு வாழச் செய்தருளும். தாவீதிடம் இருந்த அதே மனம் வருந்தும் குணமும், மன்னிப்பு வேண்டும் பண்பும் எங்களிடமும் வளரச் செய்யும். நாங்கள் என்றும் உம்மைப் புகழ்ந்து பாடியவர்களாய், உமது விருப்பத்தை நிறைவேற்றி வாழ எங்களுக்கு அருள்புரியும். ஆமென்.

Saturday, 11 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 11

எலியா




1 அரசர்கள் 18:38

இன்றையநாளின் சிந்தனை : எலியா

இன்றையநாளின் குறியீடு : நெருப்பு


எலியா என்பவர் பழைய ஏற்பாட்டுக் காலத்தின் பெரிய இறைவாக்கினருள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். இவருடைய காலம் ஏறக்குறைய கி.மு. 9 ஆம் நூற்றாண்டு. எலியா என்பதற்கு ‘யாவே என் கடவுள்’ என்று பொருள். இவருடைய பணி  இஸ்ரயேல் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

வடக்கு இஸ்ரயேல் நாட்டை ஆகாபு மன்னன் ஆட்சி செய்த சமயத்தில், அவனுடைய மனைவி ஈசபேல்லின் தூண்டுதலால் நாட்டில் பாகால் வழிபாடு பெருகியது. அக்கட்டத்தில் இறைவாக்கினர் எலியா இஸ்ரயேல் நாட்டில் பஞ்சத்தை முன்னறிவித்தார். இவருடைய வாக்கின்படி ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு இஸ்ரயேலில் பஞ்சம் நீடித்தது. பிறகு எலியாவின் சொல்லின்படியே வானிலிருந்து மழை பெய்தது.

யாவே மட்டுமே உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்க, இறைவாக்கினர் எலியா பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினர்களையும், மக்கள் கூட்டத்தையும் கர்மேல் மலையில் ஒன்று கூட்டினார். அங்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட எலியாவின் பலியை மட்டும் வானத்திலிருந்து நெருப்பு வந்து சுட்டெரித்தது. இதன் வழியாக மக்கள் அனைவருக்கும் யாவே தான் உண்மையான ஒரே இறைவன் என்று எலியா உணர்த்தினார். 

எலியாவின் விண்ணேற்பு இன்னொரு முக்கியமான பழைய ஏற்பாட்டு நிகழ்வாகும். நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் மீண்டும் வந்து, மெசியாவின் வருகைக்கு முன் தயாரிப்புசெய்வார் என்பது யூதர்களின் நம்பிக்கை ஆகும். 

பிற கடவுள்களை வழிபடுவது என்பது நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டுள்ள, என்றும் வாழும் ஒரே கடவுளை உதறித்தள்ளுவது ஆகும். எலியாவைப் போல அரசனைவிட ஆண்டவருக்குப் பணிவதே உன்னதமானது என நாமும் உணர்ந்து கொள்வோம். வறுமையிலும், வளமையிலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாம் எப்போதும் ஒரே கடவுளையே நம்பி, அவரை மட்டுமே வழிபடுவோம் என்று உறுதி எடுக்கவேண்டிய நாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! உம்மையே அறிந்து, உம்மை மட்டுமே அன்பு செய்யவும், உம்மை மட்டுமே வழிபடவும் எங்களை அழைத்திருக்கின்றீர். நாங்கள் ஒருபோதும் பிற தெய்வங்களைத் தேடி அலையாமல், மெய்யான கடவுளாகிய உம்மையே ஆராதித்து வணங்கவும், எச்சூழலிலும் உம்முடைய உடன்படிக்கையின் மக்களாக வாழவும் எங்களுக்கு வரம் தாரும். ஆமென்.



Friday, 10 December 2021

ஈசாய் மரம் - டிசம்பர் : 10

ரூத்து




ரூத்து 2:23

இன்றையநாளின் சிந்தனை : ரூத்து

இன்றையநாளின் குறியீடு : கதிர்க்கட்டு


நீதித்தலைவர்கள் இஸ்ரயேலை வழிநடத்திய காலகட்டத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. யூதாவிலுள்ள பெத்லகேம் என்னும் ஊரைச் சேர்ந்த எலிமலேக்கு என்பவருடைய குடும்பம் பிழைப்பதற்காக மோவாபு சென்றது. எலிமலேக்கின் மனைவியின் பெயர் நகோமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மோவாபில் இவர்கள் இருந்த வேளையில் எலிமலேக்கு இறந்துவிட்டார். அவருடைய இரண்டு மகன்களும் மோவாபு நாட்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து வந்த நாட்களில் நகோமியின் இரு மகன்களும் இறந்துவிட்டனர். 

தன்னுடைய கணவனும், மகன்களும் இறந்த பிறகு பெத்லகேமுக்கு திரும்பிப்போக நகோமி முடிவெடுத்தார். எனவே தன்னுடைய மருமகள்களை அழைத்து தாய் வீட்டுக்கு அவர்களைத் திரும்பிப்போக கேட்டுக்கொண்டார். அதன்படியே ஒரு மருமகள் தன்னுடைய பிறந்தகம் சென்றுவிட்டாள். ஆனால் இன்னொரு மருமகளோ தன்னுடைய மாமியாரை விட்டுவிட்டு பிறந்தகம் செல்ல மறுத்துவிட்டாள். அவளுடைய பெயர்தான் ரூத்து. 

இதற்குபின்பு நகோமி தனது மருமகள் ரூத்தையும் அழைத்துக்கொண்டு பெத்லகேமுக்கு திரும்பினார். அங்கு சென்றபிறகு போவாசு என்ற செல்வருடைய வயலில் சிந்திய கதிர்களை ரூத்து தினமும் பொறுக்கிச் சேர்த்து வீட்டுக்கு எடுத்து வருவார். போவாசு நகோமிக்கு உறவினர்முறை. இறுதியில் ரூத்தை போவாசு மணந்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஓபேது என்று பெயரிட்டார்கள். இந்த ஓபேதுதான் தாவீதின் தந்தையாகிய ஈசாயின் தந்தை ஆவார். இவ்வாறு மோவாபு நாட்டைச் சேர்ந்த ரூத்தும் இயேசுவின் வழிமரபு அட்டவணையில் இடம் பெற இறைவன் துணை செய்தார். 

உறவுகள் ஏதும் இல்லாமற்போனாலும், புதிய மற்றும் பெருமைக்குரிய உறவுகளை கடவுள் உருவாக்கித் தருவார் என்பதை ரூத்துவினுடைய வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. தனது மாமியாருடனான உறவை முறிக்க விரும்பாத ரூத்தை, இறைவன் எவ்வளவு ஆசீர்வதித்தார் என்பதை நாம் அறிவோம். நாமும் நம்முடைய உறவுகளை உடைக்காமல், உறவுகளுக்கு உயிர்கொடுக்கவும், உருக்கொடுக்கவும் தீர்மானிக்க வேண்டியநாள் இந்நாள். 

செபம்: அன்பின் இறைவா! ரூத்தைப் போல நாங்களும் பிறரோடு நல் உறவில் வாழுகிறபோது, உம்மோடு எங்களை நீர் புதிய உறவில் பிணைத்துக் கொள்வீர் என்பதை நம்புகிறோம். ‘உறவே மனிதம், உறவே புனிதம்’ என்பதை உணர்ந்த நாங்கள், எங்களுடைய உறவுகளை மதிப்புடனும், மாண்புடனும் நடத்த உதவி செய்யும். இறை மனித உறவில் நாளும் வளர எங்களுக்கு அருள் புரிவீராக. ஆமென்.