Saturday, 5 November 2022

கல்லறைப் பாடம் - 5

உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர்  




1245 ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் உள்ள சான்ட் ஏஞ்சலோ நகரில் பிறந்த நிக்கோலஸ், இளம் வயதிலேயே டோலண்டினோ நகரிலிருந்;த அகஸ்தினார் துறவற சபையில் சேர்ந்து, ஏழு ஆண்டுகள் படித்த பிறகு, குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

நிக்கோலஸ் ஒரு புனிதமான மனிதர். அவர் அடிக்கடி உண்ணா நோன்பும் ஒறுத்தலும் இருந்து, தன்னைத் தானே வருத்திக் கொண்டார். நீண்ட நேரம் செபத்தில் ஈடுபட்டார். 

கத்தோலிக்கத் திரு அவை 1274 இல் நடைபெற்ற இரண்டாம் லயன்ஸ் பொதுச் சங்கத்தில் தூய்மைபெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) கோட்பாட்டை முறையாக வரையறுத்தது. 

அதே காலகட்டத்தில் வாழ்ந்த புனித நிக்கோலஸைக் குறித்து இவ்வாறு சொல்வதுண்டு: நிக்கோலஸ் ஒரு இரவு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஓர் இறந்த துறவியின் குரலைக் கேட்டார். அத்துறவி நிக்கோலஸிடம் அவர் இப்போது தூய்மை பெறும் நிலையில் (உத்தரிக்கும் நிலை) இருப்பதாகக் கூறினார். எனவே அவருக்கும் அங்குள்ள மற்ற ஆன்மாக்களுக்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு வலியுறுத்தினார். நிக்கோலஸ் ஏழு நாட்கள் அவ்வாறு செய்த பிறகு, துறவி மீண்டும் அவருக்குத் தோன்றி, இப்போது ஏராளமான ஆன்மாக்கள் கடவுளைச் சென்றடைந்துள்ளதாக்கூறி, நன்றி தெரிவித்தார். 

இவ்வாறு டோலண்டினோ நகர் புனித நிக்கோலஸ் இன்று உத்தரிக்கும் ஆன்மாக்களின் பாதுகாவலர் என்று திரு அவையால் போற்றப்படுகிறார். 


Friday, 4 November 2022

கல்லறைப் பாடம் - 4

ஒரு புனித ஆன்மாவின் கை ரேகை 




அவர் பெயர் தெரசா கெஸ்டா. அவர் இத்தாலியின் அசிசி நகருக்கு அருகிலுள்ள ஃபோலிக்னோவில் பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரியாக இருந்தார். இவர் நவம்பர் 4, 1859 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். சரியாக 12 நாட்களுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட சகோதரி அன்னா ஃபெலிசியா திருப்பண்ட அறையின் உள்ளே இருந்து அழுகுரல் ஒன்றைக் கேட்டார். சகோதரி அன்னா ஃபெலிசியா அவசரமாக கதவைத் திறந்து பார்க்க, அங்கே யாரும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து அழு குரலைக் கேட்டார். 

இப்போது “கடவுளே, நான் இப்படி துன்புறுகிறேனே!" என்று சகோதரி தெரசா வருத்தத்துடன் புலம்புவதை அன்னா தெளிவாகக் கேட்டார். சற்று நேரத்தில் அறை கடும் புகையால் இருட்டாக மாறியது. அதிலிருந்து சகோதரி தெரசா தோன்றி, அறையின் வாசலை நோக்குச் சென்றபோது, “இதோ, கடவுளின் கருணைக்கு ஓர் ஆதாரம்" என்று கூக்குரலிட்டார். பின்பு அவர் அங்கிருந்த கதவில் கையை ஊன்றி தனது கை ரேகையை அதிலே விட்டுவிட்டு மறைந்தார். அது எரியும் கூடான இரும்பை மரத்தில் பதித்தது போல இருந்தது. 

