Friday, 29 November 2024

கல்லறைப் பாடம் - 29

கல்லறைப் பாடம் - 29


கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றிய உத்தரிக்கும் ஆன்மாக்கள்



அருள்பணியாளர் லூயிஸ் மனாசி என்பவர் ஒரு தீவிர மறைப்பணியாளர். அவர் உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் ஓர் ஆபத்தான பாதையில் தன் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆகவே, அவர் அப்பயணத்தில் சந்திக்கக்கூடிய ஆபத்துகளிலிருந்து தன்னைப் பாதுகாக்க, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நம்பிக்கையுடன் மன்றாடினார். 

அவரது பாதை ஒரு பரந்த பாலைவனத்தின் வழியாக இருந்தது. அது கொள்ளைக்காரர்களால் நிறைந்திருந்ததெனவும் அவருக்குத் தெரியும். உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக செபமாலைச் சொல்லியவாறு, அவர் மிக வேகமாக அப்பாதையைக் கடந்தார். அப்போது அவர் தன்னைச் சுற்றி பரிசுத்த ஆன்மாக்கள் அரண்போல சூழ்ந்து வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். 

கொள்ளையர்கள் அவரைத் தாக்கமுற்பட்டபோது, பரிசுத்த ஆன்மாக்கள் அக்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி அந்த குருவைக் காப்பாற்றினர். அவர் பாதுகாப்பாக அவ்விடத்தைக் கடக்கும் வரை அவருக்கு பரிசுத்த ஆன்மாக்கள் வழித்துணையாய் வந்தனர்.

Thursday, 28 November 2024

கல்லறைப் பாடம் - 28

கல்லறைப் பாடம் - 28

புற்றுநோயிலிருந்து நலம்



ஜோனா தி மெனிசஸ் என்னும் பெண்மணி தனது குணம் பற்றி இவ்வாறு கூறுகிறார்: 

காலில் தனக்கு ஏற்பட்ட புற்றுநோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தார். அச்சமயத்தில் உத்தரிக்கும் நிலையிலுள்ள ஆன்மாக்களின் வல்லமையைப் பற்றி அவர் கேள்விப்பட்டதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க முடிவு செய்தார்.

மேலும் அவர்களுக்காக ஒன்பது திருப்பலிகளை ஒப்புக்கொடுத்தார். அதனால் அவர் குணமடைந்தால் பரிசுத்த ஆன்மாக்களுக்காக சாட்சியம் அளிப்பதாக உறுதியளித்தார். படிப்படியாக வீக்கம் குறைந்து, கட்டி மற்றும் புற்றுநோய் முற்றிலும் மறைந்தது. இவ்வாறு அவர் முழுமையான சுகம் அடைந்தார்.

Wednesday, 27 November 2024

கல்லறைப் பாடம் - 27

கல்லறைப் பாடம் - 27

டைபாய்டு காய்ச்சலிலிருந்து பிழைத்த இளைஞன்



சிர்போன்டைன்னஸ் என்னும் சபையின் அதிபர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

ஓர் இளைஞன் டைபாய்டு காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த துக்கத்தில் மூழ்கி, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் தங்கள் மகனுக்காகச் செபிக்கும்படி அந்த அதிபரிடம் கேட்டார்கள்.

அன்று சனிக்கிழமை. அந்த இளைஞன் மரணத்தின் வாசலில் இருந்தான். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அனைத்தும் வீணானது. அவர்களால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

ஆனால் அதிபர் மட்டும் சொன்னார்: “எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பரிசுத்த ஆன்மாக்களின் வல்லமையை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.”

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நோய்வாய்ப்பட்ட இளைஞருக்காக உருக்கமாக செபிக்குமாறு அனைவரிடமும் கேட்டேன். அனைவரும் செபித்தோம்.

திங்கட்கிழமை அன்று ஆபத்து கட்டத்தைத் தாண்டி, அந்த இளைஞன் குணமடைந்தான்.