Wednesday, 27 November 2024

கல்லறைப் பாடம் - 27

கல்லறைப் பாடம் - 27

டைபாய்டு காய்ச்சலிலிருந்து பிழைத்த இளைஞன்



சிர்போன்டைன்னஸ் என்னும் சபையின் அதிபர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார்.

ஓர் இளைஞன் டைபாய்டு காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த துக்கத்தில் மூழ்கி, உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் தங்கள் மகனுக்காகச் செபிக்கும்படி அந்த அதிபரிடம் கேட்டார்கள்.

அன்று சனிக்கிழமை. அந்த இளைஞன் மரணத்தின் வாசலில் இருந்தான். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அனைத்தும் வீணானது. அவர்களால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

ஆனால் அதிபர் மட்டும் சொன்னார்: “எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பரிசுத்த ஆன்மாக்களின் வல்லமையை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.”

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் உத்தரிக்கும் ஆன்மாக்களிடம் நோய்வாய்ப்பட்ட இளைஞருக்காக உருக்கமாக செபிக்குமாறு அனைவரிடமும் கேட்டேன். அனைவரும் செபித்தோம்.

திங்கட்கிழமை அன்று ஆபத்து கட்டத்தைத் தாண்டி, அந்த இளைஞன் குணமடைந்தான்.

Tuesday, 26 November 2024

கல்லறைப் பாடம் - 26

கல்லறைப் பாடம் - 26

புனித பீட்டர் தமியானும் உத்தரிக்கும் ஆன்மாக்களும்



புனித பீட்டர் தமியான் பிறந்த சிறிது காலத்தில் தந்தை மற்றும் தாய் இருவரையும் இழந்தார். அவரது சகோதரர்களில் ஒருவர் அவரை வளர்த்து வந்தார். ஆனால் அவர் பீட்டரை மிகக் கடுமையுடன் நடத்தினார். அவரை கடுமையாக உழைக்க வற்புறுத்தினார். ஆனால் அவருக்கு மோசமான உணவு மற்றும் பழைய ஆடைகளையே வழங்கினார்.

வெளியில் ஒரு நாள் பீட்டர் மிக விலை உயர்ந்த ஒரு வெள்ளித் துண்டைக் கண்டெடுத்தார். உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியாததால், ஒரு நண்பர் அவரிடம், எவ்வித மனஉறுத்தலுமின்றி அப்பொருளை அவர் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

பீட்டருக்கு நிறைய காரியங்கள் தேவைப்பட்டன. ஆகவே அவற்றுள் எதற்கு இப்பொருளைப் பயன்படுத்துவது என அவருக்குப் புரியவில்லை. ஆகவே மிகுந்த யோசனைக்குப் பிறகு, அவர் இப்பொருளை மிக உயர்ந்த ஒரு காரியத்திற்காக செலவிட வேண்டும் என முடிவெடுத்து, தம்முடைய பெற்றோரின் ஆன்மாக்களுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அது முதல் அவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. உத்தரிக்கும் ஆன்மாக்கள் அவருக்கு தாராளமாய் கைம்மாறு வழங்கினர். 

ஒருமுறை அவரது குடும்பத்தின் மூத்த சகோதரர் பீட்டர் வசித்துவந்த சகோதரரின் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் அனுபவித்த கொடூரமான துன்பங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆகவே, அவரை தனது சொந்த பராமரிப்பில் ஏற்றுக்கொண்டார். நல்ல ஆடை அணிவித்து, தனது சொந்தக் குழந்தையாக அவருக்கு உணவளித்துப் பராமரித்தார். மேலும் அவரை மிகவும் அன்பாகப் படிக்க வைத்தார். அதன் பிறகும் பீட்டரின் வாழ்வில் ஆசீர்வாதத்திற்கு மேல் ஆசீர்வாதம் தொடர்ந்து வந்தது.

விரைவில் அவர் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தார். பின்பு ஆயராகவும், கர்தினாலாகவும் உயர்ந்தார். அவரது இறப்பிற்குப் பின்பு இவருடைய பரிந்துரையால் நடைபெற்ற பல அற்புதங்கள் அவரது புனிதத்தன்மைக்குச் சான்றளித்தன. இதனால் அவர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 

உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்ததன் பயனாக ஓர் ஏழைச் சிறுவன் எவ்வாறு பல்வேறு ஆசீர்வாதங்களைப் பெற்றான் என்பதை புனித பீட்டர் தமியானின் வாழ்விலிருந்து நாம் அறியலாம். 

Monday, 25 November 2024

கல்லறைப் பாடம் - 25

கல்லறைப் பாடம் - 25

விண்ணகம்


விண்ணகம் என்பது ஒப்புயர்வற்ற நிலையான பேரின்பம் ஆகும். இறை அருளில் இறப்போர் தூய்மை பெறத் தேவையற்றோர். இயேசு, மரியா, வானதூதர்கள், புனிதர்கள் ஆகியோருடன் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளை நேரில் காண்கின்ற விண்ணகத் திரு அவையை உருவாக்குகிறார்கள். அவர்கள் தூய்மைமிகு மூவொரு இறைவனோடு அன்புறவில் வாழ்ந்து நமக்காகப் பரிந்துபேசுகிறார்கள். 

விண்ணகத் திரு அவையை வெற்றிவாகை சூடிய திரு அவை என்றும், அகமகிழும் திரு அவை என்றும் அழைக்கிறோம்.