சகோதரி அன்னா ஃபெலிசியா பயந்து போய், உதவிக்காக கூக்குரலிட்டார். சிறுது நேரத்தில் எல்லா சகோதரிகளும் அங்கு கூடினர். சகோதரி அன்னா ஃபெலிசியா, சகோதரி தெரசா உத்தரிக்கும் நிலையிலிருந்து வருகை தந்ததாகவும், கதவில் எரிந்த கை ரேகையை விட்டுச் சென்றதாகவும் கூறினார். அவர்கள் அனைவரும் அது சகோதரி தெரசாவின் கை என்று அங்கீகரித்தனர். 

அவர்கள் இரவு முழுவதும் சகோதரி தெரசாவுக்காக செபித்தனர். அடுத்த நாள் காலையில் அவர்கள் அனைவரும் சகோதரி தெரசாவுக்காக நற்கருணை பெற்றனர். பின் வந்த நாட்களில், சகோதரி தெரசாவின் எரிந்த கை ரேகை மரக் கதவில் பொறிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியது. 

சகோதரி தெரசாவின் முதல் காட்சிக்குப் பிறகு மூன்றாவது நாளில், அவர் மீண்டும் சகோதரி அன்னா ஃபெலிசியாவுக்கு ஓர் அற்புதமான ஒளியில் தோன்றினார். அப்போது சகோதரி தெரசா கூறியது: “நான் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இறந்தேன். இதோ இன்று மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை, இன்று நான் நிலையான மாட்சிக்குள் நுழைகிறேன்!" அவர்  விண்ணகத்திற்குச் செல்வதற்கு முன், சகோதரி அன்னா ஃபெலிசியாவிடம், “சிலுவையைச் சுமக்க வலிமையாயிருங்கள், துன்பப்படுவதற்கு துணிவோடிருங்கள், ஏழ்மையை விரும்புங்கள்" என்று அறிவுறுத்தினார். 


Thursday, 3 November 2022

கல்லறைப் பாடம் - 3

தூய்மை பெறும் நிலை என்றால் என்ன? 


தூய்மை பெறும் நிலை (உத்தரிக்கும் நிலை) என்பது ஏற்கனவே நிலைவாழ்வுக்கான உறுதிபெற்றுள்ள ஆன்மாக்கள், எல்லாம் வல்ல கடவுளின் தூய திருமுகத்தைக் காண அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பாவத்தின் தற்காலிக விளைவுகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படும் இடம். 

“விவிலியத்தில் தூய்மை பெறும் நிலை என்ற வார்த்தை எங்கே இருக்கிறது?” என்று பலர் கேட்கிறார்கள். இது விவிலியத்தில் காணப்படாது. ஆனால் தூய்மை பெறும் நிலை பற்றிய கருத்துகள் விவிலியத்திலும், தொடக்க கால திரு அவைத் தந்தையரின் எழுத்துக்களிலும் தெளிவாக உள்ளன. 

‘தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் விண்ணகத்தில் நுழையாது’ என்று திவெ 21:27 நமக்குச் சொல்கிறது. ஆக, தூய்மை பெறும் நிலை என்பது  திவெ 21:27 இன் படி அசுத்தமான எதுவும் விண்ணகத்தில் நுழையாது என்பதை உறுதிசெய்யும் கடவுளின் வழியாகும். 

தானியேல் 12:2, மத்தேயு 12:32, 1 கொரிந்தியர் 3:13-15, 2 திமொத்தேயு 1:16-18, எபிரேயர் 12:14, எபிரேயர் 12:22-23, 1 பேதுரு 4:6 மற்றும் திருவெளிப்பாடு 21:10, 27 போன்ற பகுதிகளில் தூய்மை பெறும் நிலையின் தேவை, இறந்தவர்களுக்காக மன்றாட வேண்டியதன் அவசியம் ஆகிய கருத்துக்களைப் பார்க்க முடியும். 

தெர்த்தூலியன் (கி.பி. 211) தனது நூலான ‘மணிமுடி’ 3:3 இல் இவ்வாறு கூறுகிறார்: “இறந்தவர்களுக்காக அவர்களின் பிறந்தநாளில் நாம் பலி ஒப்புக்கொடுக்கிறோம்”. 

