நிறைவின் அன்னை
(கர்சி - இத்தாலி)
1640 ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் இத்தாலியின் சிறிய நகரமான கர்சியில் ஒரு மோசமான நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக வறட்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் செபிக்கவும், கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டவும் மக்கள் ஆலயத்தில் கூடிவந்தனர்.
ஒரு நாள் பாக்லியோ என்ற நபர் தனது கால்நடைகளை காணவில்லை என்பதால் அவற்றைத் தேடிச் சென்றார். அப்போது திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வெளிப்படுவதைக் கவனித்தார். அவர் கிட்டத்தட்ட பயந்து ஓடத்தொடங்கினார். மரியா அவரைத் திரும்ப அழைத்தார். தன்னை விண்ணக அரசி என்று அவருக்கு அடையாளப்படுத்தினார். பின்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வறட்சியின் கொடுமைக்காக தான் வருத்தப்படுவதாகவும், இரக்கம் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் மரியா, பாக்லியோவிடம் கர்சியின் அனைத்து மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களுடன் சேர்ந்து தனக்கான ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டிய அவ்விடத்திற்கு வரும்படியாக பங்கு குருவிடம் சென்று தெரிவிக்கச் சொன்னார்.
அவ்வாறு செய்யப்பட்டால், மரியன்னை கர்சியையும் சுற்றியுள்ள பகுதியையும் தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்வார் என்றும், அதே ஆண்டின் இறுதியில் யாரும் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஏராளமான அறுவடை இருக்கும் என்று பாக்லியோவுக்கு உறுதியளித்தார். கடைசியாக, பாக்லியோ தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், ஏனென்றால் மரியன்னை அவரை தனது பணிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும்;, மேலும் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு, அவர் அங்கு தனக்காக பணியாற்ற வேண்டுமெனவும் சொன்னார். பின்னர் அன்னை தோன்றியபடியே திடீரென்று மறைந்துவிட்டார்.
இந்த நிகழ்வை பாக்லியோ குருவிடம் சொன்னார். பின்பு குருவோடு இணைந்து கர்சி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாக்லியோ தலைமையில், மரியா தோன்றிய இடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அங்கே அவர்கள் முழங்காலில் நின்று செபித்தார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து நகரத்திற்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் சிறிது தூரம் சென்றதுமே, மழை பெய்து கூட்டம் முழுவதையும் நனைத்தது. மூன்று நாட்கள் நல்ல மழை பெய்தது. அறுவடை முடிந்து, அனைவரின் களஞ்சியமும் நிரம்பி வழிந்தது. விரைவில் நன்றியுள்ள மக்கள் புனித மரியாவுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினர்.
திருவிழா நாள்: சனவரி 5
செபம்: நிறைவின் அன்னையே! வறட்சியில் பிடியில் சிக்கி நாங்கள் வேதனைப்படும் போதெல்லாம் நீரே எங்கள் வாழ்வின் களஞ்சியங்கள் நிரம்பிட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.