கார்தேஜின் சிப்ரியான் (கி.பி. 253) இவ்வாறு எழுதுகிறார்: “மன்னிப்புக்காக காத்து நிற்பது ஒன்று, மாட்சியை அடைவது வேறொன்று. சிறைச்சாலையில் தள்ளப்பட்டால், ஒருவர் தன் கடன் தொகையை செலுத்தும் வரை அங்கிருந்து வெளியே செல்லக்கூடாது என்பது ஒன்று, நம்பிக்கையின் பலனை உடனே பெறுவது மற்றொன்று. பாவங்களுக்காக நிலையான துன்பத்தை அடைவது ஒன்று, சிறிது கால துன்பத்தால் அனைத்து பாவங்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்படுவது மற்றொன்று. இறுதித்தீர்ப்பு நாளில் இறைவனின் தீர்ப்புக்காக காத்திருப்பது ஒன்று, இறப்பிற்குப் பின்பு கடவுளின் மாட்சியில் உடனடியாக பங்குபெறுவது மற்றொன்று”. 

புனித ஜான் கிறிசோஸ்தோம் (கி.பி. 392) 1 கொரிந்தியர் 41:5 ஐ விளக்கிய தனது மறையுரையில் இவ்வாறு கூறுகிறார்: “இறந்தவர்களுக்கு நம்முடைய செப உதவியை வழங்க நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது”. 

புனித அகுஸ்தின் (கி.பி. 419) தனது ‘கடவுளின் நகரம்’ என்னும் நூலில் இவ்வாறு கூறுகிறார்: “பாவத்தின் தற்காலிகத் தண்டனைகளை சிலர் இவ்வுலக வாழ்க்கையிலும், சிலர் மரணத்திற்குப் பிறகும், சிலர் இங்கேயும் மறுமையிலும் அனுபவிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் இறுதித் தீர்ப்புக்கு முன்னரே முடிந்துவிடும். மரணத்திற்குப் பிறகு தற்காலிகத் தண்டனைகளை அனுபவிக்கும் அனைவரும் நிலையான தண்டனைக்கு உள்ளாகமாட்டார்கள்”. 




Wednesday, 2 November 2022

கல்லறைப் பாடம் - 2

எனக்கு ஒரு திருப்பலி தேவை!



ஒரு நாள் புனித பியோ தனியாக செபம் செய்து கொண்டிருந்தார். அப்போது பூட்டப்பட்டிருந்த அந்த அறையில் ஒரு முதியவர் நிற்பதைக் கண்டு பியோ ஆச்சரியமடைந்தார். அவர் யாரென அறிய விரும்பிய பியோ அந்த நபரிடம், “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். 

அதற்கு அந்த நபர் இவ்வாறு பதிலளித்தார்: “தந்தை பியோ அவர்களே, என் பெயர் பியெத்ரே தி மௌரோ. என் தந்தையின் பெயர் நிக்கோலா. என்னை ப்ரேகோகோ என்றும் அழைப்பதுண்டு. இங்குதான் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி, அறை எண் 4 இல், நான் இறந்தேன். அப்போது இந்த இடம் ஓர் ஏழைகளின் விடுதியாக இருந்தது. ஒரு நாள் இரவு, படுக்கையில் இருந்தபோது, நான் புகைப்பிடித்துக் கொண்டே தூங்கிப்போனேன். புகைந்து கொண்டிருந்த அந்த நெருப்பால் எனது மெத்தையில் தீப்பிடித்து, அறையே முற்றிலும் எரிந்தது. இதில் நான் இறந்தேன். இதன் காரணமாக நான் இன்னும் உத்தரிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். அங்கிருந்து என் ஆன்மா விடுதலை பெற எனக்கு ஒரு திருப்பலி தேவைப்படுகிறது. எனவே நான் உத்தரிக்கும் நிலையிலிருந்து இங்கு வந்து உங்களிடம் இவ்வுதவியைக் கேட்க கடவுள் என்னை அனுமதித்தார்”. 

இதைக் கேட்ட பியோ “உங்கள் ஆன்மாவின் விடுதலைக்காக நாளை நான் திருப்பலி ஒப்புக்கொடுக்கிறேன். நிச்சயம் அமைதியில் இளைப்பாறுவீர்கள்” என்று அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் கூறினார். பின்பு அந்த நபர் அங்கிருந்து அகன்றார். 

அடுத்த நாள் பியோ அந்த ஆன்மாவின் இளைப்பாறுதலுக்காக ஒரு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். பின்பு பியோ மற்றொரு கப்புச்சின் சபைத் துறவியின் உதவியுடன் நகர் மன்றம் சென்று இந்நிகழ்வின் உண்மைத்தன்மையைக் கண்டுபிடித்தார். 1908 இல் அதே இடத்தில், அதே பெயரில் ஒரு நபர் எப்படி இறந்தார் என்பதையெல்லாம் நகர் மன்ற ஆவணங்களிலிருந்து உறுதிப்படுத்திக்கொண்டார்.





Tuesday, 1 November 2022

கல்லறைப் பாடம் - 1

கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்வோம்!




நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் திருநாள்தான் கிறித்தவர்களின் நினைவுக்கு வரும். இம்மாதத்தின் இரண்டாம் நாள் இறந்த நம் குடும்ப உறவுகளின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, மலர் மாலையிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் வைத்து, இறந்த ஆன்மாக்களை நினைவு கூரும் மரபு இன்றளவும் சிறப்பாய்த் திகழ்கிறது. இந்த ஒரு நாள் மட்டும் அல்ல, என்றும் கல்லறைகள் நம்முடைய மேலான கவனத்தைப் பெற்றிட வேண்டும். 

கல்லறை என்பது வாழ்க்கையின் அனுபவங்கள் அயர்ந்த நித்திரையில் இருக்கும் இடம். அது கடவுள் காலத்தின் ஓட்டத்தில் வரைந்த பல காவியங்களும் காப்பியங்களும் கண்ணுறங்கும் இடம். கல்லறை நம்முடைய வாழ்வின் மிகப்பெரிய சிறந்த நூலகம். அது வாழ்ந்து முடித்தவர்களைப் பார்த்து வாழப் பழகுகின்றவர்கள் படிக்கவேண்டிய இடம். 

உரோமையராலும் யூதராலும் கல்லறை என்பது தீட்டாகப் பார்க்கப்பட்டது. யூத வழக்கத்தில் கல்லறைகள் பொதுவாக ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்கும். கல்லறைகளை இறந்தோருடைய நகரம் என்று யூதர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது, கிறித்தவர்களுக்கு அது வாழ்வோரின் நகரமாகவே அறிவுறுத்தப்பட்டது. கிறிஸ்துவின் கல்லறையும் அது சுட்டிக்காட்டும் உயிர்ப்புமே அதற்கு சாட்சி. 

இயேசுவின் உயிர்ப்பைத் தொடர்ந்து கல்லறையைக் குறித்த உயர்ந்த உன்னதமான புரிதல் கிறித்தவ மரபில் எப்போதும் இருந்துள்ளது. நம்பிக்கையாளர்கள் மறைச்சாட்சியரின் கல்லறைகளில் கூடி செபித்தும், மறைவாக வழிபாடு நடத்தியும் வந்துள்ளனர். இவ்வாறு கல்லறைகள் நம் விசுவாசத்தின் விளைநிலமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடக்கத் திரு அவையின் நாற்றங்கால் கல்லறையே. 

எனவே இறந்த நம்பிக்கையாளர்களின் கல்லறைகள் இன்றைய நமது நம்பிக்கையின் கருவறைகள் என்னும் தெளிவு நம்மிடம் இருக்கட்டும். கல்லறைகளிலிருந்து கற்றுக்கொள்ளத் தயாராவோம்!